அருள்நிதி ஐபிஎஸ்!
தொடர்ந்து த்ரில்லர் வகைப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அருள்நிதி. அவருடைய நடிப்பில், அரவிந்த் நிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தேஜாவு’ தமிழ் சினிமாவுக்கு புதுவகை த்ரில்லராம். நேற்று இந்தப் படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். டீசரை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். படத்தில், காணாமல்போன ஒருவரைக் கண்டுபிடிக்கும் வழக்கு ஒன்றினைப் புலன் விசாரணை செய்யும் ஐபிஎஸ் அதிகாரியாக அருள்நிதி நடித்திருக்கிறார். குற்றவாளியை அருள்நிதி எப்படி நெருங்குகிறார், அதற்கும் ‘தேஜாவு’ என்கிற அடிக்கடி எதிர்கொள்ளும் உள்ளுணர்வுகளுக்கும் என்ன தொடர்பு என்பதை, நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான ஒரு சதுரங்க ஆட்டம்போல் மூன்று அடுக்குகளில் கதை சொல்லி அசத்தியிருக்கிறாராம் இயக்குநர்.
மனிதர்களின் கதை!
பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் குடியரசு தின வெளியீடு என அறிவிக்கப்பட்ட விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ உட்பட சில படங்கள் பின்வாங்கிவிட்டன. இந்நிலையில் இன்று துணிந்து வெளியாகிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம். தலைப்பு சர்ச்சையில் சிக்கிய இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார். அசோக் செல்வன், ரித்விகா, அபி ஹாசன், அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. மொத்தம் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள். விபத்தொன்றில் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தபடும் அந்த நால்வருடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றத்தை அது கொண்டுவருகிறது என்பதுதான் திரைக்கதை. இது நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களைப் பற்றிய கதை.” என்கிறார் இயக்குநர்.
ரத்தமும் தாடியும்!
தன்னுடைய படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருபவர் விஜய் ஆண்டனி. அவர் ஏற்கெனவே ‘ரத்தம்’ என்கிற தலைப்பை பதிவு செய்திருந்தார். இந்த சமயத்தில் ‘தமிழ் படம்’ புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் சொன்ன கதை விஜய் ஆண்டனிக்குப் பிடித்துப் போய்விட, ‘இந்தக் கதைக்கு எங்கிட்ட ஒரு தலைப்பு இருக்கு.. அதையே வெச்சிடலாமா?’ என்று கேட்டுள்ளார் விஜய் ஆண்டனி. நாயகன் கேட்டு மறுக்கமுடியாமல் ஓகே சொல்லியிருக்கிறார் அமுதன். தன்னுடைய ‘க்ளீன் ஷேவ்’ தோற்றத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகைகளைப் பெற்றுள்ள விஜய் ஆண்டனி, இதில் தாடியுடன் வருகிறார். மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என படத்தில் மூன்று கதாநாயகிகள்.
மீண்டும் ரியா சுமன்!
ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சுமன். அதன்பிறகு ராதா மோகனின் ‘மலேசியா டு அம்னிசியா’ படத்திலும் தோன்றினார். இரண்டு படங்களும் கைகொடுக்காத நிலையில், தற்போது சந்தானம் நடிக்க, மனோஜ் பீதா இயக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகியிருக்கிறார். இதற்கிடையில் ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மன்மத லீலை’ படத்திலும் ரியா சுமனுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்.
தூக்கலான ஹீரோயிசம்
‘சிங்கம்’ வரிசைப் படங்களில், போதும் போதும் என்கிற அளவுக்கு சூர்யாவுக்கு ஹீரோயிசம் இருந்தது. அதன்பின்னர், கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. தற்போது, தன்னுடைய மாஸ் மசாலா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறும்போது, ‘சூர்யாவுக்கு படத்தில் ஹீரோயிசம் சற்று தூக்கலாக இருக்கும். இது மாஸ் மசாலா விரும்பிகளுக்காகவே எடுக்கப்பட்டிருக்கும் படம்.’ என்று தெரிவித்திருக்கிறார்.