இந்து டாக்கீஸ்

சர்ச்சை: இளையராஜாவின் வாதம் சரியா?

அரவிந்தன்

பாடலுக்கு ஒரு விருது, பின்னணி இசைக்கு ஒரு விருது என்று திரையிசையை இரண்டாகப் பிரித்து விருது கொடுப்பதை இசையமைப்பாளர் இளையராஜா ஆட்சேபித்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் சேர்ந்ததுதான் திரையிசை என்றும் அதை முழுமையாகத்தான் அணுக வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை இந்த அடிப்படையில் அவர் மறுத்திருக்கிறார்.

இது குறித்துத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். ‘பழசிராஜா’ படத்துக்காகத் தனக்குப் பின்னணி இசைக்கான விருது அளிக்கப்பட்டபோதும் அவர் இதையே சொல்லியிருந்தார்.

திரையுலகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர் இளையராஜா என்பதில் சந்தேகம் இல்லை. பாடல்கள், பின்னணி இசை இரண்டையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும்போது இசையமைப்பாளரின் பன்முகத் திறனும் அவரது முழுமையான இசை ஆளுமையும் வெளிப்படும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இரண்டையும் தனித்தனியாக மதிப்பிடுவது ஒருவருடைய பெருமையைக் குறைப்பதாக அமையும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.

இரண்டும் ஒரே கலை நோக்கின் மாறுபட்ட வெளிப்பாடுகள் என்றாலும் பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் தனித்தனியே அணுகக்கூடிய வகையிலேயே இருக்கின்றன. இயக்குநர்கள் இவை இரண்டையும் பார்க்கும் விதத்திலும் இசையமைப்பாளர்கள் இவற்றை அணுகுவதிலும் இவை வெளிப்படும் விதங்களிலும் இருக்கும் வித்தியாசங்கள்தான் இந்தப் பிரிவுக்கு அடிப்படை.

பல படங்களில் பின்னணி இசை, பாடல்கள் இரண்டும் ஒரே சீரான தரத்தில் அமைவதில்லை. அற்புதமான பாடல்கள் கொண்ட படங்கள் பலவற்றில் பின்னணி இசை மிகவும் சுமாராக அமைந்துவிடுகிறது. பின்னணி இசை அபாரமாக உள்ள சில படங்களில் பாடல்கள் அவ்வளவாகச் சோபிக்காமல்போவதும் உண்டு. எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இது நேர்கிறது.

இந்நிலையில் இரண்டையும் சேர்த்துப் பார்ப்பதன் மூலம், சிறப்பாக அமைந்த ஓர் அம்சத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமை கிடைக்காமல் போகலாம். இதைத் தவிர்க்க இரண்டையும் பிரித்துப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்கும்.

பாடல்களின் இடம்

உலகத் திரை அரங்கில் பாடல்கள் திரைப்படத்தின் இன்றியமையாத அம்சமாக இல்லை. பின்னணி இசை அவ்வாறு இருக்கிறது. இதன் காரணமாகப் பாடல்களைச் சற்றே குறைத்து எடைபோடுவது இந்தியப் பின்னணியில் பெரும் பிழையாகவே அமையும். இந்தியத் திரையிசையைப் பொறுத்தவரையிலும் பாடல்கள் திரைப்படம் என்னும் கலையின் தவிர்க்கவியலா அம்சமாகிவிட்டன.

இதற்கான பண்பாட்டு, வரலாற்று, சமூகக் காரணங்கள் பல தளங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இசை வெளி பரந்து விரிந்தது. செவ்வியல், பக்தி, நாட்டார் இசை எனப் பன்முகத்தன்மை கொண்டது. இசையும் பாடல்களும் இங்கே இரண்டறக் கலந்தவை. இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்றாலே பாடல்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம்.

இந்தியப் பொது மனத்தில் பாடல்கள் முக்கியமான இடம்பெற்றுள்ளதாலும் பாடல்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுவதாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், வஸந்த், செல்வராகவன், கௌதம் மேனன் போன்ற இயக்குநர்கள் சிலர் திரைப்படத்தில் பாடல்களின் இடத்தை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தங்கள் படங்களின் வலுவான அம்சங்களில் ஒன்றாக அமைத்துக்கொள்கிறார்கள். பாடல்களைத் தவிர்த்துவிட்டு இவர்களது படங்களை யோசிப்பதுகூடக் கடினமாகிவிடும் அளவுக்கு அவை வலுவாக இடம்பெற்றுவிடுகின்றன.

பின்னணி இசையின் இடம்

இந்தியத் திரைப்படங்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பே பாடத் தொடங்கிவிட்டன. பேசும்படங்கள் பெருகிவந்த கட்டத்திலும் வசனங்களுக்கு இணையாக, சில சமயம் அவற்றைவிடவும் அதிகமாக, பாடல்கள் இடம்பெற்றன. காலப்போக்கில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. 20, 30 என்ற எண்ணிக்கை மெல்லத் தேய்ந்து 5, 6 என்று நிலைபெற்றது. அண்மைக்காலம்வரை நீடித்த இந்தப் போக்கு இப்போது 2, 3 என்று குறைந்துவிட்டது. சில சமயம் பாடல்களே இல்லாமல் படங்கள் வருகின்றன.

தன் திரை மொழியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர்கள் பாடல்களைக் கூடியவரையிலும் தவிர்க்கவே பார்க்கிறார்கள். சத்யஜித் ராய் இதற்கு உதாரணம். ஆனால், பின்னணி இசை இல்லாமல் படங்கள் வருவதில்லை.

காட்சிகளுக்கு உறுதுணையாக வரும் பின்னணி இசை கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் உடன் பயணிக்க முடியும். காட்சிகளின் பொருளையும் ஆழத்தையும் கூட்ட முடியும். பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்த்திய கலைஞர்களில் இளையராஜாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

பாடல்களைப் போலவே பின்னணி இசையும் செயற்கையானதுதான் என்றும் வாதிடலாம். காட்சிகளுக்கேற்ற இயல்பான ஒலிகளை மட்டுமே வைத்துப் படம் எடுப்பதே யதார்த்தத்துக்கு நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. எனவே இரண்டில் எது முக்கியமானது என்னும் விவாதத்தில் இறங்குவதைவிட, இரண்டும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்பதுதான் முக்கியமானது.

பாடல்கள், பின்னணி இசை ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் திரையிசை என்று சொல்லும் இளையராஜா, இதில் ஒன்றுக்கு மட்டும் தனக்கு விருது கொடுத்தால் தான் தன் வேலையை அரைகுறையாகச் செய்திருக்கிறேன் என்று பொருள் என்கிறார். இது ஆழமாக யோசிக்க வேண்டிய கருத்து. ஒரு படத்துக்கான பாடல்களும் அதன் காட்சிகளுக்கான பின்னணி இசையும் பிரிக்க முடியாதவை என்றால் இவை இரண்டுமே படத்தை, திரைக்கதையை அதன் காட்சிகளை ஒட்டி எழுபவை என்றுபொருள்.

ஆனால், நடைமுறையில் அப்படித்தான் இருக்கிறதா? பல சமயம் பாடல்கள் தேவையற்ற திணிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய தருணங்களில் பாடல்கள் படத்தினின்று தனியே நிற்கின்றன. இதற்கு இசையமைப்பாளர் காரணம் இல்லை. இந்நிலையில் இரண்டையும் அவரது படைப்பின் இரு பரிமாணங்களாக எப்படிப் பார்க்க முடியும்?

படத்தின் பின்புலத்தோடு பார்க்கும்போது பின்னணி இசைக்குப் பாடல்களை விடவும் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், பாடல்கள் படத்தின், பின்புலத்தைத் தாண்டியும் கதைத் தருணங்களைத் தாண்டியும் முக்கியத்துவமும் உயிர்ப்பும் பெறக்கூடியவை. எனவே படத்திலிருந்து விலக்கியும் அவற்றைப் பார்க்கலாம். பின்னணி இசையை அப்படிப் பார்க்கவே முடியாது.

ஆக, இரண்டுமே தமக்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டின் உருவாக்கத்திலும் இந்தச் சாதக, பாதகங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும்.

ஆக, வெவ்வேறு பின்புலங்களும் காரணங்களும் பரிமாணங்களும் சாதக, பாதகங்களும் கொண்ட பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது, இவற்றிடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை என்று கருத இடமிருக்கிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் ஆதாரத் தன்மையோடும் காட்சிகளோடும் ஒரே விதத்தில் உறவுகொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

இப்படிப் பார்க்கும்போது அந்தப் படத்துக்கான இசையைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று சொல்வதற்கான நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது எல்லாப் படங்களுக்கும் பொருந்தாது. இதற்கு இளையராஜா உட்பட எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.

SCROLL FOR NEXT