இந்து டாக்கீஸ்

புதிய வெப் சீரிஸ் தோற்றத்தில் பார்வதி

ஆர்.ஜெயக்குமார்

அமெசான் ஒரிஜினல் சீரிஸ் கடந்த வாரம் 40 புதிய தொடர்களின் அறிமுக விழாவை நடத்தியிருக்கிறது. இவற்றுள் ஒன்று ‘தூதா’. தமிழில் ‘அலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் விக்ரம் கே குமார். தொடர்ந்து மாதவன் நடிப்பில் ‘யாவரும் நலம்’ வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்தப் படம் ‘13பி’ என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டு வெற்றி கண்டது. சூர்யா நடிப்பில் ‘24’ வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இவர் தெலுங்கிலும் நாகசைதன்யா, சமந்தா நடிப்பில் வெளிவந்த ‘மனம்’ வெற்றிப் படத்தை இயக்கியுள்ளார். ‘ஹெலோ’, ‘இஷ்க்’, கேங் லீடர்’ ஆகிய படங்களையும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இப்போது நாகசைதன்யா நடிக்கும் ‘தங்யூ’ என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார்.

‘தூதா’ ஒரு த்ரில்லர் படம் வகையைச் சேர்ந்தது. இந்தாண்டு மூன்றாவது காலாண்டில் ஜூலை - செப்டம்பருக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நாகசைதன்யா, பார்வதி திருவோத்து, ப்ரியா பவானிஷங்கர், ப்ரச்சி தேசாய், தருண் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதால் இது ஒரு இந்தியா முழுமைக்குமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுக விழாவில் நாகசைதன்யா நீல நிறக் கோட் அணிந்து வந்திருந்தார். குடையுடன் ஒரு துப்பறிவாளனைப் போல் மேடையில் காற்றுக்கு இடையில் படபடக்கும் காகிதங்களைச் சேகரித்தபடி நடந்தார். பிறகு ‘தூதா’வின் தலைப்பு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. நாகசைதன்யா நடிக்கும் முதல் ஓடிடி தொடர் இது. பார்வதியும் ப்ரியா பவானிஷங்கரும் பிங்க் நிற ஆடையில் வந்திருந்தனர். தனது இந்தப் படங்களை பார்வதி இன்ஸ்டா பக்கத்தில் இப்போது பகிர்ந்திருக்கிறார்.

SCROLL FOR NEXT