நகுலனின் புதிய படம் :
நாரதன் படத்தைத் தொடர்ந்து நகுலன் புதிதாக நடிக்கும் படம் ‘செய்’. இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் கோபாலன் மனோஜ். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'சாரதி' என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்திருப்பவர். படத்தில் நகுலனுக்கு ஜோடி பாலிவுட் நடிகை ஆஞ்சல். சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் இந்தப் படத்தைத் தற்போது சென்னையில் படமாக்கிவருகிறார்கள். உதவி இயக்குநராக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் நடிகனாகப் போராடும் ஒரு இளைஞனுக்கும் இடையிலான நட்பும் காதலும்தான் கதைக்களமாம்.
நாசரின் புதிய முகம் :
நடிகர் சங்க வேலைகளுக்கு மத்தியில் நடிப்பிலும் வேகம் காட்டிவருகிறார் நாசர். அலட்சிய மனோபாவமுள்ள மக்களை ஒரு ஜனநாயகப் புரட்சிக்குத் தயார்செய்து அழைத்துச் செல்லும் புரட்சியாளர் கதாபாத்திரத்துக்காக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம் நாசர். ரிவான் என்ற அறிமுக இயக்குநர் கைவண்ணத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘திட்டிவாசல்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
சர்ச்சைக் கதையில் நந்தா :
நல்ல கதைகளுக்காகக் காத்திருந்து நடிக்கும் நந்தா இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் படம் ‘வில்லங்கம்’. இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால், அந்தத் தம்பதிக்கு விவாகரத்து வழங்கக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறதாம் இந்தப் படம். நந்தாவுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். நண்பனுக்கு நேர்ந்த உண்மைக் கதையைத் திரைக்கதையாக்கி இந்தப் படத்தை இயக்குபவர் பத்திரிகையாளராக இருந்து இயக்குநராகியிருக்கும் ரா.நா.சரவணன்.
மதகஜராஜாவுக்கு விடுதலை :
விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்காத்தில் தயாராகி, கிடப்பில் இருந்த படம் ‘மதகஜராஜா’ இந்தப் படத்துக்கு ஒருவழியாக வரும் மே 13-ம் தேதி விடுதலை கொடுக்கிறார்கள். பிச்சைக்காரன் புகழ் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை பங்களிப்பு செய்திருப்பவர் சந்தானம்.