கேபிஏசி லலிதா (73) காலமாகிவிட்டார். கேரளத்தைப் பொறுத்தவரை இது ஒரு நடிகையின் மரணமல்ல. தங்கள் குடும்பத்தில் ஒரு அக்கா, சித்தி, அம்மா, பாட்டியின் மரணம்.
இப்படியான ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக லலிதாவின் குரல் கேரள வீடுகளிலெல்லாம் தினமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மரணச் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் வேளையிலும் லலிதாவின் குரலில் ஏதோ ஒரு வசனம் மலையாளிகளின் அன்றாடத்துக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும். அது சாந்த செரூபிணியான ‘ஷாந்தம்’ நாராயணியின் குரலாகவோ அடவாடி அம்மாவான ‘கோட்டயம் குஞ்சச்சனி’ன் ஏலியம்மாவாகவோ நகைச்சுவை ஊட்டும் ‘மணிச்சிரத்தாழு’வில் பசுராயாகவோ இருக்கும். அந்த அளவுக்கு வேறுபட்டக் கதாபாத்திரங்களால் கேரளக் குடும்பங்களுக்குள் ஒருவரானவர் லலிதா.
லலிதா, கேரளக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக் கழகமான ‘கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்’ வழி வந்தவர். அன்றைய காலகட்ட நடிகைகள் பலரையும் போல் லலிதாவின் குழந்தைப் பருவமும் வறுமையிலானதாகத்தான் இருந்தது. அவர் தந்தைக்கு வேலை பார்க்க முடியாதபடியான உடல் பலவீனமடைய, சிறு வயதிலேயே குடும்பப் பாரத்தை ஏற்றிருக்கிறார் லலிதா.
வாழ்வின் பிரதிபலிப்பு
லலிதாவின் சினிமா வாழ்க்கையை 1980-களுக்கு முன்பு, பின்பு என இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். லலிதா தன் சினிமா வாழ்க்கையை கே. சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘கூட்டுக்குடும்பம்’ என்கிற படத்தில் தொடங்கினார். கஷ்டப்பாடுகள் உள்ள ஒரு இளம் தாயாக அதில் லலிதா தோன்றியிருப்பார். கிட்டதட்ட அவரது நிஜ வாழ்க்கையை பிரபலிக்கும் கதாபாத்திரம் அது. தொடர்ந்து சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் அவரும் பாகமாக ஆனார். தோப்பில் பாசியின் ‘நிங்களென்ன கம்யூனிஸ்டாக்கி’ என்கிற படத்திலும் பங்களித்திருந்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் கதையில், சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ படத்திலும் லலிதா அங்கம் வகித்துள்ளார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரத்தி’லும் நடித்துள்ளார். இது போல சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் மலையாளத்தின் முக்கியமான படங்களின் அங்கமாக இருந்தார் லலிதா. 1978-ல் வெளிவந்த அடூரின் ‘கொடியேற்றம்’ படத்தில் பரத் கோபியின் மனைவியாக நடித்திருப்பார். 1990-ல் வெளியான ‘மதிலுக’ளில் ஒலித்த நாராயணியின் குரலுக்கான சுவாரசியம் ஊட்டும் உருவத்தைக் கண்டதுபோல் இருக்கும் ‘கொடியேற்ற’த்தில் சாந்தம்மா.
கலைப் பயணம்
பரதன் இயக்கத்தில் ‘அரவம்’ என்ற படத்தில் பிரதாப்போத்தன் இணையாக லலிதா நடித்திருப்பார். ஆனால் இது படுதோல்வியடைந்தது. அதற்குப் பிறகு 80-ல் வெளிவந்த பரதனின் ‘காற்றத்தெ கிளிக்கூடு’ லலிதாவுக்கு வெற்றியைத் தந்தது. ரேவதியின் அத்தையாக நடித்திருப்பார். காதல் தோல்வியால் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் இருக்கும் பெண். அவளது வீட்டுக்கு வரும் காதல் நிரம்பிய அவளது சகோதரர் மகளாக ரேவதி. இந்த முரணை லலிதா பாவனைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இயக்குநர் சத்யன் அந்திக்காடு படங்கள் லலிதாவின் சினிமா பயணத்தில் முக்கியமானவை. சத்யனின் ‘அடுத்தடுத்து’வில் தொடங்கிய இருவரின் பயணம் பல நல்ல சினிமாக்களுக்குக் காரணமாக ஆனது. ‘டி.பி. பாலகோபாலன் எம்.ஏ.’வில் குழந்தை குட்டிகளுடன் அம்மாவீட்டோடு இருக்கும் அக்காவாக, ‘சன்மனசுள்ளவர்க்கு சமாதான’த்தில் வாடகை வீட்டைக் காலிசெய்ய மறுக்கும் மகளின் அம்மாவாக, ‘பொன் முட்டையிடுந்ந தாராவு'வில் காதலியின் காரியக்கார அம்மாவாக, ‘வீண்டும் சில வீட்டு கார்யங்க’ளில் மேரிப் பெண்ணாக சத்யனின் படத்தில் கலந்திருப்பார் லலிதா. “நாயகன்கூட முக்கியமில்லை. ஆனால், லலிதா சேச்சி இல்லாமல் இந்தப் படங்களை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என சத்யன் சொல்லியிருக்கிறார்.
குணச்சித்திர அடையாளம்
லலிதாவை மற்ற குணச்சித்திர நடிகர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம், அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர். கேரளத்தில் அம்மாவின் திரு உருவாக மனங்களில் நிறைந்து இருப்பவர் கவியூர் பொன்னம்மா. இவர் பெரும்பாலான படங்களில் பாசத்தைப் பொழியும் ஒரு நல்ல அம்மாவாக நடித்திருக்கிறார். இதிலிருந்து லலிதாவை வேறுபடுத்திப் பார்க்கலாம். லலிதாவும் கடிந்து ஒரு வார்த்தைகூடப் பேசாத அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அதே சமயத்தில் “போடா நாரி” எனப் பெத்த மகனை வசைபாடும் ஒரு அடாவடித் தாயாகவும் நடித்திருக்கிறார். இந்த இடத்தில் அவர் கேளரத்து மக்களின் வீட்டுக்குள் ஒருவராகிறார். ஆனால், கவியூர் பொன்னம்மாவையோ சுகுமாரியையோ இந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது.
இதுபோல் பாலியல் தொழிலாளியாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். சிபி மலயிலின் இயக்கத்தில் வெளிவந்த ‘சதய’த்தில் ஒரு மோசமான பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். தன் சகோதரியின் மகளை பாலியல் தொழிலுக்குள் இழுக்கும் குரூரத்தை ஒரு வெற்றிலைக் குதப்பலில் காண்பித்திருப்பார். அதுபோல் ‘கனல்காற்றில்’ மம்மூட்டியை மணக்க விரும்பும் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். பத்மராஜனின் ‘பெருவழி அம்பலத்தி’லும் அடூரின் ‘சுயம்வரத்தி’லும் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். ஆனால், அவர் குணச்சித்திர நடிகையாக, கேரள மக்களின் வீட்டில் ஒருத்தியாக புகழ்பெற்றிருந்த சமயத்தில் ‘சதயத்தி’லும் ‘கனல்காற்றி’லும் இப்படித் துணிச்சலான முயற்சியை எடுத்து வெற்றி கண்டிருக்கிறார்.
லலிதாவின் வசன உச்சரிப்பு சிறப்பானது. அதற்குச் சிறந்த உதாரணம் ‘மதிலுகள்’. ‘அனியத்திப் பிராவி’ல் (தமிழில் ‘காதலுக்கு மரியாதை’ ) தன் பேத்தியை அவள் காதலனுக்கே விட்டுத் தரும் இடத்தில் ‘எடுத்தோ எடுத்தோண்டு போய்க்கோ’ என அவர் உச்சரிக்கும் அந்த வசனம்தான் அந்த முழு நீளப் படத்தின் ஜீவன்.
ப்ரியமுள்ள மங்கை
லலிதா - இன்னசென்ட் இணை கேரளத்தில் மிகப் பிரபலமானது. ‘மணிச்சித்திரத்தாழ்’ ‘கஜகேசரியோகம்’, ‘கோட் ஃபாதர்’, ‘பொன் முட்டையிடுந்ந தாராவு’ உள்ளிட்ட பல படங்களில் இந்த இணையின் கூட்டுக்கட்டு மலையாளிகள் விரும்பும் ஒன்றாக இருந்துள்ளது. இதில் லலிதாவின் நகைச்சுவை நடிப்பின் சிறப்பைப் பார்க்க முடியும். ‘காட் ஃபாத’ரில் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தும் தம்பதியராக இவர்கள் நடித்திருப்பார்கள். கல்யாணத்தை விரும்பாத அப்பா அதைக் கண்டுபிடித்ததும் கணவர் மனம் மாறிவிடுகிறார். தன் கணவரைக் கை பிடிக்க அவர் ஒரு சன்னதம் ஆடுவார். இந்தப் படத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட், கோபம் எனப் பல உணர்ச்சி நிலைகளை லலிதா சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கதாபாத்திரக்கு ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது நடிகர் இன்னசென்ட், “இதில் லலிதா இல்லாமல் வேறு யாரால் நடிக்க முடியும்?” எனக் கேட்டாராம்.
‘ஜீவிதம் அழகானது. அதைத் தன் நடிப்பால் கூடுதல் அழகாக்கியவர் லலிதா’ என மோகன்லால் சொல்லியிருக்கிறார். ஆனால், இயக்குநர் பரதனின் திருமணம் அவரது ஜீவிதத்தை ஒரு சோக சினிமாவாக ஆக்கியது. பரதன் விட்டுச் சென்ற கடனும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடமையுமாக முன்னேறி வெற்றியும் கண்டார் லலிதா. அடூரின் இயக்கத்தில் வெளிவந்த வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ சினிமாவில் நாராயணிக்குக் குரல் தந்தவர் லலிதா. அதில் நாராயணி பஷீருடம் கேட்கிறார், “நான் இறந்தால் என்னை நினைச்சுப்பாப்பீங்களா?”
“ப்ரியமுள்ள நாராயணி. நினைப்பேன். நாராயணியின் அடையாளம் இந்த பூமியில் எங்கும் உண்டு” என்பார் பஷீர். இது கே.பி.ஏ.சி. லலிதாவுக்கும் பொருந்தும்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்.