ஏப்ரல் 24: ஜெயகாந்தனின் 82-வது பிறந்ததினம்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஞானபீட விருது பெற்றவருமான மறைந்த ஜெயகாந்தன், பன்முகங்கள் கொண்டவர். ‘உன்னைப் போல் ஒருவன்’ போல மாற்று சினிமா என்று சொல்லக்கூடிய திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவர். வர்த்தக சினிமாவின் எந்த அம்சங்களோடும் சமரசம் செய்யாமல், ஒரு எழுத்தாளனாகக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் களமிறங்கியவர் ஜெயகாந்தன். 1965-ல் வெளியாகி தேசிய விருதையும் வென்ற திரைப்படம் அது.
ஜெயகாந்தன் தனது திரையுலக வாழ்க்கையில், காலத்தில் அழியாத அருமையான திரைப்பாடல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களை இந்தோ-ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகம் தனி ஆல்பமாக வெளியிடும் முயற்சியில் உள்ளது.
ஒரு ஏகாந்தமான பகல் பொழுதைத் தனது குரலிலேயே நிகழ்த்தும் பி.பி.னிவாஸ் பாடிய ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ பாடலை எழுதியவர் ஜெயகாந்தன்தான். ‘பாதை தெரியுது பார்’ படத்துக்காக இசையமைப்பாளர், ஜெயகாந்தனை வற்புறுத்தி எழுதவைத்த பாடல் இது. எம்.எஸ்.வி. குரலில் நாகேஷ் எழுத்தாளராகக் கதாபாத்திரமேற்றுக் கம்பீரமாகப் பாடும் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ பாடலை எழுதியதும் ஜெயகாந்தன்தான். அந்தக் கதாபாத்திரம் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரின் கம்பீர வாக்குமூலம்தான்.
கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் -இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
ஜெயகாந்தன் எழுதிய பாடல்களுக்கு எம்.பி.னிவாசன், வீணை சிட்டிபாபு, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர். ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
புதுக்கவிதையை எதிர்த்தவர் ஜெயகாந்தன். மரபுக்கவிதையின் சந்தம் மற்றும் அதன் உள்ளடக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கம்பன், பாரதி தொடங்கி சித்தர் பாடல்கள் வரை தனது நண்பர்களுடன் வாழ்க்கை முழுக்க அசைபோட்டபடி இருந்தவர். அவரது பாடல் இயற்றும் திறனுக்கு அடிப்படை அவரது மரபுக் கவிதை ஞானமாக இருந்திருக்க வேண்டும்.
ஜெயகாந்தன் இயக்கிய அரிய திரைப்படமான ‘உன்னைப் போல் ஒருவன்’படத்தை இந்த தலைமுறையினர் பார்ப்பதற்கு அதன் ஒரு பிரதிகூட கைவசமில்லை. ஜெயகாந்தன் பங்குபெற்ற திரைப்படங்களையும் ஆவணப்படுத்துவது அவசியம்.