இந்து டாக்கீஸ்

திரைப்படம் ஆன நாவல்கள்: கடலன்னைக்கு ஒரு திரை அர்ப்பணம் - செம்மீன்

பால்நிலவன்

அன்று அரசுத் தொலைக்காட்சி மட்டும்தான். அதில் சினிமா பாடல்களை ஒளிபரப்பும் நிகழ்ச்சியென்றால் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் வீடுகள் நிறைந்துவிடும். சித்ரமாலா நிகழ்ச்சியில் இந்திய மொழிகள் பலவற்றிலிருந்தும் பாடல்கள் போடுவார்கள். அப்படி ஒருமுறை ‘மானஸ மைனே வரு’ என்ற செம்மீன் படப் பாடலைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தேன் கனவுகளை இசைக்கும் சலீல் சௌத்ரியின் படைப்பாக்கத்தில் பிறந்த அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்திலிருந்து படத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. உந்துதலுக்கு இன்னொரு காரணம் இருந்தது. சுந்தர ராமசாமியின் உயிர்த்துடிப்பு மிக்க மொழிபெயர்ப்பில் தகழியின் ‘செம்மீன்’ நாவலை வாசித்து நான் மதிமயங்கிப்போயிருந்தேன்.

மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் எழுத்துக்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது செம்மீன். 1956-ல் வெளியாகி சாகித்திய அகாதெமி விருது பெற்றது. விருது வெளிச்சம் கிடைத்த பிறகு இந்திய மொழிகளில் வலம் வந்த செம்மீன் 1965-ல் திரைவடிவம் கண்டு வெற்றிபெற்றது.

நாவலின் கதை

ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மாவும், மொத்த மீன் வியாபாரி பரீக்குட்டியும் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே நாவல் தொடங்குகிறது. வேலியோரத்துப் பூக்களாகத் திகழ்ந்த அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகள் எனும் வேலி குறுக்கே நிற்கிறது. பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து அவன் ஏக்கங்களைச் சுமந்துகொண்டு திரிகுன்னத்து மீனவன் பழனிக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். அவ்வப்போது எழும் பரீக்குட்டியின் நினைவுகளை அகற்ற முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.

திரைப்படமாக

‘செம்மீன்' திரைப்படமாக வரும்போது அதில் புகழ்பெற்ற நடிகர் மதுவை பரீக்குட்டியாகவும் மலையாளத் திரையுலகின் கனவுநாயகி ஷீலாவைக் கறுத்தம்மாவாகவும் நாம் கண்டோம். காதல் சுகந்தத்தை உணர்ந்தவர்களாகவும் பிரிவின் துயரத்தை வடிக்கும் பாத்திரத்துக்கென்றே உருவானவர்களாகவும் அவர்களின் நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. இப்படத்தில் பழனி எனும் பாத்திரத்தை ஏற்ற சத்யனும் நன்றாகவே நடித்திருப்பார்.

இயக்குநர் பி.பாஸ்கரனுடன் இணைந்து ‘நீலக்குயில்' படத்தை இயக்கிய பிறகு சில வெற்றிப் படங்களையும் தந்து புகழ்பெற்றிருந்த ராமு காரியத் இப்படத்தை இயக்கினார்.

நாவலைத் திரைப்படமாக உருவாக்குவதற்காக அதற்கான திரைக்கதை வடிவமைத்த ராமு காரியத் காட்சிரீதியாகப் பல்வேறு அழகியல்நுட்பங்களைக் கையாண்டார். படத்தின் ஆரம்பத்தில் ஆழ்ந்த கடல் பகுதியிலிருந்து மீன்பிடித்துக்கொண்டு மீனவர்களோடு வந்துகொண்டிருக்கும் படகையொட்டி உடன் நூற்றுக்கணக்கான கடற்பறவைகள் பறந்துவரும் காட்சியாக இப்படத்தின் முதல் காட்சியை அமைந்திருப்பார் இயக்குநர். இக்காட்சியே நம்மைப் படத்திற்குள் சட்டென்று இழுத்துவிடுகிறது.

கடலின் மாறுபாடு

அரபிக் கடற்கரையில் வாழும் பல பிரிவுகளைக் கொண்ட மீனவ சமுதாயங்களின் விரிவார்ந்த வாழ்வியல் ஆய்வாக நாவல் திகழ்கிறது. திரைப்படமோ ஒரு அழகான காதல் கதையாக வடிவம் பூண்டது. அது ராஜபாட்டையென்றால் இது ஒற்றையடிப்பாதை.

செம்பன்குஞ்சு கதாபாத்திரம்

கறுத்தம்மாவின் தந்தையாக வந்து பேராசையின் குறியீடாக, சகல பிரச்சினைகளுக்கும் காரணமாகிப்போன செம்பன்குஞ்சு பாத்திரத்தை இயக்குநர் ராமு காரியத் வடித்திருந்த விதம் நாவலை விடச் சிறப்பாக வந்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கடைசியில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு செம்பன்குஞ்சு மனநிலை பாதிக்கப்பட்டுவிடுவான். கொட்டாரக்ரா ஸ்ரீதரன் நாயரின் அபரிதமான நடிப்பாற்றலில் இப்பாத்திரம் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. நாவலின் ஒட்டுமொத்த உணர்வையும் உள்வாங்கி உலக வாழ்வின் நிலையாமையை, மாறிக்கொண்டேயிருக்கும் அதன் ஜாலங்களை அதன் போக்கிலேயே நின்று திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ராமு காரியத். பெரும்பாலும் ரொமான்டிக் படம் என்றே செம்மீன் கருதப்படுகிறது. அவ்விதமாகவே கடலுக்குச் சென்றிருக்கும் கணவனின் உயிர் கரையில் இருக்கும் மனைவியிடம் இருக்கிறது எனும் பிற்போக்குவாதத்தைப் பறைசாற்றுவதாகவும் உள்ளதெனச் சந்தேகம் வரும். இத்தகைய வாதங்களையெல்லாம் கடந்த ஒரு மாபெரும் மனித உளவியல் சார்ந்த களஞ்சியம் என்றே இப்படைப்பைக் காண வேண்டியுள்ளது.

SCROLL FOR NEXT