இந்து டாக்கீஸ்

திரையில் மிளிரும் வரிகள் 15: காதல் கனிரசமாக மாறிய கீர்த்தனை

ப.கோலப்பன்

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். எங்கள் தெரு முத்தாரம்மன் கோயில் கொடைக்கு அம்பாசமுத்திரம் எம்.ஏ. துரைராஜ் நையாண்டி மேளம் வாசித்தார். செங்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த படையாச்சிகள் பரம்பரை பரம்பரையாக நாகசுரம் வாசித்துவருகிறார்கள். தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவரான சட்டநாதனின் தந்தையாரும் நாகசுரம் வாசித்தவர்தான். தென் மாவட்டங்களில் கம்பர், சுண்ணாம்பு பரவர்களுடன் தலித்துகளும் நாகசுரம், தவில் வாசிப்பார்கள்.

உச்சிக் கொடையன்று பாலிடெக்னிக் பகவதியப்ப அண்ணன் துரைராஜிடம், “காதல் கனிரசப் பாட்டுகளை” எடுத்து விடுமாறு கூறினான். சட்டென “காதல் கனிரசமே” என்று வாசித்தார்.

‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா நடித்து, பாடிய பாடல் இது. சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த இப்பாடல் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய “நாதம் தனும் அனுசம்” கீர்த்தனையையொட்டியே அமைந்துள்ளது. வரிக்கு வரி அதே சாயல். அதே சிட்ட ஸ்வரங்கள்.

செவ்வியல் இசையில் கோலோச்சிய எல்லோருக்கும் இணையாக அப்பாடலை சரம் பாடியிருப்பார் சின்னப்பா. பாடல் முடிந்ததும் சோவென்று மழை பெய்து ஓய்திருப்பது போன்ற தோற்றம். யூடியூபில் இப்பாடலைக் கேட்டுக் களிக்கலாம்.

சென்னையில் இசை விழாக்களில் குறிப்பாக மியூசிக் அகாடமியில் இசை விழா தொடங்கும்போது “நாத தனும் அனிசம்” பாடலைத்தான் பாடுவார்கள். “காதல் கனிரச”த்தை மட்டுமே கேட்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. சுத்த கர்நாடக சங்கீதத்தை எந்த வித சமரசமும் இல்லாமல் வரிகளை மாற்றித் திரைப்படத்தில் இடம்பெற செய்து வெற்றி பெற முடிந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

“தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சகலாகலாவல்லவன் சின்னப்பாதான். குஸ்தி, சிலம்பம், பாட்டு, நடிப்பு, இரட்டை மற்றும் மூன்று வேடங்கள் என எல்லாவற்றிலும் மகா கில்லாடி” என்கிறார் திரையிசை ஆராய்ச்சியாளர் வாமனன்.

சின்னப்பாவின் சமகாலத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். படங்களில் காட்சிக்குக் காட்சி பாடல்கள் இடம்பெற்ற காலம். “தியாகராஜ பாகவதரின் பாடல்கள் பளிச்சென இருக்கும். சின்னப்பாவைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகளை உணர்ந்துபாடுவார். பாட்டுடன் பாவனையும் சேரும்போது அது படம் பார்ப்பவரின் உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதீதமானது” என்கிறார் வாமனன்.

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பாதான் பி.யு. சின்னப்பா என்று அழைக்கப்பட்டார். அவருடைய அப்பாவும் நாடகத் துறையில் இருந்ததால் சிறு வயதிலேயே சின்னப்பாவும் அத்துறைக்கு வந்தார். டி.கே.எஸ். சகோதரர்களுடன் பணியாற்றினார். சேட்டைகள் அதிகம். இதனால் அடிக்கடி அடி வாங்குவார்.

சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ‘ஆர்யமாலா’ திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. அதற்கு முன்னதாக ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

‘ஜகதலப்பிரதாபன்’ திரைப்படத்தில் அவர் பாடிய “தாயைப் பணிவோம்” பாடலில் பாடுபவராகவும் வயலின், மிருந்தங்கம், கஞ்சிரா வாசிப்பவராகவும் கொன்னக்கோல் சொல்பவராகவும் கலக்கியிருப்பார். பிற்காலத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற “பாட்டும் நானே பாவமும் நானே” பாட்டுக்கு சின்னப்பாவின் பாடலே ஆதர்சம்.

அவர் சிறந்த நடிகர் என்பதை இப்பாடல் காட்சியைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போதே கஞ்சிராவில் தண்ணீரைத் தெளித்துத் தயார் செய்துகொண்டிருப்பார். சங்கீத பாவனைகள் அற்புதமாக வெளிப்படும் காட்சி அது. ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜி தொண்டையைச் சரி செய்வதுபோல.

திரைப்படத்தில் தலைமயிர்களெல்லாம் தெறித்துப் போகும் அளவுக்கு கஞ்சிரா வாசிப்பார்.

பின்னர் இதே மெட்டில் கிராமபோன் இசைத் தட்டுக்காக “நமக்கினி பயமேது” என்று பாடினார்.

‘மங்கையர்க்கரசி’, ‘மனோன்மணி’, ‘கண்ணகி’ எனப் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ‘கிருஷ்ணபக்தி’ திரைப்படத்தில் அவர் நடத்திய கதாகாலட்சேபத்துக்கு இணையேது.

“இயற்கையிலேயே நல்ல குரல் வளம் இருந்தாலும் இசைத்திறமையை மேம்படுத்துவதற்காகக் குன்னக்குடி வெங்கட்ராம ஐயரிடம் சங்கீதம் பயின்றார். ஒரு பாடலை சுமார் ஐம்பது முறையாவது கேட்டுவிட்டுத்தான் அவர் பாட ஆரம்பிப்பார்” என்கிறார் வாமனன்.

திரைப்படத்துறையில் அவர் பெரும் பொருளீட்டினார். புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கினார். இனிமேல் அவருக்கு யாரும் விற்கக் கூடாது என்று சட்டம் வரும் அளவுக்கு அவர் வீடுகளை வாங்கிக் குவித்திருந்ததார் என்று சொல்லப்படுகிற்து.

ஆனால் குடிப்பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டது. அத்துடன் பீடி புகைப்பார். அடி தடிகளில் ஈடுபடுவார். திடீரென ஒரு நாள் இறந்துபோனார். “அவர் இறப்பு இன்னும் புதிராகவே உள்ளது” என்று வாமனன் பதிவுசெய்திருக்கிறார்.

தொடர்புக்கு: bagwathi@gmail.com

SCROLL FOR NEXT