சர்வதேச ‘ஜெய் பீம்’
சூர்யா தயாரித்து நடிக்க, நீதிபதி சந்துரு தன்னுடைய நீதிமன்ற வாழ்க்கையில் எதிர்கொண்ட வழக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு, த.செ.ஞானவேல் எழுதி, இயக்கிய படம் ‘ஜெய் பீம்’. கடந்த நவம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உலக அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியக் காட்சியை, ஆஸ்கர் விருது அமைப்பான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளது. இது ‘ஜெய் பீம்’ படக்குழுவுக்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் எனத் திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
கமலுடன் இணைந்த எஸ்.கே!
கடந்த ஆண்டு திரையரங்குளில் வெளியாகி வசூல் சாதனை படைத்த மூன்று படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’. தற்போது அவருடைய நடிப்பில் உருவான ‘டான்’ வெளியீட்டுக்குத் தயார்! ‘அயலான்’ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் முடியும் கட்டத்துக்கு வந்துள்ளன. அனுதீப் இயக்க, முதல் முறையாக தமிழ் - தெலுங்கில் உருவாகும் இருமொழி படம், இயக்குநர் அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கும் ‘சிங்கப்பாதை’, ஆஸ்கர் வரை சென்ற, ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் படம் ஆகியவற்றில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் கமலுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் - சோனி பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்புதிய படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர், 4 வருடங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ரங்கூன்’ படத்தின் இயக்குநர்.
எப்போ கல்யாணம்?
குடும்பப் படங்களுக்காக கொண்டாடப்பட்டவர் மறைந்த முதுபெரும் இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவரிடம் பதிமூன்று படங்களில் உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் சிசிலியாராஜ். கன்னடம், தெலுங்கு, இந்தி படவுலகங்களில் திரைக்கதை, புரொடக்ஷன் டிசைன் ஆகிய துறைகளில் பத்தாண்டு காலம் பணியாற்றிய அனுபவத்துடன், தற்போது தமிழில் ‘எப்போ கல்யாணம்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். “மூன்று குடும்பங்கள். அவற்றின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் காதலை எவ்வாறு கையாளுகிறார்கள், பிள்ளைகள் காதல் விவகாரத்தில் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையிலிருந்து நகைச்சுவையும் சென்டிமென்டும் கலந்து படமாக்கியிருக்கிறேன்.” என்கிறார். புதுமுகங்களுக்குப் பெற்றோர்களாக நடித்துள்ளவர்கள் லிவிங்ஸ்டன், ரமா பிரபா, மகாநதி சங்கர், வினய் பிரசாத், சௌமியா உள்ளிட்ட பிரபல குணசித்திர நடிகர்கள். ஒரு வெட்டு கூட இல்லாமல் ‘யூ’ சான்றிதழ் வழங்கிப் பாராட்டியிருக்கிறார்கள் தணிக்கைக் குழுவினர்.
மதுரையின் வாசம்...
பாரதிராஜாவிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர் ஜி.ஆர்.எஸ். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மருத’ இன்று வெளியாகிறது. ” ‘செய்முறை’ எனும் தென் மாவட்டக் காலச்சார வழக்கம், பல குடும்பங்களை வாழ வைத்திருக்கிறது. பல குடும்பங்களை அழித்திருக்கிறது. அதன் இரண்டு பக்கங்களையும் அண்ணன் - தங்கை பாசத்தின் இழைகொண்டு நெய்திருக்கிறேன். படத்தைப் பார்த்த எனது குரு ’ ‘கிழக்குக் சீமையிலே’ படத்தைவிட சிறந்த வாழ்க்கையைக் காட்டிவிட்டாய்’என்று பாராட்டினார்” என்கிறார் இயக்குநர். இப்படத்தில் ‘பருத்தி வீரன்’ புகழ் சரவணன், ராதிகா சரத்குமார், வேல ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் என நடிப்புக்குப் பெயர்பெற்ற கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
மீண்டும் டிம்பிள்!
பிரபுதேவாவின் ‘தேவி 2’ படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அதில் பிரபுதேவாவின் காதலியாக நடித்திருந்த டிம்பிள் ஹயாத்தியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவர், அக் ஷய் குமாருடன் ‘அந்தராங்கி ரே’, ரவிதேஜாவுடன் ‘கில்லாடி’ என மாஸ் படங்களின் கதாநாயகியாக மாறி தெலுங்கு தேசத்திலேயே வலம் வந்துகொண்டிருந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின்னர், தன்னுடைய ‘வீரமே வாகை சூடும்’ படத்துக்காக டிம்பிளை அழைத்து வந்துவிட்டார் விஷால்!