‘பாகுபலி’யின் வெற்றிக்குப் பிறகு ‘பான் இந்தியா ஸ்டார்’ ஆகிவிட்ட பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’. கைரேகை சாஸ்திரத்தில் நிபுணராக விளங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதாநாயகியின் குடும்பத்துக்குக் கைரேகை பார்க்கப்போய், காதலில் விழுந்து, எழும் ஆக் ஷன் காதல் காவியம். படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்த பிரபாஸ், “நானொரு சென்னை பையன். இங்கே பிறந்து வளர்ந்தவன். இனி எல்லா மொழிக் கதாநாயகர்களும் இந்தியா முழுமைக்குமான கதையில் நடித்தாகவேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. இது ஆரோக்கியமான சினிமா வியாபாரத்துக்கு வழி வகுத்திருக்கிறது” என்று உற்சாகமாகப் பேசினார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இப்படத்தை தமிழ் நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
மாளவிகாவின் அனுபவம்!
தனுஷ் - மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாறன்’. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடியில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கதாநாயகனை எதிர்பார்க்காமல் கேரளத்திலிருந்து தனியாக வந்து, நாளிதழ் செய்தியாளர்களை மட்டும் சந்தித்து உரையாடினார் படத்தின் நாயகி மாளவிகா. ” இந்தப் படத்தில் போட்டோ ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியின்போதும் சக நடிகர்களுக்கு நடிப்புச் சொல்லித் தருவதில் தனுஷுக்கு நிகர் அவர் மட்டும்தான். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் ஒரு மாஸ்டர் கிளாஸ்” என்று தனது படப்பிடிப்பு அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார். ஒவ்வொரு கேள்விக்கும் நீளமான பதில்களைச் சொல்லி செய்தியாளர்களை மூச்சிரைக்க வைத்தார்.
பிரம்மாண்டக் கூட்டணி!
மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் தன்னுடைய 15-வது படமாக தயாரிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பஹத் ஃபாசில் இணைந்திருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தேனி ஈஸ்வர், ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான இசை என கூட்டணி பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இப்படத்துக்கு ‘மாமன்னன்’ எனத் தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
நகைச்சுவை ஆக் ஷன்!
எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அதில் ஜெல்லிபோல் ஒட்டிக்கொண்டுவிடும் ஆற்றல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உண்டு. அவரைத் தேடி பெண் மையக் கதைகள் வரத்தொடங்கிவிட்டன. தற்போது, நகைச்சுவை ஆக் ஷன் கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் - ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இவர் ‘லாக்கப்’ படத்தை இயக்கியவர். ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் இன்னொரு நாயகி ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படப் புகழ் லட்சுமி பிரியா. இவர்களுடன் கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.