ஹாலிவுட் ரசிகர்களை எப்போதும் திக்குமுக்காடச் செய்பவை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் படங்கள். ‘த பிஎஃப்ஜி’ என்ற தனது அடுத்த லைவ் ஆக்ஷன் படத்துடன் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார் அவர்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வழக்கமாகத் தரும் பிரமிப்பு சற்றும் குறையாமல் வெளிப்படும் படம் என்பதற்குச் சான்றாக வந்திருக்கிறது இதன் ட்ரைலர். ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ படத்தில் உளவாளியாக வந்து தனது சிறந்த நடிப்புக்கு ஆஸ்கரின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற மார்க் ரைலான்ஸ் பிரம்மாண்ட மனித உருவில் வருகிறார்.
இந்த வேடத்தை மார்க் ஏற்றுக்கொண்டது அவர் தனக்களித்திருக்கும் பெரிய கவுரவம் என இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கூறியிருக்கிறார் என்றால் மார்க் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரியத்தையும் உணரலாம்.
அவருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சோஃபி என்னும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் உணர்வுபூர்வ பிணைப்பே சுவாரசியமான இப்படத்தின் மைய இழை. சோஃபி வேடத்துக்கான நீண்ட தேடலுக்குப் பின்னர் அந்த வேடத்துக்காகக் கிடைத்தவரே 10 வயதான ரூபி பேர்ன்ஹில் என்னும் ஆங்கிலச் சிறுமி.
ரோல்டு டால் என்னும் ஆங்கில எழுத்தாளர் ‘த பிஎஃப்ஜி’ என்னும் பெயரில் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதியுள்ளார் மெல்லிஸா மேத்திஸன். இந்தக் கதை ஏற்கெனவே தொலைக்காட்சிப் படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது; முழு நீளத் திரைப்படமாக உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வால் டிஸ்னி நிறுவத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
வால் டிஸ்னி நிறுவனம் தான் படத்தை வெளியிடுகிறது. 2016-ம் ஆண்டின் கான் பட விழாவில் முதல் திரை வெளியீட்டைக் காண இருக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் ஜூலை முதல் தேதி அன்று வெளியிடப்படுகிறது.
</p>