இந்து டாக்கீஸ்

தபால் உறையில் இடம்பெற்றார் பி.சுசீலா!  - பாடும் வானம்பாடியின் வெற்றிக் கதை

ஆர்.சி.ஜெயந்தன்

தும்பைப் பூவிலிருந்து பெறப்பட்ட தேனுடன் கலந்த தூய பாலின் சுவைபோல், இனிமைக்குப் பெயர் பெற்றது ‘இசையரசி’ பி.சுசீலாவின் குரல். ‘முல்லை மலர் மேலே... மொய்க்கும் வண்டு போலே...’ என இரண்டு தலைமுறைகளுக்கு (1957) முன் பாடிய பாடல் என்றாலும் இரு சதாப்தங்களுக்கு முன் (1993) பாடிய ‘கண்ணுக்கு மை அழகு... கவிதைக்குப் பொய் அழகு...’ என்றாலும் கடந்த 2016 ஜனவரி மாதம் வரை 17 ஆயிரத்து 695 மென்ணுர்வுப் பாடல்களைப் பாடி ‘மெலடி குயின்’ எனப் பெயர் பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடிச் சாதனை படைத்த, தென்னிந்தியாவின் லாதா மங்கேஷ்கர் என்று ரசிகர்களால் குறிப்பிடப்படும் இவர், இந்தியில் பாடியது 112 பாடல்கள். தனிக்குரல், டூயட் குரல் என எதுவாயினும் அதில் தெய்வீகமாக ஒலிப்பதால்தானோ என்னவோ ‘தென்னக மொழிகளின் பாடும் வானம்பாடி’யாகப் புகழப்படுகிறார்.

தற்போது, தன்னுடைய 86 -ம் அகவையில் சென்னையில் வாழ்ந்துவரும் பி.சுசீலா, கடந்த 69 ஆண்டுகளாகத் திரையிசைக்குச் செய்திருக்கும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக, இந்த ஆண்டு, உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி இந்திய அஞ்சல் துறை, பி.சுசீலாவின் ஒளிப்படமும் இலட்சினையும் இடம்பெற்றுள்ள ‘சிறப்பு அஞ்சல் உறை’ஒன்றை விசாகப்பட்டினத்தில் வெளியிட்டது. இதே அஞ்சல் உறையை நேற்று சென்னையில் அவருடைய இல்லத்தில் வெளியிட்டனர்.

தனிப்பெரும் கின்னஸ் சாதனை

முகுந்தராவ் - சேசாவதாரம் தம்பதியின் மகளாக, ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி பிறந்தவர் பி.சுசீலா. இளைமையிலேயே கர்நாடக சங்கீதம் கற்று 12 வயதில் மேடை அரங்கேற்றம் செய்தவர், பின்னர் பள்ளிப் படிப்பை முடித்ததும் விஜயநகரம் இசைக் கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்தவர். 18 வயது நிறைந்தபோது ‘இளநிலை நிலையக் கலைஞர்’ தேர்வில் வெற்றிபெற்று தெலுங்குக் கீர்த்தனைகள் பாடுவதில் பெயர் பெற்றார். பின்னர், வானொலி நாடகங்களுக்கும் பாடல்கள் பாடினார். அந்நாளில் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசை அமைத்துவந்த புதிய படத்துக்கு புதிய பாடகர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்குமாறு விசாகப்பட்டினம் வானொலி நிலையத்தாரிடம் கேட்டார். அவர்கள் ஐந்து பாடகர்களை அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர்தான் பி.சுசீலா.

பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில், ஏ.நாகேஸ்வர ராவ், ஜி.வரலஷ்மி, எம்.என்.நம்பியார் நடித்துத் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான ’பெற்ற தாய்’ என்கிற படத்தில் ‘ஏதுக்கு..? அழைத்தாய் ஏதுக்கு..?’ என்கிற முதல் பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடித் திரையுலகில் தன்னுடைய திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார். எம்.என்.நம்பியாரும் டி.டி.வசந்தாவும் காதலர்களாக இந்த டூயட் பாடலில் நடித்திருந்தார்கள். இதன் பிறகு சுசீலாவின் பயணம் இடைவெளி ஏதுமின்றிக் கடந்த 67 ஆண்டுகளாகத் தொடர்ந்து கின்னஸ் சாதனையாக உயர்ந்தது. ஐந்து முறை தேசிய விருது, பத்மபூஷன் என உயரிய விருதுகள் அவரை வந்தடைந்து பெருமை பெற்ற நிலையில் தற்போது இந்திய அஞ்சல் துறையும் அவரைக் கொண்டாடியிருக்கிறது.

SCROLL FOR NEXT