இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை | குழந்தைகள் கடத்தலின் பின்னாலிருக்கும் பெற்றோர்கள்!

திரை பாரதி

குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் சில திரைப்படங்கள், கவனிக்கத்தக்க முயற்சியாக இருக்கின்றன. ஆனால், படத்தில் தெரிந்த முகங்களோ, குறிப்பிடத்தகுந்த தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லாமல் போய்விடுவதால் அறிமுகக் கலைஞர்களின் உழைப்பும் படைப்பாக்கமும் திரையரங்குகளால் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றன. கடந்த வாரம் வெகுசில திரையரங்குகளில் மட்டுமே வெளியான ‘துணிகரம்’ படத்தில் பல ‘மேக்கிங்’ குறைகள் இருக்கின்றன. ஆனால், அப்படம் கையாண்டுள்ள ‘குழந்தைகள் கடத்தல்’ என்கிற உள்ளடக்கம், இந்தியாவில் புரையோடிப்போன முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று. குறிப்பாக இப்பிரச்சினையில், ‘பெற்றோரின் பொறுப்பின்மை, குழந்தைகள் கடத்தலுக்கு முதன்மைக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.

நாட்டில் 8 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது என இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கை சொல்கிறது. ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. அவற்றில் 11 ஆயிரம் குழந்தைகளின் நிலை, கண்டறிப்பட முடியாத (untraced) நிலையில் இருப்பதாகவும் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதை அடிப்படையாக வைத்து அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களில் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன் தவிர, வினோத் லோகிதாசன், டென்னிஸ், மணி எனப் பலரும் புதுமுகங்கள்.

புறநகரில் குறுந்தொழில் அதிபராக இருக்கும் மணி, அவரது மனைவி சரண்யா, அவர்களுடைய 7 வயது மகள் கொண்ட குடும்பத்தைக் கண்காணிக்கிறது 5 பேர் கொண்ட கடத்தல் கும்பல். பெற்றோரில் கணவன், மனைவி இருவரில் யாரிடம் அலட்சியம் அதிகமாக இருக்கிறது என்பதை அவர்கள் கண்காணிக்கிறார்கள். அது இந்தப் பெற்றோரிடம் நிறையவே இருக்கிறது என்பது தெரிந்ததும் அந்தக் குடும்பத்தைத் தேர்வுசெய்கிறார்கள். கணவர், மனைவி மகளுடன் போதிய நேரம் செலவிட முடியாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.

தினசரி பள்ளி முடிந்ததும் மகளை வீட்டுக்கு அழைத்து வருகிறார் சரண்யா. வழியில் இருக்கும் பிட்சா கடைக்குத் தினசரி அழைத்துச் சென்று ‘ஜங்க்’ உணவுகளை மகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார். இதைக் கவனிக்கும் கடத்தல் கும்பல், அந்தக் குழந்தையைக் கடத்த, கூட்டம் இல்லாத அந்த உணவகம்தான் சரியான இடம் என்று முடிவுசெய்கிறார்கள். எதிர்பாராத விதமாக அவர்கள் கடத்த திட்டமிட்ட நாளில் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருகிறார் மணி. வழியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்குப் பெட்ரோல் போட்ட பின் மகளைத் தனியே காரிலேயே உட்கார வைத்துவிட்டு ‘டெபீட் கார்ட்’ மூலம் பணம் செலுத்த அந்த பங்க்கின் அலுவலத்துக்கு உள்ளே செல்லும்போதே நம் மனம் பதைபதைத்துப் போகிறது.

கடத்தப்பட்ட தன்னுடைய மகளை மீட்க 25 லட்சத்துடன் செல்லும் மணியைத் தாக்கிப் பணத்தைப் பறித்துகொண்டு, குழந்தையைக் கொடுக்காமல் தூக்கிச்சென்றுவிடுகிறது கடத்தல் கும்பல்.

இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள், வீட்டு வேலைக்காக, குழந்தைத் தொழிலாளர்களாக விற்கப்பட, பாலியல் தொழிலில் தள்ள எனப் பல காரணங்களுக்காகக் கடத்தப்படுவதாகவும் ‘கடத்துவதோடு நம்ம வேல முடிஞ்சுப் போச்சு. ஒவ்வொரு குழந்தையும் எந்த மார்க்கெட்ல எவ்வளவு விலைபோகுங்கிறதெல்லாம் அந்தந்த ஃபீல்டுல இருக்கிற எக்ஸ்பர்ட் பார்த்துக்குவானுங்க. அவனுங்க எல்லாம் பெரிய கை.’ என்று கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனே தனது சகாவிடம் குழந்தைகள் கடத்தல் உலகம் ஒரு பெரும் தொழிலாக இயங்குவதைச் சொல்லும்போது பகீர் என்கிறது.

இந்தக் கதையின் இரண்டாம் பகுதி முழுவதையும் அவசரச் சிகிச்சைக்காக விரையும் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே நடப்பதுபோல் வித்தியாசமாக முயன்றிருக்கிறார்கள். குடும்ப வன்முறையில் மூர்ச்சையாகி உயிருக்குப் போராடும் மனைவியை (செம்மலர் அன்னம்) மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்கிறார் பரணி. திட்டமிட்டபடி கடத்திய குழந்தையுடன் அந்த அம்புலன்ஸை மடக்கி, அதன் வழியே தப்பிக்கப் பார்க்கும் கடத்தல் கும்பலின் முயற்சி இறுதியில் என்னவாகிறது என்பதுடன் படம் முடிகிறது.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலும் அங்கேயும் குடும்ப வன்முறை மலிந்திருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். சில நொடிகள் மட்டுமே தீவிரப்படும் முன்கோபத்தால் விளையும் குடும்ப வன்முறை, எவ்வளவு பெரிய இழப்புகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை சொன்ன விதத்தில் படத்தைப் பாராட்டலாம். ஆனால், இதில் நடித்த அறிமுக நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்திருந்தால், அவர்கள் வலிந்து நடிக்காமல் இருந்திருப்பார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதையும் ‘மேக்கிங்’கும். முதல் பகுதிக் கதையை இரண்டாம் பகுதியுடன் சரிவர இணைக்காதது, கதாபாத்திரங்களுக்கு முழுமை கொடுக்காமல் துண்டு துண்டாக விட்டுவிட்டது, அழுத்தமான, புத்திசாலித்தனமான காட்சிகள் போதிய அளவுக்கு இல்லாதது எனத் திரைக்கதையின் நுட்பம் பிடிபடாமலேயே ஒரு சீரியஸ் பிரச்சினையைக் கையாள நினைத்ததுப் படத்துக்குப் பின்னடைவாகப் போய்விட்டது. இசையும் ஒளிப்பதிவும் சுமார் என்கிற அளவில் பின்தங்கிவிடுகின்றன. என்றாலும் கையாண்ட உள்ளடக்கம், பெற்றோர்களுக்குக் கொடுக்கும் விழிப்புணர்வு ஆகிவற்றுக்காக ‘துணிகரம்’ குழுவினரின் தொடக்க முயற்சியைப் பாராட்டலாம்.

.

SCROLL FOR NEXT