கரோனா இரண்டாவது அலை ஊரடங்கின் போது படமாக்கப்பட்ட படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான 'மன்மதலீலை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்துக் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். அவரது ஒளிப்பதிவில், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘O2’. நிலச்சரிவில் புதைந்துவிட்ட பேருந்துக்குள் உயிர்வளிக்காகப் போராடும் 8 பயணிகளின் தவிப்பை இவர் தத்ரூபமாக படமாக்கியவிதம் குறித்து விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இவரிடம்‘O2’படத்துக்குப் பணியாற்றிய அனுபவம் பற்றிக் கேட்ட போது, “இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் என்னுடைய நண்பர். அவர் இந்தக் கதையை என்னிடம் 2019இல் சொன்ன போதே நான் அதனோடு பயணிக்க தொடங்கி விட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும், அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதை சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். பிறகு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், எனது பணியைத் தீவிரப்படுத்த தொடங்கினேன்.
பேருந்து, மண் சரிவு ஆகிய காட்சிகளுக்கு ‘செட் டிசைன்’செய்து, பின்னர் செட் அமைத்து படமாக்கினோம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரியக் கூடாது, பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களையும் தொற்றிக்கொள்ள வேண்டும், இந்த இரண்டையும் சரியாக செய்துவிட்டால் படம் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும் என்பதில் உறுதியாக இருந்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 வருடத்துக்கு முன்பே நான் பணியாற்ற தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காட்சிகளையும் இப்படித்தான் படமாக்க வேண்டும் என்று ‘ப்ரி விஷுவலைஸ்’செய்துகொண்டு படமாக்கினேன். குறிப்பாக நிலச்சரிவில் மேலும் மேலும் புதைந்துகொண்டிருக்கும் ஒரு பேருந்துக்குள் ஒளியமைப்பு எப்படி மாறிகொண்டே செல்லும் என்பதை இறுதி செய்வதிலும் நிறைய சவால்கள் இருந்தன. இதையெல்லாம் இப்போது விமர்சகர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நயன்தாரா போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு பணியாற்றும்போது தேவையில்லாமல் அவரது நேரத்தை வீணடிக்க கூடாது. அதே சமயம், தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்துக்கொடுத்தால்தான் அவர்களுக்கும் பட்ஜெட்டைத் தாண்டிச் செல்லாது. இந்த இரண்டு சவாலையும் சமாளிக்க முடிந்ததற்குக் காரணம் 2 வருடங்களுக்கு முன்பே படிப்படியாகத் திட்டமிடத் தொடங்கியதுதான்.
விபத்தில் சிக்கிய பிறகு பேருந்துக்குள் நடக்கும் காட்சிகளை கேமராவை தோளில் வைத்து தான் படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அதுதான் தேவைப்பட்டது. அதேபோல் நிலச்சரிவில் பல அடி ஆழத்தில் புதைந்த பேருந்தில் சிக்கிக்கொண்ட கதாபாத்திரங்களின் உயிர் பிழைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருக்கும் பதற்றம், மரண பயம், சக மனிதர் மீதான அத்துமீறல் போன்ற உணர்வுகளை மிகச் சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொண்ட ஒரு கதாபாத்திரமாகவே என்னை எண்ணிக்கொண்டேன். அந்த மனநிலைக்கு ஏற்ற கோணங்களையும் கேமரா நகர்வுகளையும் முடிவு செய்து படம்பிடித்தேன்.
படம் முதல் பிரதி தயாரானதும் அதைப் பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார், “படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் எங்கள் நிறுவனத்துக்குப் பெருமை சேர்க்கும்’ என்று சொன்னது தான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு. அதேபோல், படப்பிடிப்பின்போது இந்த கதைக் களத்தையும் அதை படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிக சரியாக புரிந்துக்கொண்டு நயன்தாரா ஒத்துழைப்பது கொடுத்ததையும் மறக்க முடியாது. ஒவ்வொரு காட்சி நடித்து முடித்ததும் என்னிடம் ‘ஒகேவா தமிழ்.? இன்னொரு டேக் போகலாமா? தயாங்காமல் தேவையெனில் எடுத்துவிடுங்கள்.’ எனக் கேட்டுகொண்டே இருந்ததை என்னால் மறக்க முடியாது” என்கிறார் தமிழ் அழகன்