துப்பறியும் கமல்
கமல் ஒரு வழியாகத் தனது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார். கடந்த 1989-ல் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘சாணக்கியன்’. அந்தப் படத்தின் இயக்குநர் டி.கே. ராஜீவ்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் கமல். இந்தப் படத்தில் கமலுக்கு மகளாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். விறுவிறு துப்பறியும் கதையாக, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை லைக்கா பட நிறுவனம் தயாரிக்கிறது.
சேதுபதியின் சிறகு
விஜய் சேதுபதி நடிப்பில் ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய இரு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகிவருகின்றன. இந்நிலையில் ‘ரெக்கை’ படத்தில் நடிக்கத் தனது தோற்றத்தைக் கொஞ்சம் மாற்றிவருகிறார் விஜய் சேதுபதி. அருண் விஜய் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் இருக்கும் ‘வா டீல்’ படத்தின் இயக்குநர் ரத்தின சிவாதான் ‘ரெக்கை’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக ஜோடி சேர்கிறார் லட்சுமி மேனன். இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் லட்சுமி மேனனை நடிக்கவைக்க முடிவுசெய்திருக் கிறாராம் இயக்குநர்.
தேனியில் சென்னை
‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கத் திட்டமிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. முதல் பாகத்தில் இடம்பெற்ற அத்தனை நடிகர்களும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறார்கள். இந்தப் படத்தின் முக்கியப் பகுதியைத் தேனியில் படமாக்க இருக்கிறாராம். இதற்காகத் தனது ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், மற்றும் நடிகர்கள் குழுவுடன் ஒரு வேனில் தேனி நோக்கிப் பயணித்து அதை ‘ரோட் ஷோ’ வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். ஆனால் வேனில் பயணித்த குழுவில் நடிகர் ஜெய் மட்டும் மிஸ்ஸிங்.
பத்திரிகையாளர் சூர்யா
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘யாதும்’ எனும் மாத இதழை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அவரது அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நீதிபதி சந்துரு தலைமையில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விதழை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் தொடர்ந்து எழுதி தன்னையொரு பத்திரிகையாளராகவும் வெளிப்படுத் தவிருக்கிறாராம் சூர்யா.
மூன்றாவது முறையாக
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் முடிந்ததும் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ‘சிறுத்தை’ புகழ் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படமும் முடிந்த பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
‘ராட்சசன்’ ஜெய்
‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெய். இந்தப் படத்துக்கு 'ராட்சசன்' என்று தலைப்பிட்டுள்ளார்கள். இயக்குநர் ராம் கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதால் மே மாதம் முதல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம் ஒரு போலீஸ் கதை.