# விஜய் சேனலில் ஒளிபரப்பாகிறது சீதையின் ராமன் தொடர். ஜவ்வு மிட்டாய்தான். என்றாலும் ஸெட்கள் வெகு ரம்மியம். ராமனின் கதை அனைவருக்கும் தெரியும் என்பதால் வேறொன்றைச் சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்கள். ராவணனின் முன்கதை (முக்கியமாக அவன் மனைவி மண்டோதரியின் பூர்வ கதை) கூடவே இணையாகக் காட்டப்படுவது சுவாரசியம்.
# ஆதித்யா சானலில் ஆங்கர் ஆதவன் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ மூலம் புகழ்பெற்றவர். ஆனால், தொலைக்காட்சியில் ரசிகர்கள் பேசும்போது அவர் கர்வமாகவும், எரிச்சலாகவும் பதிலளிப்பதை ஒரு பாணியாக வைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு நேயர் இது குறித்து நேரடியாகவே அவரைக் கேட்டுவிட, சங்கடப்பட்டார்.
# ‘ஷஷாங்க் ரிடெம்ஷன்’ சிறந்த ஆங்கிலப் படம். அதை மீண்டும் மீண்டும் ‘மூவிஸ் நவ்’ சானலில் ஒளிபரப்புகிறார்கள் என்றால் அதை மீண்டும் மீண்டும் பார்க்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் இந்த ஆங்கிலப் படம் வெளியானபோது அதற்கு வசூல் மிகமிகக் குறைவாகவே கிடைத்தது என்பதும் எட்டு ஆஸ்கார் விருதுப் பிரிவுகளின் இறுதிச் சுற்றில் இடம்பெற்றும் ஒன்றில் கூடத் தேர்வாகவில்லை என்பதும் வியப்புச் செய்திதான். ஒருவர் விவரிப்பது போலவே நகரும் இந்தத் திரைப்படத்தின் பாணியை ‘காக்க காக்க’வில் கெளதம் மேனன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருந்தார்.
# ‘எலிஃபென்ட் க்வின்’ என்ற நிகழ்ச்சியில் ஒரு யானை தன் அனுபவத்தைக் கூறுவதுபோல எடுத்திருந்தார்கள் (நேஷனல் ஜியாகரஃபிக்). “காடுகளின் நடுவே செல்கிறார். சிங்கங்கள் மறைந்திருந்து பார்ப்பதை உணர முடிகிறது. வேகமாக நடந்து புல்வெளிப் பகுதியை அடைந்துவிட்டோம்.
சிங்கங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இனி இங்கு அவை எங்களைத் தொடர்ந்து வந்து தாக்காது என்று நம்புகிறோம். ஆனால் அதேபோன்ற வேறொரு ஆபத்தை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். 100 அடி உயரம்கூட எழும்பக்கூடிய சூறைக் காற்று”. விலங்குகள் சந்திக்கும் பலவித சோதனைகளைத் தெளிவாகவே இப்படி விளக்குகிறார்கள்.