தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பி.யு.சின்னப்பாவின் 106ஆவது பிறந்த தினம் இன்று. அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாக 1906-ல் பிறந்தார். அவரது தந்தையும் ஒரு நாடக நடிகர். அதனால் சிறு பிராயத்திலேயே சின்னப்பாவும் மேடை ஏறினார். சிறுவன் சின்னப்பா ஒரு நாடகத்தில் திருடனாக நடித்தார். அது அவருக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் பல நாடக வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவதையும் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார்.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கம்பனியில் சேர்ந்து நாடகங்கள் நடித்தார். பிறகு மதுரையைச் சேர்ந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி புதுக்கோட்டை க்கு நாடகம் போடுவதற்காக வந்தபோது சின்னப்பாவைத் தங்கள் நாடகத்துக்காகத் தேர்ந்தெடுத்தனர். அன்று தமிழ்நாட்டில் பெரிய நாடகக் கம்பனிகளில் ஒன்றாக இருந்தது மதுரை பாய்ஸ் கம்பனி. இந்த நாடகக் கம்பனியில் சேர்ந்தாலும் சின்னப்பா சிறு சிறு குணச்சித்திர கதாபாத்திரங்களில்தான் நடித்துவந்தார். அதனால் ஓய்வு நேரங்களில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துப் பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வது அவரது விருப்பமான பொழுதுபோக்கு. இதைப் பார்த்துப் பிடித்துப்போன நாடகக் கம்பனியினர் அவருக்கு கதாநாயக வேடம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
பாய்ஸ் கம்பனி வேலைக்குப் பிறகு சின்னப்பா முறையாக சங்கீதம் பயின்றார். அன்றைய சினிமா கதாநாயகர்களின் லட்சணங்களாகக் கருதப்பட்ட சிலம்பாட்டம், குஸ்தி மாதிரியான தற்காப்புக் கலைகளையும் கற்றார். இதற்கிடையில் நாடகங்களிலும் நடித்தார். ரங்கூன், இலங்கை ஆகிய இடங்களிலும் நாடகங்களில் நடித்துள்ளார் சின்னப்பா. சின்னப்பாவுடன் பெண் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
ஜுபிடர் பிக்சர்ஸின் ‘சந்திரகாந்தா’ மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் சின்னப்பா. அதன் பிறகு தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்தார். பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் அவர்களது ‘உத்தமபுத்திரன்’ படத்துக்காக சின்னப்பாவை அணுகினர். இதில் அவருக்கு இரட்டை வேடம். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ஆனார் சின்னப்பா. பிறகு பல படங்களில் நடித்தார். ‘மங்கையர்க்கரசி’யில் அவர் பாடும் ‘காதல் கனிரசமே...’ தலைமுறைகள் தாண்டி இன்றும் பிரபலம். ‘பிருத்விராஜி’ல் தன்னுடன் நடித்த சகுந்தலாவை காதலித்து மணம் முடித்தார். புகழின் கொடுமுடியில் இருக்கும்போதே அவரது சொந்த ஊரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே ரத்த வாந்தி எடுத்து தனது 35 வயதிலேயே இறந்துபோனார்.