இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன் | பழிவாங்கும் சுனைனா!

செய்திப்பிரிவு

‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திய சுனைனாவுக்கு ‘ரெஜினா’ படத்தில் மீண்டும் அப்படியொரு வாய்ப்பு! கணவர் திடீரெனக் கொல்லப்பட, அவரைக் கொன்றவர்கள் யார், எதற்காகக் கொன்றார்கள் என்பதைத் தேடியறிந்து சுனைனா பழிவாங்குவதுதான் கதை. மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கத்தில் இசை அமைப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியாக இருக்கும் படத்தில் சதீஷ் நாயர், நிவாஸ் ஆதித்யன், அனந்த் நாக், சண்டை இயக்குநர் தீனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிமாறனின் இணையத் தொடர்!

‘விலங்கு’ இணையத் தொடரின் வெற்றியால், தன்னுடைய ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்களின் தயாரிப்பை முழு வீச்சில் அதிகரித்துள்ளது ஜீ5 ஓடிடி தளம். சமீபத்தில் ‘ஒரு ஆசம் தொடக்கம்’ என்கிற தலைப்பில் நடத்திய விழாவில் புதிய தொடர்கள் அறிவிக்கப்பட்டன. வெற்றிமாறன் எழுத்தாக்கத்தில் உருவாகும் ‘நிலமெல்லாம் ரத்தம்’, பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’, ராதிகா சரத்குமார் நடிப்பில் ‘கார்மேகம்’, ‘தலைமை செயலகம்’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் ‘பேப்பர் ராக்கெட்’ உள்ளிட்டப் பத்துக்கும் அதிகமான தொடர்கள் முழு வீச்சில் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. அமீர், வெற்றிமாறன், வசந்த பாலன், விஜய், கிருத்திகா உதயநிதி என பல முன்னணி இயக்குநர்களும் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ், விமல், தம்பி ராமையா என பல நட்சத்திரங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். ‘விலங்கு’ தொடராக்கக் குழுவினருக்குக் கேடயம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மர்மக்குரல் வேட்டை!

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பு அதிகாரியாக இருக்கிறார் அஜ்மல். ஒரு மர்மக் குரல் அடிக்கடி பல தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுக்கிறது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு பல ஆபத்துகளைத் தடுக்கிறார் அஜ்மல். அந்தக் குரல் கூறுவதை அலட்சியப்படுத்தினால் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க முடியவில்லை. அந்தக் குரலுக்கு உரியவர் யார், அவருடைய நோக்கம் என்ன, அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை அஜ்மல் கண்டுபிடித்தாரா இல்லையா என்கிற கதையமைப்புடன் உருவாகி வருகிறது ‘தீர்க்கதரிசி’. இயக்குநர் ஹரியின் உதவியாளர்களான பி.ஜி.மோகன் - எல்.ஆர்.சுந்தர பாண்டி இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.

புகழ் மகேந்திரன் அறிமுகம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், சமூகச் செயற்பாட்டாளர் சி. மகேந்திரன். அவருடைய மகன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘வாய்தா’. அவருக்கு ஜோடியாக பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாடகத் துறை பேராசிரியரும் ‘கேடி’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவருமான மு.ராமசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வராஹ ஸ்வாமி பிலிம்ஸ் சார்பில் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் படத்தை மகி வர்மன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் கலந்துகொண்டு இசை குறுந்தகட்டையை வெளியிட்டார். சி. லோகேஸ்வரன் இசையமைப்பில் படத்தில் மொத்தம் ஒன்பது சிறிய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாமானிய மக்களின் அல்லல்களை நக்கலும் நையாண்டியுமாகச் சித்தரித்துள்ளதாக இயக்குநர் கூறினார்.

தேவையற்றதை மற!

தரமணி திரைப்படக் கல்லூரியில் சினிமா இயக்கம் பயின்று, ஆபாவாணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர் எம்.பாஸ்கர். கடந்த ஆண்டு வெளியான, ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இணை இயக்குநரான இவர், ‘கற்றது மற’ படத்தை எழுதி, இயக்கியிருப்பதுடன், இசை, பாடல்கள் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் சுதிர், ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்கிருத்தியாயனின் முதல் படமான ‘தி எண்ட்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர். கூத்துப் பட்டறையில் பயின்ற சென்னைக்காரர். இவருடன் விக்டர், பௌசியா இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். “வாழ்க்கையின் போக்கில் கற்றுகொள்ளும் தேவையற்ற பழக்கங்களை, உடனுக்குடன் மறக்காவிட்டால் என்ன விளையும் என்பதை இன்றைய நவீனயுகக் காதலைக் களமாக வைத்துச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் எம்.பாஸ்கர்.

SCROLL FOR NEXT