இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதக்கிறார் ஒய்.ஜி.மகேந்திராவின் மகள் மதுவந்தி அருண். `சிவசம்போ,‘பெருமாளே’ ஆகிய இரண்டு நாடகங்களை 105 காட்சிகள் வெற்றிகரமாக அரங்கேற்றி, அப்பாவின் வழியில் சாதித்திருக்கும் இவர், தற்போது மூன்றாவது படைப்பாக உருவாக்கியிருக்கும் ‘இ.வா.க.’ என்ற நாடகம் இன்று மேடைக்கு வருகிறது. மதுவந்தியின் மற்றொரு சந்தோஷத்துக்குக் காரணம், விஜய் சேதுபதி நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தின் மூலம் சினிமாவிலும் அடி வைத்திருப்பது. உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் மதுவந்தி…
அது என்ன ‘இ.வா.க’?
நவீன முகமது பின் துக்ளக் மாதிரின்னு வைச்சுக்கங்களேன். ஆனா, யாரையும் நேரடியா புண்படுத்தணும்கிறது எங்களோட நோக்கம் இல்லை. ஃபேஸ்புக், ட்விட்டர்ல சகட்டுமேனிக்கு எல்லாத்தையும் எல்லாரையும் தானே கலாய்ச்சுட்டு இருக்காங்க. அதுமாதிரி இன்றைய காலகட்டங்கள்ல இருப்பதை வைத்து எங்க சைடுல இருந்து ஒரு அரசியல் நையாண்டி நாடகம். எழுத்து ராதா கிருஷ்ணன், இயக்கம் சுரேஷ்வர் என முழுக்க முழுக்க ‘பெருமாளே’ நாடகத்தை ஹிட்டடித்த குழுதான் இ.வா.க.வையும் படைச்சிருக்காங்க.
தேர்தலுக்கு முன்பே நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாமே?
நான், வேணும்னேதான் தேர்தல் முடிஞ்ச பின்னாடி இதை ரிலீஸ் பண்றேன். முன்னாடியே விட்டிருந்தால், விளம்பரத்துக்காக பண்றோம்னு சொல்லிருப்பாங்க. விளம்பர ஸ்டண்ட் அடிக்கிறது எங்க நோக்கம் இல்லை. பொழுதுபோக்கான ஒரு நாடகத்தைக் கொடுக்கும்போது அதோடு சேர்த்து ரசிகர்களுக்கு சின்னதா ஒரு மெசேஜை சொல்ல விரும்புறோம். தேர்தலுக்கு முன்பே நாடகத்தை விட்டிருந்தா அந்த மெசேஜ் மக்கள்கிட்ட போய் சேர்ந்திருக்காது.
நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்று சொல்வதை உங்கள் அனுபவத்தில் எப்படி உணர்கிறீர்கள்?
அப்படிச் சொல்றவங்க அரைவேக்காடுகளாத்தான் இருக்கணும். வரவேற்பு இல்லைன்னா, எங்கள மாதிரி ஒரு `யங் டீம்’ அமெரிக்கா வரைக்கும் போய் நாடகம் போட்டு ஜெயிக்க முடியுமா? வரவேற்பு இல்லாமலா இ.வா.கா. நாடகத்தைப் பற்றி ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எதிர்பார்ப்போட விசாரிச்சிட்டு இருக்காங்க? தரமான நாடகங்களைத் தந்தால் வரவேற்பு கொடுக்க மக்கள் தயாரா இருக்காங்க. நாடகத்துக்கு வரவேற்பு இல்லைன்னு சொல்றவங்க ஒரு தடவ எங்க நாடகத்துக்கு வந்தா உண்மைய புரிஞ்சுக்குவாங்க.
அப்பா வழியைப் பின்பற்றி சினிமாவிலும் இறங்கிட்டீங்களே?
இயக்குநர் சீனு ராமசாமி சார், என்னோட ‘பெருமாளே’ நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகத்துல என்னோட நடிப்பைப் பார்த்துட்டு, தன்னோட ‘தர்மதுரை’ படத்துல இன்ஸ்பெக்டர் ரோல்ல நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். இன்னாரோட பேத்தி, இன்னாரோட மகள் என்பதற்காக தரப்பட்ட வாய்ப்பு அல்ல. அதனால, அந்த பெருமை முழுக்க ‘பெருமாளே’வுக்குத்தான். அடுத்ததா, ராகவா இயக்கத்துல சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிற படத்துலயும் நடிக்கிறேன். ஏற்கெனவே ‘முத்து’ படத்தில் நடிக்கிறதுக்காக சித்தப்பாவும் (ரஜினி) ‘ஹே ராம்’ படத்தில் நடிக்கிறதுக்காக கமல் சாரும் அழைச்சப்போ என்னோட குடும்பத்தார் அந்த சமயத்துல சம்மதிக்கல. அப்போ நழுவிப்போன வாய்ப்புகள் இப்போ தேடி வந்தாச்சு. ‘தர்மதுரை’யில் நடிக்கிறேன்னு சித்தப்பாகிட்ட சொன்னேன். குட் நல்ல டைரக்டர், நல்லா பண்ணும்மா’ன்னு சொன்னார். அது எனக்கு ஆசீர்வாதம்.
சினிமாவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
டிராமாவுல நடிக்கிறதுதான் கஷ்டம். ஆனாலும் சினிமா அனுபவம் வித்தியாசமா இருந்தது. ஒட்டுமொத்த யூனிட்டே எனக்கு மரியாதை குடுக்குறாங்க. அது நான் சம்பாதித்த மரியாதை இல்லை. என் குடும்பத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதை. அதற்கு நான் தலைவணங்குகிறேன்.
திடீர்னு அரசியலிலும் கால் பதித்திருக்கிறீர்களே?
பொறுப்புள்ள இந்தியக் குடிமகளாக இருப்பதில் தவறில்லையே. சும்மா குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்காமல் என்னதான் நடக்கிறது என்று நாமும் இறங்கிப் பார்த்தால்தான் என்ன, ஏது? என்று தெரிந்துகொள்ள முடியும். பா.ஜ.க.வில் நான் ஒரு உறுப்பினர். மத்தபடி, பதவி, பொறுப்பு எதுவும் கிடையாது. அந்த ஆசையில் நான் அரசியலில் இறங்கவில்லை.