“அறிமுக நடிகர்களும் அறிமுக இயக்குநரும் இணையும் ஒரு படத்தில் கதையும் திரைக்கதையும்தான் ‘ஸ்டார் வேல்யூ’ போன்றது. ஒரு தவம்போல் 2 ஆண்டுகள் எடுத்துகொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன். 50 நாட்களில் ஒரு ‘நியூஜென் த்ரில்லர்’ படத்தை உருவாக்கிவிட்டோம்” என்று பேசத் தொடங்கினார் ‘யாரோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சந்தீப் ராய். அவருடன் ஒரு சிறு உரையாடல்...
‘யாரோ’ யாருக்கான படம்?
இரண்டரை மணிநேரம் சீட்டின் நுனியில் அமர்ந்து நகம் கடித்தபடி படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் படத்தை ‘டெடிக்கேட்’ செய்ய விரும்புகிறேன். இன்று, ஓடிடி தளங்களில் சப் -டைட்டிலுடன் கோடிக்கணக்கில் சுவாரஸ்யமான படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது நமது படத்தில் ரசிகர்கள் விரும்ப வலுவான அம்சங்கள் இருக்க வேண்டும். படத்தில் ஒரு காட்சி தொய்வடைந்தாலும் ரசிகர்களின் கோபம் அடுத்த நிமிடம் சோசியல் மீடியாவில் பிரதிபலிக்கும். அதற்கு இடம் கொடுக்கும் படம் தோற்றுவிடுகிறது. அதற்கான சவாலை ஏற்றிருக்கிறோம். அதனால்தான் இதை ‘நியூ ஜென் த்ரில்லர்’ என்கிறேன்.
கதை என்ன, எங்கே நடக்கிறது?
சென்னையில் என்றைக்கும் அழகும் பிரம்மிப்பும் ஏன் மர்மமும் கூட குறையாத இடங்களில் ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலை. வீக் எண்ட் பார்ட்டிகளின் உலகம் அது. தமிழ் சினிமா அதைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கிழக்குக் கடற்கரை சாலையிலும் கடற்கரையை ஒட்டிய பல இடங்களிலும் 50 நாட்கள் படம் பிடித்திருக்கிறோம். கதையில் ஒரு பேயும் உண்டு, உளவியல் பிரச்சினை கொண்ட கதாநாயகனும் உண்டு.‘பார்ட்டி மேனியா’வுடன் வாழ்வதே வாழ்க்கை எனத் திரியும் பலர் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது பேயா, மனிதனா என்பதை நோக்கி திரைக்கதை விரையும். படத்தில் வில்லனே கிடையாது. ஆனால், இன்று எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்சினை படத்தில் வில்லனாகியிருக்கிறது.
நடிகர்களைப் பற்றிக் கூறுங்கள்..
நான் ஐடி துறையில் பணிபுரிந்தபடி பல குறும்படங்களை இயக்கினேன். எல்லாமே த்ரில்லர் படங்கள். என்னைப்போலவே ஐடி துறையில் பணியாற்றிவரும் வெங்கட் ரெட்டியை ஒரு குறும்படத் திரையிடலில் சந்தித்தேன். அவர் திரையில் நடிகராகும் கனவுடன் நடிப்புப் பயிற்சி உள்ளிட்ட பலவற்றில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, நல்ல கதையைத் தேடிக்கொண்டிருந்தார். படத்தையும் அவரே தயாரிக்கத் தயாராக இருந்தார். என்னிடம் ‘யாரோ’ கதையைக் கேட்டதுமே ‘இது எனக்கானது’ என இறங்கிவிட்டார். இந்தப் படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திர மாற்றங்களுக்காக 15 கிலோ எடையை ஏற்றியும் குறைத்ததும் இல்லாமல் நடிப்பிலும் அட்டகாசம் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு உபாசனா எனும் அட்டகாசமான கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறோம்.