இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன் | வளரும் நட்சத்திரங்களின் படம்!

செய்திப்பிரிவு

பா.இரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ என சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த ஹரி கிருஷ்ணனை, கவிஞர் குட்டி ரேவதி தன்னுடைய ‘சிறகு’ படத்தில் நாயகன் ஆக்கினார். தற்போது, ஹரி கிருஷ்ணனுக்கு கே.ஹெச். பிக்சர்ஸ் - ஓடிஓ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘அன்னபூர்ணி’ படத்தில் அடுத்த நாயகன் வாய்ப்பு அமைந்து விட்டது. இந்தப் படத்தில் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோள் ஜோஸ், ‘கூகுள் குட்டப்பா’ புகழ் லாஸ்லியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கதை பிடித்தால் மட்டுமே இசையமைத்து வரும் கோவிந்த் வசந்தா, லயோனல் ஜோசுவா இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இணையத் தொடரில் எம்.ராஜேஷ்!

காதல், நகைச்சுவை படங்களின் ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்று புகழப்படுபவர் எம். ராஜேஷ். இவர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ‘மை 3’ என்கிற இணையத் தொடரை இயக்குகிறார். இதில் ஹன்சிகா மோத்வானி, சாந்தனு, முகேன் ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இத்தொடர் பற்றி இயக்குநர் கூறும்போது “இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர். இன்றைய இளைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும்.” என்றார்.

நகைச்சுவைக்கு தடை!

சி.எஸ். அமுதனின் ‘தமிழ் படம்’ மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் வளர்ந்து திரையுலக்கு வந்த இவரை, சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் பிஸியான நடிகராக ஆக்கின. தற்போது, நகைச்சுவை துளியும் இல்லாமல், ‘சட்டம் என் கையில்’ என்கிற புதிய படத்தின் மூலம் ஆக் ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சதீஷின் மைத்துனரான சாச்சி இயக்குகிறார். இவர், வைபவ் நடித்த ‘சிக்ஸர்’ படத்தை இயக்கிப் பாராட்டுகளை அள்ளியவர். “குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காக கைது செய்யப்படும் நாயகன், நாயகியை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவதற்காகக் காவல் நிலையத்திலிருந்து தப்பித்துச் சென்று தன்னுடைய மிஷனை எப்படிச் செய்து முடிக்கிறார் என்பது கதை. ஊட்டியில் ஒரே இரவில் நடக்கும் கதை. இரவு நேர ஊட்டியின் வாழ்க்கையை பி.ஜி.முத்தையா அள்ளிக்கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சதீஷின் திரைப் பயணம் புதிய தடத்துக்கு மாறும்” என்கிறார் இயக்குநர்.

சசிகுமாரின் ‘காரி’

குணத்தில் ஈரமும் வீரமும் கொண்ட கிராமத்து நாயகனாக நடித்துத் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருபவர் சசிகுமார். தற்போது, ‘காரி’ என்று தலைப்புச் சூட்டப்பட்டுள்ள கிராமத்துக் கதையில் நடித்து முடித்திருக்கிறார். ஹேமந்த் இயக்கும் இப் படத்தின் மூலம் மலையாளப் படவுலகிலிருந்து பார்வதி அருண் நாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்களைத் தவிர, பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்' நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். தற்போது கார்த்தி நடித்துவரும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ். லஷ்மண் குமார் தயாரிக்கும் படம் இது. படத்துக்கு இசை டி.இமான்.

யோகி பாபு - லட்சுமி மேனன் கூட்டணி!

சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ஐ.பி.முருகேஷ் ‘மலை’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் லட்சுமி மேனன் - யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். “மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமம்தான் கதைக் களம். படத்தில் மலை ஒரு கதாபாத்திரமாக இருக்கும். நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக லட்சுமி மேனன் நடிக்கிறார். அந்த கிராமத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றி விடுகிறார்கள் என்பதுதான் கதை” என்கிறார் இயக்குநர். மலையக வாழ்க்கையை உயிர்ப்புடன் படமாக்குவதில் பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் டி. இமான் இசையில் உருவாகிவருகிறது.

SCROLL FOR NEXT