இந்து டாக்கீஸ்

மும்பை மசாலா: ‘தில்வாலே’வுக்கு விருது

கனி

சென்ற ஆண்டில் வெளிவந்த பாலிவுட்டின் படங்களில், ‘தில்வாலே’ படத்துக்கு மோசமான படம் என்ற விருது கிடைத்திருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக மோசமான படங்களுக்கு விருது கொடுக்கும் ‘கோல்டன் கேளா’ இந்த விருதை வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் படுதோல்வியடைந்த படங்களான ‘பாம்பே வெல்வட்’, ‘ஷாந்தார், ‘தேவர்’, ‘சிங் இஸ் பிலிங்’ போன்ற படங்களுடன் போட்டியிட்டு ‘தில்வாலே’ இந்த விருதைத் தட்டிச்சென்றிருக்கிறது.

மோசமான நடிகைக்கான விருதை ‘பிரேம் ரதன் தன் பாயோ’ படத்துக்காக சோனம் கபூர் பெற்றிருக்கிறார். இதே படத்துக்காக மோசமான இயக்குநர் விருதை சூரஜ் பர்சாத்யாவும் பெற்றிருக்கிறார். சல்மான் கான் அறிமுகப்படுத்திய நடிகர் சூரஜ் பஞ்சோலிக்கு ‘ஹீரோ’ படத்துக்காக மோசமான நடிகர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பாலிவுட்டில் சென்ற ஆண்டு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்த எல்லாப் படங்களும், நடிகர்களும், இயக்குநர்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அசத்திய ‘அசார்’ ட்ரைலர்

முகமது அசருதீன் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘அசர்’. அசருதீன் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மி நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் சிறந்த கேப்டன், சர்ச்சைக்குரிய கேப்டன் என்று இரண்டு விதமாக அறியப்பட்ட அசருதீனின் வாழ்க்கையை இந்தப் படம் திரையில் கொண்டுவரவிருக்கிறது. அசருதீனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களையும் இந்தப் பதிவுசெய்யவிருக்கிறது. பிராச்சி தேசாய், நர்கிஸ் ஃபக்ரி, லாரா தத்தா போன்றோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டோனி டி சௌசா இயக்கியிருக்கும் இந்தப் படம் மே 13-ந் தேதி வெளியாகிறது.

கேபரேவில் கலக்கும் ரிச்சா

பூஜா பட் தயாரிக்கும் ‘கேபரே’ படத்தில் கேபரே நடன கலைஞராக நடிக்கிறார் ரிச்சா சட்டா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் தன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் ரிச்சா. “கேபரே நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒரு நாடகத்தனமான திகில் படம். ஒரு பெண் எப்படி எல்லாவிதமான சவால்களையும் மீறி சாதிக்கிறாள் என்பதுதான் கதை. இதற்கிடையில் ஒரு காதல் கதை, நிறைய பாடல்களும் நடனங்களும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. எனக்கு நடனத்தின் மீதிருக்கும் காதலால் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்” என்கிறார் ரிச்சா.

இதுவரை, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரிச்சா, முதல்முறையாக இந்தப் படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் குல்ஷன் தேவய்யா, கிரிக்கெட் வீரர் சாந்த் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘கேபரே’ மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபாமாவுடன் ‘டின்னர்’?

ஆஸ்கர் விருதுகளைத் தொகுத்து வழங்கிய கையோடு பிரியங்காவுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்க தொடர் ‘குவாண்டிகோ’வில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே பிரியங்காவின் கிராஃப் ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. ஆனால், பிரியங்கா ‘குவாண்டிகோ’ தொடரின் நியூ சீசன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் டின்னரில் கலந்துகொள்வது உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. பிரியங்காவுடன் இந்த டின்னருக்கு நடிகர்கள் பிராட்லி கூப்பர், லூசி, ஜேன் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT