நெருப்பு டா.. கபாலி டா..’என ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா ரசிகர்களைக் குதூகலப்படுத்தியிருக்கிறது கடந்த வாரம் வெளியான கபாலியின் டீஸர். கூடவே அனைவரையும் கவர்ந்திழுக்கின்றன கபாலி திரைப்பட போஸ்டர்கள். மலேசியாவின் புகழ்பெற்ற இரட்டைக் கோபுரப் பின்னணியில் சாம்பல் நிற சூட், வெள்ளை தாடியோடு தோரணையாக சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் கபாலி, உக்கிரமாகத் துப்பாகி ஏந்தி நிற்கும் கபாலி, கையில் சங்கிலியைச் சுழற்றிக் கம்பீரமாகப் பார்க்கும் கபாலி; சுற்றிலும் நடுநடுங்கிப்போகும் சோட்டா தாதாக்கள் எனப் பார்க்கும்போதே படத்தின் கதையைச் சொல்லி மிரட்டுகின்ற இந்த போஸ்டர்களை வடிவமைத்தவர் வின்சி ராஜ்.
இது வேற மாதிரி
அனைவரையும் திரைப்படத்தை நோக்கி ஈர்க்கும் உத்திகளில் ஒன்று சுவரொட்டி. பொதுவாகப் படத்தின் கதாநாயகன், கதாநாயகி ஆகியோரின் தோற்றத்துடன் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியக் காட்சியைச் சித்திரிப்பதாகத்தான் தமிழ் சினிமாவில் சுவரொட்டிகள் ரசிகர்களுக்குத் தகவல் தருகின்றன. ஆனால் வின்சியின் போஸ்டர்கள் வேறு மாதிரி. சட்டையைக் கிழித்து உள்ளுக்குள் இருக்கும் கலர்கலரான இதயத்தைக் காண்பிக்கும் ‘அட்ட கத்தி’ நாயகன், அந்தரத்தில் மிதந்து வளைந்து நெளிந்தோடும் கிராமமான ‘முண்டாசுப் பட்டி’-க்குள் கேமராவோடு பைக்கில் டபுள்ஸ் போகும் இருவர், இதேபோலவே ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’, ‘இன்று நேற்று நாளை’ என இன்றைய பல இளைய தலைமுறை இயக்குநர்கள் இயக்கும் படங்களின் போஸ்டர்கள் வழக்கத்துக்குள் சிக்காமல் தனித்துக் கவர்கின்றன. “ஒரே போஸ்டரில் ஒட்டுமொத்தப் படத்தின் மையக் கருவைச் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் இதில் என்ன சொல்லப்போகிறார்கள் எனப் பார்வையாளரைப் படம் பார்க்கச் சுண்டி இழுக்க வேண்டும்” என்கிறார் வின்சி.
இப்படித் தெளிவாக யோசிக்கும் வின்சி சென்னை பையன். பள்ளி-கல்லூரியில் கடைசி பெஞ்ச் மாணவர்தான். ஆனால் அப்போதே ஓவியம் வரைதல் கை வந்த கலை. பிசிஏ படித்த பின்பு விஸ்காம், டிஜிட்டல் கம்யூனிகேஷனில் முதுகலைப் பட்டம் என ஓவியம் சார்ந்த ஊடகக் கலையைப் படித்து முடித்து வெவ்வேறு வேலைகள் செய்து ஒருவழியாக விளம்பரத் துறையில் கால்பதித்திருக்கிறார். பிறகு நாளிதழ், டிவி விளம்பரப் படங்கள், இணையதள விளம்பரங்கள், விளம்பரப் பலகைகளுக்கான டிசைனிங் எனப் பரபரப்பானவர், பிரபல பிராண்டுகளுக்கு வடிவமைத்த விளம்பரங்களும் இவர் மீது கவனம் குவிக்க வைத்திருக்கிறது. வாகனம் ஓட்டுகையில் போன் பேசக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவருடைய விளம்பரப்படமான ‘டாக் தெம் டெட்’ உலகளவில் இந்த நூற்றாண்டுக்கான சிறந்த 100 விளம்பரப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கு இணையான கான் விருது உட்படப் பல சர்வதேச விருதுகளை 2010-ல் வென்றது. பிரபல பிராண்டு மெத்தைக்கு இவர் டிசைன் செய்த விளம்பர போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது.
கற்பனை சுதந்திரம்
2012-ல் ‘அட்ட கத்தி’ படத்தின் ஆரம்பக் கட்டத்தில் வின்சியின் நண்பர்கள் மோசஸ், ஆரோக்கியராஜ் ஆகியோர் மூலமாகப் பா.இரஞ்சித் அறிமுகமானார். வின்சியின் விளம்பர டிசைன்களால் ஈர்க்கப்பட்ட இரஞ்சித் அவரையே தன் முதல் படத்துக்கும் போஸ்டர் வடிவமைக்கச் சொன்னபோது, திரைப்படத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்ற மனநிலையில்தான் வின்சி இருந்திருக்கிறார். “என்னைப் பொறுத்தவரை போஸ்டர் டிசைன் என்பது வெறுமனே அழகானவற்றை ஒளிப்படம் எடுத்து அச்சிடுவதல்ல. அது கதைக் கருவைச் சுமந்து நிற்க வேண்டும். அவ்வாறு கதை சொல்லும் போஸ்டரை வடிவமைக்க எனக்கு முழு சுதந்திரம் வேண்டும். அதை இரஞ்சித் தந்ததால் சினிமாவுக்குள் வந்தேன்” என்கிறார்.
யூடியூபிலும் டிவியிலும் டீஸர், டிரெய்லர் வந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்னால் பெருவாரியானவர்களின் கவனத்தையும் ஈர்ப்பவை போஸ்டர்கள்தான். போஸ்டரைப் பார்த்துத்தான் படம் பார்க்க வருவார்கள் என்கிற நிலை கபாலி போன்ற படங்களுக்கு இல்லை. ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள், புதிய இயக்குநர்-நடிகர்களின் படங்கள் எனும்போது எல்லோரையும் தியேட்டருக்கு வரவழைப்பதில் போஸ்டருக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது எனத் திட்டவட்டமாக நம்புகிறார் வின்சி.
நினைவிழந்தாலும் வாய்ப்பு கிடைத்தது!
ஒரு டிசைனர் திரைப்படப் போஸ்டர்களை உருவாக்குவதில் பட இயக்குநர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இயக்குநர் இரஞ்சித்தும் ஒரு கவின் கலை மாணவர் என்பதால் இருவரும் ஒரே மனோநிலையில் வேலைபார்த்ததாகச் சந்தோஷப்படுகிறார் வின்சி. ‘சூது கவ்வும்’ படத்துக்காக டிசைன் தொடங்கும்போது பிரபல கண் கண்ணாடி பிராண்டுக்காக வின்சி வடிவமைத்த போஸ்டரைப் பார்த்துக் கவரப்பட்டு அதே பழமையான வண்ணக் கலவையைக் கேட்டிருக்கிறார் நலன் குமாரசாமி.
“சொல்லப்போனால் ‘சூது கவ்வும்’ படத்தின் போஸ்டர்களை வடிவமைக்கும்போது என் மனதுக்குள் படமாய் விரிந்தது எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட போஸ்டர்தான். ஈஸ்மென் கலர் என்னை எப்போதுமே ஈர்க்கும். அடர்த்தியான நிறங்களோடு உயிரோட்டமாக அவை வடிவமைக்கப்பட்டிருந்தன” என்கிறார். அப்போது நலன் குமாரசாமியின் துணை இயக்குநராக இருந்த ரவிகுமார் பின்னர் ‘இன்று நேற்று நாளை’ படம் இயக்கியபோது வின்சியைத்தான் போஸ்டருக்காகத் தேடி வந்திருக்கிறார்.
ஆனால், அந்தப் படத்துக்காக வேலைபார்த்துக்கொண்டிருந்த நாட்களில் திடீரென சாலை விபத்துக்குள்ளாகி வின்சி படுத்த படுக்கையாகி நினைவாற்றலையும் இழந்திருக்கிறார். நினைவாற்றல் இழப்பு என்றால் நடுவில் சில பக்கங்கள் அல்ல நிறைய பக்கங்களை என் நினைவுகளில் காணவில்லை என்கிறார். “கற்பனைத் திறனும் கலை உணர்வும் நினைவில் இருந்தாலும் ஃபோட்டோஷாப் முதல் அத்தனை சாஃப்ட்வேர் பயன்பாடுகளையும் மறந்துவிட்டேன். நினைவாற்றலை இழந்ததால் வேலையும் இல்லை. நடக்கக்கூட சிரமப்பட்டேன்.
என்னுடைய துறையில் நல்ல பேரும் புகழும் பெற்று வளர்ந்து வரும் வேளையில் திடீரென அத்தனையையும் இழந்து ஸ்தம்பித்துப் போனேன். அப்போதுதான் கபாலி பட வாய்ப்பு தேடி வந்தது. ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகனாக என்னால் இப்படத்துக்கு நியாயம் செய்ய முடியுமா எனப் பயந்தேன். வேறு யாராவது செய்யலாமே என்றேன். ஆனால் நான் மீண்டெழுந்து வரும்வரை காத்திருந்தார் இரஞ்சித். ஒரு மாதம் அவகாசம் கேட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து அத்தனை சாஃப்ட்வேர்களையும் கற்றேன். அதன் பிறகு முதலில் உருவாக்கியதுதான் ரஜினி சோஃபாவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் போஸ்டர். இன்னும் இதுபோல பிரம்மாண்டமான ஆறு போஸ்டர்கள் வடிவமைத்திருக்கிறேன். உங்களைப் போலவே நானும் அவை வெளிவரக் காத்திருக்கிறேன்” எனச் சிரிக்கிறார்.