“‘சூர்யா சாரை இப்படிலாம் பார்க்கணும்பா’ன்னு எனக்குள்ள ஒரு ஆசை இருக்குமில்ல, அதைப் பண்ணியிருக்கேன். ஃபைட்டா இருக்கட்டும், காதல் காட்சியா இருக்கட்டும், எல்லோருக்கும் பிடிக்கிற பையனா, பெண்களுக்கு பிடிக்கிற அண்ணனா, தம்பியா, ஒரு மகனா, நண்பனா, மச்சினனா...
அப்படியொரு கேரக்டரை அவருக்காகச் செஞ்சிருக்கேன். பொதுவா ஹீரோக்களுக்கு கதை செய்வாங்கள்ல, அப்படி பண்ணியிருக்கேன், அவர் கேரக்டரை”- மகிழ்ச்சிப் பொங்கப் பேசுகிறார் விரைவில் வெளியாகவிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருக்கும் பாண்டிராஜ். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தவர், வேலையை ஒதுக்கி வைத்துவிட்டுப் பேசினார்.
உண்மைச் சம்பவக் கதைன்னு சொல்றாங்களே?
இந்தப் படத்தோட கதையை, ஒரு ஊர்ல நடந்த கதைன்னு சொல்லிட முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கிட்டு அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு இதுல நான் சொல்லலை. இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்துட்டுத்தானே இருக்கு. அதைதான் சொல்றோம். அதே நேரம், பெண்களை தவறாகப் பயன்படுத்த நினைக்கிறவங்களுக்கு ஒரு பயத்தை கொடுக்கிற படமா இது இருக்கும். எல்லா ஊருக்குமான கதையா இருக்கறதாலதான், ‘பான் இந்தியா’ படமா ரிலீஸ் பண்ணலாம்னு அதுக்கான வேலைகள்ல இறங்கினோம்.
சூர்யா என்ன கேரக்டர் பண்றார்..?
பெண்களுக்கு எதிரா நடக்கிற அநீதியைத் தட்டிக் கேட்கிற வேலையை ஹீரோ செய்றார். அதை எப்படி செய்றார்ங்கறதுதான் கதை. இது அழகான கமர்சியல் படம்னு சொன்னாலும் அதை அப்படிச் சாதாரணமாகக் கடந்து போயிட முடியாது.பெண் குழந்தைகளை பெத்தவங்க எப்படி வழி நடத்தணும், எப்படி கவனிச்சுக்கணும்னு இந்தப் படம் பேசும். எப்படி மத்தவங்களை நம்பணும்னு பெண்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கிற படமாகவும் இருக்கும்.
சூர்யாவோட இது உங்களுக்கு இரண்டாவது படம்...
என் இயக்கத்துல அவர் நடிச்ச ‘பசங்க 2’ படத்தை மறந்துட்டேன். அதுல அவர் கெஸ்ட் ரோல்தான் பண்ணினார். சூர்யா சாரோட என் முதல் படமா இதைத்தான் பார்க்கிறேன். அப்படி நினைச்சுதான் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிச்சு ரசிச்சு பண்ணியிருக்கேன்.
படத்தின் டீசரைப் பார்த்தால், ஆக் ஷன் அதிகம் இருக்கும் போல் தெரியுதே?
ஆக் ஷன் மட்டுமே படமில்லை. எப்பவும் என் படங்கள்ல குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஒரு கல்யாணத்துக்கு போனா எப்படி சந்தோஷமா இருக்குமோ, ஊர்ல ஒரு திருவிழா நடந்தா எப்படி கலகலப்பா இருக்குமோ, அப்படியொரு கொண்டாட்ட மனநிலையை இந்தப் படம் கொடுக்கும்.
இந்தப் படத்தின் கதையை எழுதும்போது 10 கேரக்டருக்கு மேல இருக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணித்தான் ஆரம்பிச்சேன். திரைக்கதை எழுதும்போது நிறைய கேரக்டர்கள், தானாவே உள்ள வந்திருச்சு. தவிர்க்க முடியலை. இதுல சத்யராஜ், சரண்யா, இளவரசு, சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இதை குடும்பப் படம்னு சொல்ல முடியாது. ஆனா, குடும்பங்களுக்கான படமா இருக்கும்.
ஒரு பாடல்ல சூர்யாவை, முருகரா மாற்றியிருக்கீங்களே?
‘கந்தன் கருணை’ படத்தில் சிவகுமார் சாரை முருகன் தோற்றத்துலப் பார்த்தபோது, எனக்கு சூர்யா சாரையும் அப்படி காண்பிக்கணும்னு ஆசை. முருகரை மட்டுமே வச்சு ஒரு பாடல் பண்ணலாமான்னு தோணுச்சு. பிறகு முருகரையே வேடனா, அரசனா காண்பிக்கிற மாதிரி பாடல் பண்ணினோம். பொதுவா என் படங்கள்ல பாடலுக்குன்னு நான் செட் போட்டதே இல்லை. இந்தப் பாடலுக்காக பிரம்மாண்ட செட் போட்டு ‘உள்ளம் உருகுதய்யா’ பாடல் எடுத்தோம்.
பிரியங்கா அருள் மோகன் என்ன பண்றாங்க?
டாக்டருக்குப் படிக்கும் பெண்ணா வர்றாங்க. அவங்க கேரக்டர் பெயர் ஆதினி. பொதுவா என் படங்கள்ல நாயகிகள் எல்லாருமே போல்டான கேரக்டராகத்தான் இருப்பாங்க. இந்தப் படத்துலயும் அப்படித்தான். தன்னம்பிக்கையோட, எதையும் எதிர்கொள்கிற தைரியத்தோட இருக்கிற நாயகியா, வர்றாங்க. நடிப்புல மிரட்டி இருக்காங்க.
காரைக்குடியில ஒரு ஹோட்டலை வீடா மாத்திட்டீங்களாமே?
என் படத்துல கூட்டம் அதிகமா இருக்கும். கல்யாணம், திருவிழா மாதிரி காட்சிகள்ல நிறைய பேரை காண்பிக்க வேண்டி வரும். கரோனாவால கூட்டங்களை சேர்க்க முடியலை. ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது சூர்யா சாருக்கு கரோனா பாதிப்பு. படத்துல 44 ஆர்ட்டிஸ்ட் நடிச்சிருக்காங்க. இதுல ஒருத்தருக்கு கரோனா வந்தாலே, சிக்கல் ஆகிடும். அதனால காரைக்குடியில ஒரு ஹோட்டலையே வீடாக்கி, நாங்க மட்டுமே அங்க தங்கினோம். வேற யாரையும் அங்க தங்க விடலை. ஓட்டலுக்கு பின்னாலயே செட் போட்டு ஷூட் பண்ணினோம். இது வேற மாதிரி அனுபவமா இருந்தது.
உங்களோட ‘பசங்க புரொடக் ஷன்ஸ்’ சார்பாக படங்கள் தயாரிச்சுட்டு இருந்தீங்களே?
ஆமா. ‘எதற்கும் துணிந்தவன்’ எனக்கு பெரிய பட்ஜெட் படம். பொறுப்புகள் அதிகமாக இருந்தது. கண்டிப்பா ஜெயிச்சே ஆகணும் அப்படிங்கற நிலை. அதனால படம் தயாரிக்கிறத கொஞ்சம் தள்ளி வச்சிருக்கேன். இனி அதைத் தொடங்கணும். வெப்சீரிஸ், ஓடிடி-ன்னு சினிமா இன்னைக்கு வேறொரு தளத்துக்கு வந்துடுச்சு. இன்னும் ரெண்டு வருஷங்கள்ல குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் தியேட்டர்ல போய் பார்ப்பாங்க. சில படங்களை ஒடிடி மூலமா பார்ப்பாங்க. அதனால இனி தியேட்டர்லதான் என் படம் ரிலீஸ் ஆகணும்னு சொல்லிட்டு இருக்க முடியாது. நாம எல்லாத்துக்கும் தயாராகணும். நானும் அதற்குத் தயாராகிட்டு இருக்கேன்.