இந்து டாக்கீஸ்

வாழ்க்கையை மாற்றும் பன்றிக் குட்டி! | சென்னையில் மெக்ஸிகன் பட விழா!

ஆர்.சி.ஜெயந்தன்

ஹாலிவுட்டுக்கு முன்பே தன்னுடைய சலனப் பட முயற்சிகளைத் தொடங்கி, 1931-ல் தன்னுடைய முதல் பேசும் படத்தை உருவாக்கிய வரலாற்றைக் கொண்டது மெக்ஸிகன் சினிமா. ஹாலிவுட்டுக்குச் சிறந்த பல இயக்குநர்களைக் கொடுத்ததும் மெக்ஸிகன் சினிமாதான். உதாரணத்துக்கு இயக்குநர் அலெக்ஸ்சாண்ரோ இன்னாரிட்டுவைக் கூறலாம். கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களைத் திரையில் பிரம்மாண்டக் காட்சிமொழியில் விரித்துக் கூறும் உத்தியை ஹாலிவுட்டில் தீவிரமாகப் பின்பற்றியவர்கள் மெக்ஸிகன் இயக்குநர்கள்.

இன்னொரு பக்கம், சாமானிய மனிதர்களையே கதாநாயகர்களாகக் கொண்ட அசலான மெக்ஸிகன் மாற்று சினிமாக்களை உருவாக்கி, ஐம்பதுகள் முதலே உலக சினிமா அரங்கில் தன் செல்வாக்கைச் செலுத்தி வந்திருக்கிறது. மெக்ஸிகன் உலக சினிமாக்கள் இடம்பெறாத சர்வதேசப் படவிழாக்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

சென்னைச் சர்வதேசப் படவிழாவிலும் தொடர்ந்து மெக்ஸிகன் உலக சினிமாக்கள் இடம்பெற்று வருகின்றன. அதே நேரம், சென்னையில் ஆண்டுதோறும் பிரத்யேக ‘மெக்ஸிகன்’ படவிழாவை, மெக்ஸிகோவின் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து, இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் ஒருங்கிணைத்து நடத்திவருகிறது. 2022-ம் ஆண்டுக்கான ‘மெக்ஸிகன் படவிழா’, இம்மாதம் (மே) 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. சென்னையின் கல்லூரிச் சாலையில் உள்ள அலையான்ஸ் பிரான்சேஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் தினமும் மாலை 6 மணிக்குத் தலா ஒரு படம் வீதம் மூன்று நாட்களுக்கும் மூன்று படங்களைத் திரையிடுகிறார்கள். 11-ம் தேதி இரண்டு படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

முதலாளியின் மரணம்!

‘பான் அமெரிக்கன் மெஷினரி இன்க்’ என்கிற படம், மே 10-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடக்க விழா நிகழ்வுக்குப் பின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக திரையிடப்படுகிறது. தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை, ஒரு நிறுவன முதலாளியுடைய மரணத்தின் வழியாகச் சித்தரிக்கிறது 2016-ல் வெளியான இத்திரைப்படம்.

பான் அமெரிக்கன் மெஷினரி இன்க் என்கிற நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை கதை தொடங்குகிறது. வாராந்திர விடுமுறை நாளுக்காக உற்சாகத்துடன் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருக்க, நிறுவனத்தின் முதலாளியான டான் அலெஜான்ட்ரோ, அலுவலக முதன்மைக் கட்டிடத்தின் பின்னால் இருக்கும் சேமிப்புக் கிடங்கை ஒட்டி இறந்து கிடக்கிறார். நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிந்ததும் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக ஊழியர்களுக்குச் சொல்லப்படுகிறது. தொழிலாளர்கள் நொறுங்கிப் போகிறார்கள். 50 வயதைக் கடந்த தொழிலாளர்களுக்கு வேறு எங்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் கதறி அழுகிறார்கள். அலுவலகம் எங்கும் தொழிலாளர் மத்தியில் குழப்பம், பயம் ஆகியவற்றுடன் முதலாளியை இழந்துவிட்ட பெருந்துக்கமும் சேர்ந்துகொள்ள, அலுவலகத்தை விட்டு வெளியேற மனமின்றி, பூட்டிக்கொண்டு தொழிலாளர்கள் உள்ளேயே இருக்க முடிவெடுக்கிறார்கள். தொழிலாளர்களின் முடிவு அவர்களுக்கு பலனளித்ததா என்பதை எதிர்பாராத சம்பவங்களுடன் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஜாக்குய்ன் டெல் பாஸோ.

உடைந்துபோன காதல்

கலாச்சார ரீதியாக மதம் கொடுக்கும் அழுத்தம், அடிப்படையான மனித உணர்வுகளுக்குக் கன்னி வெடியாக மாறிவிடுவதை ஒரு யூத இளம் பெண்ணின் ‘உடைந்துபோன’ காதல் வழியாக எடுத்துக்காட்டுகிறது 2018-ல் வெளியான ‘லியோனா’ என்கிற படம். இதை மே 11-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மெக்ஸிகன் படவிழாவில் காணலாம்.

சிரிய யூதக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான அரியேலா, மெக்ஸிகோ நகரத்தில் வாழும் வளர்ந்து வரும் ஓர் இளம் ஓவியர். பழமைவாதம் கைவிடப்படாத யூத மதத்தைப் பின்பற்றும் குடும்பத்திலிருந்து அந்தப் பழமைகளையெல்லாம் உதறியெறிய விரும்பும் ஒரு பெண்ணாக இருக்கும் அரியேலா, யூதரல்லாத கிறிஸ்தவரான இவான் என்பவர் மீது காதல் கொள்கிறாள். கலைகளின் பால் கொண்டிருக்கும் ரசனையிலிருந்து பிறந்த இந்தக் காதலை அரியேலாவின் குடும்பம் எவ்வளவு மோசமாகக் கையாண்டது, தனது குடும்பத்தின் உறவினர்களின் மதம் சார்ந்த அணுகுமுறைய அரியேலா எப்படிக் கையாண்டாள் என்பதுதான் கதை. சிறந்த யதார்த்த நாடகச் சித்தரிப்புக்காகப் பெயர்பெற்ற மெக்ஸிகன் மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவரான ஐசக் செரமின் படைப்பு இது.

ஒரு பன்றிக்குட்டி கொண்டு வரும் மகிழ்ச்சி!

பன்றி என அருவெறுத்து ஒதுக்கும் ஒரு விலங்கால், மனித வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? அந்தப் பன்றிக் குட்டி வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக மாற்றி விடுகிறது.

எஸ்மரால்டா 60 வயதைத் தொடக் காத்திருக்கும், விவசாயம் சார்ந்த சிறு நகரத்தில் தனது பண்ணையைத் தனியொரு ஆளாகக் கவனித்துகொண்டிருக்கும் பெண். தனது கணவரின் மரணம், வெகு தூரத்தில் வசிக்கும் மகன் என முதுமையில் தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் எஸ்மரால்டாவின் வாழ்க்கையில் ஒரு பன்றிக்குட்டி வரம்போல் வந்து சேர்கிறது. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் அந்தப் பன்றிக்குட்டி எவ்வாறான மகிழ்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கிறது என்பதே 11-ம் தேதி 7.35 மணிக்குத் திரையிடப்படவிருக்கும் ‘எஸ்மரால்டாவின் ட்விலைட்’ படத்தின் கதை.

ஒரு பிறந்த நாளும் மோசமான இரவும்!

மெக்ஸிகோவின் வடக்கே உள்ள ஒரு சிறிய மீன்பிடி நகரம் மாஸ் அமென்செரஸ். அங்கே வசிக்கும் மீனவர் குடும்பம் ஒன்றின் செல்ல வாரிசு 11 வயது சிறுவனான டியாகோ. இவர்கள் வீட்டருகே வசிக்கும் மரியா - ஜெசிண்டோ என்கிற தம்பதியின் ஒரே மகள் சிறுமி ஈவா. மறுநாள் அவளுக்கு பதின்மூன்றாவது பிறந்தநாள். ஈவா தனது பிறந்தநாளைப் பெற்றோருடன் எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று கனவு காணும்போது, தொடர்ச்சியான பல நிகழ்வுகள் அவளின் கனவைச் சிதைத்துப்போட சிறுவன் டியாகோ மட்டுமே அவளுக்கு வெளிச்சமாகிறான். குழந்தைகளின் உலகைக் குழந்தைகளே மீட்டெடுக்க முடியும் என்பதை 2013 வெளியான ‘அட் டான்’ திரைப்படம் கடற்கரையின் ஈரத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. மெக்ஸிகன் பட விழா குறித்த மேலதிகத் தகவல்களை 9840151956 / 8939022618 மொபைல் எண்களைத் தொடர்புகொண்டு பெறலாம்.

SCROLL FOR NEXT