நாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிக்கும் நடிகைகள் திரையுலகில் மிகவும் குறைவு. அந்த வகையில் படத்தில் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துவருவபவர் திவ்யா.
முதல் முறையாக விஷாலுக்கு நாயகியாக ‘மருது' வாய்ப்பு…
பாக்கியலட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முழுக்க கிராமத்துப் பெண் வேடம். ராஜபாளையம் வட்டார மொழியில் பேசி நடித்தேன். குணாதிசயத்தில் ஆண் போன்ற வேடம். இயக்குநர் முத்தையா ரொம்பவும் உதவி பண்ணினார். காதலி, மனைவி என இரண்டு பாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று வருந்தினேன்.
‘அவன் இவன்' படத்துக்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என வருந்தினீர்களாமே?
ஆமாம். மாறுகண் உடையவராக இதற்கு முன் யாரும் நடித்ததில்லை. நவரசம் காட்டும் காட்சியில் அருமையாக மாறுகண்ணுடன் நடிப்பில் அவர் அசத்தியிருப்பார். அவருக்கு விருது இல்லை என்றவுடன் மிகவும் வருத்தப்பட்டேன். ‘மருது' படப்பிடிப்பில் விஷாலைப் பார்த்தவுடனே நான் இதைத் தெரிவித்தேன்.
முதல் முறையாகப் பேய்ப் படத்தில் (‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’) நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?
ஒரு பெரிய வீட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியும் இயக்குநர் வந்து சொல்லிக் கொடுப்பார். அதனால் எப்போதுமே பேய்ப் படம் என்ற எண்ணமே இருக்கும். திடீரென்று அந்த வீட்டின் ஜன்னலில் பார்த்தால் வெள்ளையா யாரோ போற மாதிரி இருக்கும். சில சமயங்களில் நானே பயந்திருக்கிறேன்.
நீண்ட நாட்களாக 'காஷ்மோரா' படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறதே. அப்படத்தில் நீங்கள்தான் ராணியா?
அதெல்லாம் சொல்ல மாட்டேன். நயன்தாராவும் நானும் கதாநாயகிகள். யார் என்ன வேடம் என்பது சஸ்பென்ஸ். இதுவரைக்கும் இரண்டு பேரும் இணைந்து நடிக்கும் காட்சி வரவில்லை. கார்த்தி சாரோட நடித்தது அருமையாக இருந்தது. ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்துகொண்டே ஜாலியாக இருப்பார். காட்சி என்று வரும்போது ஈஸியாக நடித்துவிடுவார். நான் சூர்யாவின் பெரிய ரசிகை. 'சில்லுன்னு ஒரு காதல்' தெலுங்கில் பார்த்தேன். அப்போதிலிருந்தே அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன்.
நீங்கள் மிகவும் எதிர்பார்த்த ‘பெங்களூர் நாட்கள்' போதிய வரவேற்பு பெறவில்லையே..
அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. நிறைய பேர் அதை டிவிடியில் பார்த்துவிட்டு எனக்கு போன் பண்ணினார்கள். படம் சூப்பரா இருக்கு. ஏன் சரியாகப் போகவில்லை என்று கேட்டார்கள். ஒரு படத்துக்குத் தேவையான 100% உழைப்பைக் கொடுத்துவிட்டோம். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பது எனக்கே புரியாத புதிராக இருக்கிறது.
சென்னை வெள்ள நிவாரண உதவி, ராஜபாளைய மக்களுக்கு உதவி என்று அசத்தினீர்களே?
அதுக்கு அம்மாவின் மனசுதான் காரணம். நான் கொடுக்கலாம் என்றாலும் என் குடும்பம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சென்னையில்தானே நான் இவ்வளவு பெரிய நடிகையாகியிருக்கிறேன். அந்த மக்களுக்குக் கொடுக்கும்போது சந்தோஷமாக இருந்தது. வெள்ள சமயத்தில் ராஜபாளையத்தில் 'மருது' படப்பிடிப்பில் இருக்கும்போது இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மனநிலையில்தான் இருந்தேன். இங்கு என்ன ஆனது, என்ன நடக்கிறது என்று என் மனது நினைத்துக்கொண்டே இருந்தது. ராஜபாளையத்தில் ஒரு கிராமத்தில் டாய்லெட் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். விஷால் உதவலாம் என்றார், உடனே பண்ணினேன்.
பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை அதிகரித்துவருகிறதே...
பெண்கள் பாதுகாப்பான நண்பர்களோடு இருக்க வேண்டும். அது மிக முக்கியம். இரவு நேரத்தில் தனியாகப் போகக் கூடாது. நமக்குச் சுதந்திரம் இல்லை என்று மனதில் எந்தவொரு எண்ணத்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது. பெண்களை விட அவர்களுடைய குடும்பத்துக்குத்தான் வலி அதிகம். அந்த வலியைக் கொடுக்கக் கூடாது.