இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: இசையமைப்பாளர் ஆண்ட்ரியா

ஆர்.சி.ஜெயந்தன்

உத்தமவில்லனுக்குப் பிறகு ஆண்ட்ரியாவைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சிம்புவின் காதலியாக அவர் நடித்திருக்கும் ‘ இது நம்ம ஆளு’ ஜூனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் படத்தின் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது என்கிறார்கள். ஆனால் ஆண்ட்ரியாவின் நடிப்பில் அவரது ரசிகர்கள் உண்மையாகவே எதிர்பார்த்துக் காத்திருப்பது ‘தரமணி’ படத்தை.

அதுவும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, ஏற்கெனவே ஆண்ட்ரியா நடித்துக்கொடுத்துவிட்ட ‘ உத்தமவில்லன் 2’ படமும் இப்போதைக்கு இல்லை என்றாகிவிட்டதாம். நந்தாவுடன் இணைந்து நடித்த ‘புதிய திருப்பங்கள்’ படமும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. அவரைப் பற்றிய எந்தச் சலனமும் இல்லாத நிலையில் ஆண்ட்ரியா இசையமைத்து, எழுதி, நடித்திருக்கும் ‘டிரிப்டர்’ என்ற மியூசிக் ஆல்பம் தற்போது யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இந்நிலையில் எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து, அதற்கு இசையைத்து தரவும் ஆண்ட்ரியா இசைந்திருக்கிறாராம்.

சமந்தாவின் ஏக்கம்

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ மற்றும் ‘24’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதற்கிடையில் தெலுங்கிலும் தனது பிடியைத் தளர்த்தவில்லை சமந்தா. அங்கே மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருக்கும் ‘பிரம்மோஸ்தவம்’, ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடித்திருக்கும் ‘ஜனதா கரேஜ்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இதற்கிடையில் தனது நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி தேவை என ஏக்கத்துடன் ட்வீட் செய்திருக்கிறார். ‘‘இப்போது நிம்மதியாகத் தூங்குகிறேன். நான் நடித்து வந்த சில படங்களின் வேலைகள் முடிந்து அவற்றில் சில வெளிவந்து விட்டன! கடந்த எட்டு மாதங்கள் கடுமையாக இருந்தன. அதைத் தாண்டி வந்திருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி! நான் சிறந்த மகளாகவோ, தோழியாகவோ இருந்ததில்லை. இனி சற்று நிதானத்துடன் பயணிக்க முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில காலங்களுக்கு இனி புதிய படங்களை ஒப்புக்கொள்ளப்போவதில்லை. எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி பாராட்டுவார்!

‘பசங்க’ படத்தில் பள்ளிக்கூடச் சிறுவனாகவும் ‘கோலிசோடா’ படத்தில் சற்று வளர்ந்த பையனாகவும் நடித்த ஸ்ரீராம் இப்போது வளர்ந்து வாலிபனாகிவிட்டார். இதற்குமேலும் அவரை விட்டுவைப்பார்களா? ‘பைசா’ என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் தான் கதாநாயகனாவது மட்டுமல்ல; படத்தின் இயக்குநரும்தான் என்கிறார் ஸ்ரீராம். “இப்போ என்னோட கவனம், கனவு எல்லாம் ‘பைசா’வையே சுத்தியே இருக்கு. அப்படியொரு கதை. இந்தப் படத்தோட இயக்குநர் மஜீத் சார். அவர் இதுக்கு முன்னாடி ‘தமிழன்’ என்ற படத்தை இயக்கியவர். விஜய் அண்ணா நடிச்ச சமூகக் கருத்துள்ள படம் அது. மஜீத் சார் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாவும் உறுதியாவும் இருப்பார். அவர் இயக்கத்துல நடித்ததை மறக்க முடியாது.” என்றவரிடம் படத்தின் கதையைப் பற்றிக் கேட்டதும் அவரது கண்கள் கலங்குகின்றன.

“இது சென்னையில இருக்கும் குப்பை மேடுகள் அங்கே வாழும் மக்கள், இவங்கள்ல ஒருத்தனா ஆகிற ஒரு குப்பைப் பொறுக்கும் இளைஞன் பற்றிய கதை. இந்தப் படத்துக்காக சென்னையில பல குப்பை மேடுகளில் அலைஞ்சு திரிஞ்து நடிச்சேன். படக்குழுவும் குப்பை, தூசு, நாற்றம் பத்தியெல்லாம் கவலைப்படாம வேலை செஞ்சாங்க” என்று நெகிழும் ஸ்ரீராம், “ ரசிகர்கள்கிட்ட மட்டுமில்ல, பிரதமர் நரேத்திர மோடிகிட்டயும் எங்களுக்குக் கண்டிப்பா பாராட்டு கிடைக்கும்” என்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீராமுக்கு ஜோடியாக ஆரா என்னும் புதுமுகத்தைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறாராம் இயக்குநர் மஜித்.

மூன்று கதாநாயகிகள்

‘வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தை மூன்றாவது முறையாக இயக்குகிறார் சிவா. சத்யஜோதி படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மீண்டும் அனிருத்தே இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தப் படத்துக்கு கதாநாயகியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர். ஏற்கெனவே அனுஷ்கா, தமன்னா ஆகியோர் பட்டியலில் இருந்த நிலையில் தற்போது அதில் எமி ஜாக்சனும் இணைந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

பத்திரிகையாளர் பாபி சிம்ஹா

இன்று வெளியாகும் ‘கோ 2’ படத்தில், ‘முதல்வன்’ படத்தை நினைவூட்டுவதுபோன்று எதற்கும் யாருக்கும் அஞ்சாத ஓர் இளம் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. திருமணத்துக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படம் தனக்குப் பெரிய வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கும் அவருக்கு இந்தப் படத்தில் ஜோடி நிக்கி கல்ராணி.

இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், சக்ரி டோலேட்டி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி அனுபவம்பெற்ற, சரத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் பிரபல நவீனக் கவிஞர், பத்தி எழுத்தாளர் பாக்கியம் சங்கர் வசன கர்த்தாவாகவும் அறிமுகமாகிறார்கள். இவையும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.

அம்மாவுக்குச் சிலை

சென்னை அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரருக்குக் கோவில் கட்டியிருக்கும் நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அந்தக் கோவிலின் எதிரிலேயே தன் அம்மா கண்மணிக்கு ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார். அதில் தன் அம்மாவின் முழு உருவ வெள்ளை மார்பிள் சிலையைக் கருவறையில் நிறுவ இருக்கிறார். “என்னைக் கருவில் சுமந்து காப்பாற்றிய என் தாய்க்கு அவர் வாழும் காலத்திலேயே கோயில் கருவறையில் சிலை வைத்து தாயின் பெருமையை உலகுக்குச் சொல்ல விரும்பியே இதைச் செய்கிறேன்” என்கிறார் லாரன்ஸ்.

SCROLL FOR NEXT