சியான் விக்ரமின் 60-வது படமாக அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘மகான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கிறார் அவருடைய மகன் துருவ் விக்ரம். அவருடன் ஒரு மினி பேட்டி.
இவ்வளவு சீக்கிரம் எதற்காக அப்பாவுடன் ஒரு படம்?
அப்பாவுடன் சேர்ந்து படம் செய்ய ஒரு பத்து வருடமாவது ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அதை கார்த்திக் சுப்புராஜ் தகர்த்துவிட்டார். ‘மகான்’ படத்தின் கதையை அவர் சொன்னதுமே அது எங்கள் இருவருக்கும் கச்சிதமாகப் பொருந்தியதை உணர்ந்தோம். அப்படித்தான் இந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு அமைந்தது. இது அப்பாவுடைய 60-வது படம். அதற்குரிய கெத்து அவருடைய கேரக்டருக்கு இருக்கிறது. இது அவருடைய ரசிகர்களுக்கான படம்தான். இது அப்பா - மகன் கதை என்பதால் நான் தேவைப்பட்டேன். எனக்கொரு சிறிய பங்கு இருக்கிறது.
சினிமா இயக்கம் படித்து திரும்பியவர் நீங்கள். அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?
நிச்சயமாக இருக்கிறது. அப்பாவும்கூட ‘நல்ல கதை எழுது, படங்களை டைரக்ட் செய்.. நிறைய அனுபவங்களைக் பெற்றுக்கொள். அதன்பின்னர் எனக்கும் கதை எழுது. நிச்சயமாக நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
படத்தில் வில்லனாக நடித்திருக்கிறீர்கள் என்று செய்திகள் வெளியானதே?
அவருக்கு ‘ஆப்போஸிட் கேரக்டர்தான் செய்திருக்கிறேன்’. ஆனால், அது வில்லன் கதாபாத்திரமா என்பதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்யவேண்டும். Iஇதுவொரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கத்திமேல் நடக்கிற மாதிரியான விஷயங்களை இந்தக் கதாபாத்திரத்தில் செய்திருக்கிறேன். ‘காந்தி மகான்’ என்கிற ஒரு மனிதனுடைய சுவாரஸ்யமான வாழ்க்கைப் பயணம்தான் கதை.
உங்கள் அப்பாவைப் போல் ‘வெர்சடைல்’ கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அப்பா அளவுக்கு வெர்சடைல் நடிகனாக இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. கொஞ்சமாவது முயற்சி செய்வேன். கமர்ஷியல், மாஸ் படங்களில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. நல்ல படங்கள் பண்ண வேண்டும். அவற்றில் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும் என்பது மட்டும்தான் இப்போதைக்கு எனது எண்ணம். இதை நான் மட்டும் முடிவு செய்தால் போதாது; எனக்கு நல்ல கதைகள் கிடைக்க வேண்டும். இந்தப் படத்துக்குப் பின் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அழகான காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதும் எனது விரும்பம். ஆனால், அதில் கேரக்டர் இருக்க வேண்டும்.
உங்கள் அப்பாவுடைய எந்தப் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள்?
‘பீமா’ எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ரீமேக் செய்தால் அதில் நடிக்க விரும்புகிறேன்.