சிவலிங்கபுரம் என்றொரு கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த ஜெயவேலுவும் (பிரபு), கீர்த்திவாசனும் (தென்னவன்) உயிர் நண்பர்கள். ஆனால் இரு வரது குடும்பங்களுக்கும் இடை யில் உருவான குடும்பப் பகை, ஊர்ப்பகையாக மாறிவிடுகிறது. இதனால் ஐந்து தலைமுறைகளாக பிளவுபட்டுக் கிடக்கிறது ஊர். கோஷ்டி பிரிந்து கையில் வீச்சரிவாளுடன் அலையும் ஊர்க் காரர்களுக்குத் தெரியாமல் சென்னையில் குடியேறி வசிக்கி றார்கள் நண்பர்கள்.
பகைக்கு முடிவுகட்டத் தனது மகன் சிவாவை (ஆரி), நண்பன் கீர்த்திவாசனின் மகள் அபிராமிக்கு (மாயா) திருமணம் செய்துவைத்துவிட நினைக்கிறார் ஜெயவேலு. கீர்த்திவாசன் தம்பதிக் கும் அதில்தான் விருப்பம். தங்கள் வாரிசுகள் ஊரைவிட்டு ஓடிப்போனால் அதைவிட தங் களுக்கு பெரிய சந்தோஷம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் சிவாவும் அபிராமியும் சண்டைக் கோழிகள். இந்தநேரத் தில் சிவலிங்கபுரம் ஊர்க்காரர்க ளின் கண்களில் இந்தக் குடும்பங்கள் மாட்டிவிடுகின்றன. சிவலிங்கபுரத்துக்கு இழுத்துச் செல்லப்படும் ஜெயவேலுவுக்கும் கீர்த்திவாசனுக்கும் என்ன நடந்தது, ஊர்ப்பகைக்கு அவர்களால் முடிவுகட்ட முடிந்ததா, அவர்களது வாரிசுகள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
காதல், மண்வாசனை, குடும்பம் ஆகியவற்றின் பின்னணியில் நகைச் சுவை அம்சத்தைக் கலந்து பொழுது போக்குப் படம் தர நினைத்திருக்கும் இயக்குநர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டு குடும்பங் களுக்கு இடையில் உருக்கொள் ளும் பகைக்கான மூல காரணம் அபத்தமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் காட்சியில் திரை யரங்கு சிரிப்பலையில் அதிர்கிறது.
ஆரி - மாயா, பால சரவணன் - மிஷா ஆகிய இரண்டு ஜோடிகளின் இளமைத் துள்ளல் மிக்க காதல் கலாட்டாவும் கிராமத்து முரட்டு மனிதர்களின் நடவடிக்கைகளும் திரைக்கதையின் கலகலப்பான பகுதிகள்.
அதேபோல சிலைக் கடத்தல் பேர்வழியாக வரும் மன்சூர் அலிகான், மாஸ்டர் மணி என்ற ஆள் கடத்தல் பேர்வழியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வந்துபோகும் காட்சிகளும் நகைச்சுவை விருந்து.
பின்னோக்கிப் பயணிக்கும் திரைக்கதையில் சம்பவங்கள் சரியான வரிசையில் பொருந்தியி ருந்தாலும் முதல் பாதியில் நீளத் தைக் குறைத்திருந்தால் இழுவை யான உணர்வைக் களைந்திருக் கலாம்.
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், துணைக் கதா பாத்திரங்களில் வந்து போகிற வர்கள், குறிப்பாக, வீச்சரிவாளை வைத்துக்கொண்டு தலைவிரி கோலத்துடன் முகத்தில் கொலை வெறி காட்டியபடி கலக்கி யிருக்கும் அந்த இரண்டு ஊர்ப் பாட்டிகளின் பங்களிப்பு என இயக்குநர் பெரிய நட்சத்திரப் பட்டாளத்திடம் தேவையான நடிப்பை வாங்கியிருக்கிறார்.
சத்யாவின் இசையில் பாடல்க ளும், பின்னணி இசையும் ரசனை. சிவலிங்கபுரம் கிராமத்துக் காட்சிகள், சென்னை மாநகரின் பிரம்மாண்டம் இரண்டையும் வெவ்வேறு பரிமாணங்களில் கதைக்கு ஏற்ப வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்.
கிராமத்து மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா, இதுபோன்ற பெற்றோர்களைக் காண முடியுமா என்று கேட்பவர்களுக்குப் படத்தின் நகைச்சுவைச் சரம் பிடிக்காமலும் போய்விடலாம். மற்றவர்கள் குடும்பப் பின்னணியில் அமைந்த நகைச்சுவைப் படமாக இதை ரசிக்கலாம்.