சதீஷ் ஜி குமார் 
இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: கும்ப மேளாவில் படமான தமிழ் சினிமா!

செய்திப்பிரிவு

கடந்த 2017-ல் வெளியான 'பீச்சாங்கை', ‘என்னங்க சார் உங்க சட்டம்?’ படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.கார்த்திக். அவருடைய நடிப்பில் ‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற படத்தை, எழுதி இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் சதீஷ் ஜி குமார். படம் முழுவதையும் 2019-ல் நடந்த பூர்ண கும்ப மேளாவில் படமாக்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

இந்தப் படம் உருவான கதையைக் கூறுங்கள்..

நானொரு ‘பயோ டெக்’ பட்டதாரி. இளங்கலைப் படிப்பை முடித்ததும் லண்டனில் ‘புற்றுநோயியல்’ முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தேன். சினிமா மீதிருந்த ஆர்வத்தால், நானே கேமரா வாங்கி, அறிமுக நடிகர்களைக் கொண்டு ‘நெவர் எண்டிங் லவ் ஸ்டோரி’ என்கிற சுயாதீனத் திரைப்படத்தை ஆங்கில மொழியில் உருவாக்கி வெளியிட்டேன். அந்தப் படத்தைப் பார்த்த, ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா சார் எனக்கு நண்பரானார். அவர்தான் கதை, வசனகர்த்தாவும் தயாரிப்பாளருமான ஆர்.பி. பாலாவிடம் என்னை அனுப்பினார்.

அவரிடம் ‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற கதையைச் சொன்னேன். கதையைக் கேட்ட அவர், “இந்தக் கதையை இன்னும் இரண்டு நாட்களில் காசியில் தொடங்க இருக்கும் பூர்ண கும்பமேளாவின் பின்னணியில் படம் பிடித்தால் புதிய முயற்சியாக இருக்கும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்ப மேளா தவறவிடக் கூடாது’ என்றார். அவரது யோசனை, இந்தக் கதைக்கு வேறொரு பிரம்மாண்டப் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று புரிந்ததும் உடனே ‘சரி’ என ஒப்புக்கொண்டேன். காட்சிகளும் வசனங்களும் மனசின் உள் இருந்தன. அதனால், முழுமையான திரைக்கதை இல்லாமலேயே 15 பேர் கொண்ட குழுவுடன் காசியில் போய் இறங்கி, கும்பமேளா நடந்த 50 நாட்களும் அங்கு வந்து குவிந்த பெருங் கூட்டத்துக்குள் படம் பிடித்துத் திரும்பினோம்.

என்ன கதை, ஏதற்காக இந்தத் தலைப்பு?

மென்பொருள் துறையில் பணிபுரிந்து வரும் நாயகன் புனித நீராடுவதற்காகப் பெற்றோர், 20 வயதுத் தங்கை ஆகியோருடன் பூர்ண கும்பமேளாவுக்குச் செல்கிறார். கும்பமேளா கூட்டத்தில் தங்கை தொலைந்துவிடுகிறார். ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் ஒன்றுகூடும் அந்தப் பெரிய கூட்டத்துக்குள் தங்கையைத் தேடி அலைந்து மீட்டாரா, இல்லையா என்பதுதான் கதை. தேடலின் இறுதியில் நாயகன் தன்னில் கடவுளை உணர்வதுதான் கதை. முழுவதும் சஸ்பென்ஸ் த்ரில்லராக இதை இயக்கியிருக்கிறேன்.

சதீஷ் ஜி குமார்

வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள், படப்பிடிப்பில் மறக்க முடியாத அனுபவம்?

படத்தில் கதாநாயகி கிடையாது. நாயகனின் தங்கையாக ரேஷ்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுமன், சாயாஜி ஷிண்டே, கஜ ராஜா, ‘பூ’ ராமு உள்ளிட்ட ஐந்து பிரபலமான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். கும்ப மேளாவில் நிர்வாண சந்நியாசிகள் ஒரு பக்கம் அதிகமாக இருந்தார்கள். அவர்களை முடிந்தவரை தவிர்த்துவிட்டுமக்கள் திரள் அதிகமிருந்த இடங்களில் படமாக்கியிருக்கிறேன். முறைப்படி அரசு அனுமதி பெற்று ‘கேண்டிட்’ ஆகப் படம் பிடித்தோம். ஒரு அகோரி சாமியார் நான் படமாக்கிகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக என் அருகில் வந்து, தன்னுடைய மூங்கில் தண்டத்தால் என்னை அடி அடி என்று அடித்தார். வேறு வழியில்லாமல் பொறுத்து கொண்டேன். இப்படிப் பல அனுபவங்களைச் சொல்லலாம்.

SCROLL FOR NEXT