எவ்வித அடைமொழியும் இல்லாமல் சினிமாவில் இருக்கிறீர்களே என்றால் “அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. சரவணனில் இருந்து சூர்யாவாக மாறியிருக்கிறேனே... இதுவுமே அடைமொழிதானே!” என்று சிரிக்கிறார் ‘24' படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் சூர்யா.
நீங்கள் நடித்த படங்களிலிருந்து ‘24' எந்த விதத்தில் மாறுபடுகிறது?
விக்ரம் குமாரின் முந்தைய படங்களைப்போல ‘24' இருக்காது. இதில் எனக்கு 3 தோற்றங்கள். அவற்றை எவ்வளவு பட்ஜெட்டில் எடுத்திருக்கோம் என்பதைவிட படத்தைத் திரையரங்கில் பார்க்கும்பொழுது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு சில படங்கள் மனதில் தங்கிவிடும். போகவே போகாது. வேறு சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும். மனதில் நிற்கும் என்று சொல்ல முடியாது. எனக்கு ‘நாயகன்', ‘மைக்கேல் மதன காமராஜன்', ‘பேசும் படம்', ‘சலங்கை ஒலி' போன்ற கமல் சாரின் படங்கள் மனதில் என்றைக்கும் இருக்கும். இந்தமாதிரி புது முயற்சிகளை மக்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு படமாக இது இருக்கும்.
ஹாலிவுட்டில் டைம் ட்ராவல் படங்கள் நிறைய வந்துவிட்டன. டைம் ட்ராவல் என்பது ஒரு ஐடியாதான். அதை வைத்துக்கொண்டு, பார்ப்பவர்களை ஒரு புதிய இடத்துக்கு எப்படிக் கொண்டுபோகிறோம் என்பதுதான் முக்கியம். இப்படத்தில் கருத்தெல்லாம் சொல்லவில்லை. ஆனால் படம் வாழ்க்கையைப் பற்றியது. எல்லோருக்கும் நீண்ட நாள் வாழணும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வயதானவர்களாக வாழ விரும்ப மாட்டார்கள். இதுதான் என்னைப் பொறுத்தவரை இப்படத்தில் உள்ள கருத்து.
மூன்று வேடங்களில் நடித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?
முதன் முறையாக மூன்று கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறேன். மூன்றுமே மிகவும் வித்தியாசமானவை. ஆத்ரேயா கதாபாத்திரம் இயக்குநருக்கு மிகவும் பக்கபலமானது. மணி கதாபாத்திரம் ரசிகர்களைக் கவரக்கூடியது. சேதுராமன் கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கக்கூடியது. இம்மாதிரியான கதைகள் எனக்கு வரும்போது மறுக்க முடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு இதைப் பண்ண முடியாது என்று என்னால் இம்மாதிரியான கதைகளை ஒதுக்க முடியவில்லை.
படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஆத்ரேயா. கிட்டத்திட்ட ஒரு வில்லன்தான். அவனுடைய தேடல்தான் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போகும். இயக்குநர் கதையை என்னிடம் சொல்லும்போது பல நேரம் ஆத்ரேயாவாக மாறிவிடுவார். இந்தக் கதாபாத்திரம் கோபமும், புத்திசாலித்தனமும் கலந்தது. இதில் நடித்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆத்ரேயா கதாபாத்திரத்துக்கான ஒப்பனைக்கே சுமார் இரண்டு மணி நேரம் ஆனது, ஸ்கல் கேப் என்ற ஒரு விதமான ஒப்பனைக்கு அதிக நேரம் பிடித்தது.
தொடர்ச்சியாகப் பெரிய முதலீட்டுப் படங்களையே தேர்வு செய்வது ஏன்?
இந்தி நடிகர்களுக்குப் பெரும் முதலீட்டில் படங்கள் நடிக்கும் வாய்ப்பு தாராளமாக கிடைக்கிறது. தமிழ் நடிகர்களுக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை. மலையாள இயக்குநர்களிடமிருந்து நல்ல கதைகள் கிடைக்கின்றன. தமிழ் இயக்குநர்களும் வழக்கமான கதைக்களங்களைத் தாண்டிப் படம் தருகின்றனர். ஆனால், அவை குறைந்த பட்ஜெட் முயற்சிகளாக மட்டுமே இருக்கின்றன. பெரிய பட்ஜெட்டில், பலதரப்பட்ட கதை பின்புலத்தில் தமிழ்ப் படங்கள் வருவது அரிதினும் அரிதாக இருக்கிறது. விக்ரம் குமாரின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி ரசிகர்களுக்குப் புதுவித அனுபவத்தைத் தர விரும்புவதுதான் உண்மையான காரணம்.
உங்களுக்கும் விஜய்க்கும் இடையேயான நட்பு பற்றி..
எங்கள் நட்பு இப்போதும் வலுவாக இருக்கிறது. என் மனைவி ஜோதிகா, விஜய் மனைவி சங்கீதா, அஜித் மனைவி ஷாலினி எப்போதும் நட்புடன் பழகிவருகிறார்கள். விஜய்யின் 40-வது பிறந்தநாளையொட்டி நாங்கள் சந்தித்துக்கொண்டோம். எனது 40-வது பிறந்தநாளின்போது விஜய் வந்து வாழ்த்தியதில் எனக்கு மகிழ்ச்சி. எப்போதெல்லாம் விஜய் படம் எனக்குப் பிடிக்கிறதோ அப்போதெல்லாம் அவருக்கு மறவாமல் வாழ்த்து மெசேஜ் அனுப்புவேன். அதுபோல் எங்கள் கல்லூரி நட்பு வட்டம் இன்னும் இணைப்பில் இருக்கிறது.
ரசிகர்கள் மோதல் என்பது சமூக வலைத்தளத்தில் அதிகரித்துவிட்டதே?
சில நேரங்களில் ரசிகர்களை நினைத்து வருந்தியிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்குக் கையில் கிடைப்பது வெறும் 24 மணிநேரம் மட்டுமே. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும். 25 வயதை எட்டுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தனக்கான இலக்கை வகுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். இந்த உலகத்தில் வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. எனவே ரசிகர்கள் தேவையற்ற மோதல் போக்கைக் கைவிட வேண்டும்.
இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது. எனது இந்த அறிவுரையை உங்களில் எத்தனை பேர் மனதில் நிறுத்திக்கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. என் ரசிகர்கள் என்பதைத் தாண்டியும் உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. அதை நீங்கள்தான் பேண வேண்டும். ரசிகராக முழு நேரத்தையும் வீணாக்காமல் அந்தப் பொன்னான நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவழியுங்கள்.