இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: டார்லிங் 2

இந்து டாக்கீஸ் குழு

நண்பனின் துரோகத்தால் தான் தங்களது காதல் தோற்றது என்று கருதும் காதல் ஜோடி ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதே ‘டார்லிங் 2’.

ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிப்பது போன்ற திகில் காட்சியுடன் தொடங்கு கிறது படம். அடுத்த காட்சியில் தற்கொலை. அடுத்து, கலையரசன், காளி, ஹரி (மெட்ராஸ் ஜானி), அர்ஜுன், ரமீஸ், ஆகிய நண்பர்கள் வால்பாறைக்குச் சுற்றுலா போகிறார் கள். வால்பாறையில் ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். நண் பர்கள் ஒவ்வொருவராக ‘காட்டு காட்டு’ என்று காட்டுகிறது ஆவி. ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலில் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனைக் கொல்லப்போவ தாக மிரட்டுகிறது. ஆவிக்கு ஏன் கலையரசன் மீது கோபம்? கலையரசனால் ஆவியிடமிருந்து தப்பிக்க முடிந்ததா?

தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி, ஆவியாக வந்து பழிவாங்கு வதற்கான காரணம் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், பேய் ஒவ்வொருவரையாக மிரட்டுவது ஏன்? பேய் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இத்தனை காட்சிகள் எதற்காக? ராமின் தம்பி காட்டுக்குள் தனியாகப் போவதற்கான காரணம் பலவீனமாக உள்ளது. அங்கே ஏற்படும் அபாயம் திணிக்கப்பட்டதாகவே உள்ளது. இவை எல்லாம் சேர்ந்து படத்தை இழுவையாக்குகின்றன.

வால்பாறையில் பெரிய பங்களா, ஆறு, அடர்ந்த காடு, மிரட்டும் காட்டு யானை என்று கதைக்கான களம் அருமையாக அமைந்திருக்கிறது. கலையரசன், காளி வெங்கட், முனிஸ்காந்த் மூவருமே நடிப்பில் பட்டையைக் கிளப்பக்கூடியவர்கள். இந்தக் களத்தையும் இந்த நடிகர்களை யும் வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்கலாம். இயக்குநர் சதீஸ் சந்திரசேகர் இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார். பேய் பழிவாங்குவதற்கான காரணத்தைக் கச்சிதமாக நிலைநிறுத் தும் இயக்குநர், கலையரசன் தரப்பு நியாயத்தை பலவீன மாகவே முன்வைப்பதால் அது எடுபடவில்லை.

ராமைச் சுற்றியே செல்லும் திரைக்கதை ஆயிஷாவைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துவது சுவாரஸ்யமாக உள்ளது. கலையரசன் ஒரு கட்டத்தில் தன் உயிரைத் தர முன்வருவது மனதைத் தொடுகிறது. நட்பையும் காதலையும் காப்பாற்றும் விதத்தில் அமைந்திருக்கும் கடைசித் திருப்பம் பாராட்டத்தக்கது.

கண்களில் ஒளி கக்கப் பேயாக வருவது, பேயாகவும் நண்பனாகவும் மாறி மாறிப் பேசுவது எனக் கலவரப்படுத்திவிட்டார் கலையரசன். காளியும் ஹரியும் அச்சத்தை அபாரமாக வெளிப்படுத்துகிறார்கள். நாயகி மாயா அழகாக வந்துபோகிறார்.

ரதனின் பின்னணி இசை பரவா யில்லை. ‘சொல்லட்டுமா’ பாடல் மனதை வருடுகிறது. பேய்க் கதையில் ஒளிப்பதிவின் பங்கு மிக முக்கியம். கேமராவின் கோணங்களிலேயே திகிலைக் கூட்டுவதற்கான சாத்தியங் கள் அதிகம். அதற்கான வாய்ப்புகள் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனுக்குக் கிடைக்கவில்லை.

தமிழில் சமீப காலமாக வரும் பேய்ப் படங்களை இரண்டு வகைப்படுத்த லாம். வளமான ரசனையுடனும் திகில் திருப்பங்களுடன் கட்டமைக்கப் பட்டவை. திகிலையும் காமெடியையும் கலந்துகட்டி சுவாரஸ்யம் அளிப் பவை. டார்லிங் - 2 இந்த இரண்டு வகையிலும் ஒட்டாமல், தனக்கெனப் புதிய பாணியையும் உருவாக்கிக் கொள்ளாமல் ஊசலாடுகிறது.

SCROLL FOR NEXT