நான்கு வகையான பட உருவாக்க (Making Styles) முறைகள் தற்காலத் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கின்றன. முன்னணிக் கதாநாயகர்களுக்காக உருவாக்கப்படும் ஹீரோயிச மாஸ் மசாலா வகை. முன்னணிக் கதாநாயகர்கள் நடித்தாலும் அளவான ஹீரோயிசத்துடன், மையக் கதையின் சாரம் சிதைந்துவிடாமல் அதற்கு இணைகோடாக முக்கியத்துவம் அளிப்பது இரண்டாம் வகை. கதாபாத்திரங்களின் வாழ்விடம், வாழ்க்கை, காலகட்டம் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரிக்கும் சினிமேட்டிக் ரியலிசம் மூன்றாம் வகை. பாடல்களை முற்றாகப் புறந்தள்ளி, 90 அல்லது 120 நிமிடங்களுக்குள், தேர்ந்துகொண்ட ஒருவரிக் கதையை விறுவிறுப்பான நாடகமாகக் கொடுப்பது ஓடிடி தளங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் நான்காம் வகை.
இன்னும் சில உதிரி வகைகள் இருந்தாலும் இந்த நான்கு வகைப் படங்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் நன்கு பழகியிருக்கிறார்கள். இவற்றில் அவர்களுடைய உள்ளத்தைத் தொட்டு வெற்றிபெறும் படங்கள், அவற்றின் குறைகளை மீறி முத்திரை பதித்துவிடுகின்றன. இந்த அளவுகோலுடன், 2021-ல் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படங்களை அவற்றின் உள்ளடக்க மற்றும் உருவாக்கத் தரத்தின் அடிப்படையில் படங்கள் வரிசையைப் பெறுகின்றன.
1. ஜெய் பீம்
சாதிய அடுக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் குரலற்றவர்களாகவும் எங்கோ தொலைதூரத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் ஒரு பகுதி விளிம்புநிலை மக்களின் கூக்குரலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒலிக்க வைத்த ஒரு வழக்கறிஞரின் சமரசமற்ற சட்டப் போராட்டத்தை, படைப்பு நேர்மையுடன் தந்த படம். சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை, அதன் மீது படர்ந்து கிடந்த அவநம்பிக்கையிலிருந்து மீட்டெடுத்த படமும்தான். ஆவணப் படமாகிவிடும் ஆபத்துள்ள கதைக்களத்தை, உண்மையிலிருந்து எழும் புனைவாக, காவல் துறையைத் தராசுத் தட்டில் சமமாக நிறுத்திச் சித்தரித்ததன் வழியாக, பாதிக்கப்பட்ட, பாதிக்கபடும் எளியவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுகொள்ள வழிவகைச் செய்திருக்கும் படமாக ‘ஜெய் பீம்’ இன்று மாற்றத்தை விதைத்திருக்கிறது.
2. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
தமிழ் இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ள அசோகமித்ரன், பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகிய மூன்று வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆந்தாலஜி வகைப் படம். மூன்று கதைகளிலும் வரும் சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகி மூவரும் காலத்தால், கல்வியால், திறமையால், அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் பொருளாதார அடுக்கினால் வேறுபட்டு நிற்கிறார்கள். ஆனால், ஆணுலகாலும் கலாச்சாரம் என்கிற போர்வையில் சமூகத்தாலும் அவர்கள் ஒடுக்கப்படுவதில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஆராவாரம் இல்லாமல் சித்தரித்து, மனித மனங்களில் சலனங்களை உருவாக்குவதில் வெற்றிபெற்றிருக்கும் படைப்பு.
3. மண்டேலா
எதிரும் புதிருமாக வாழும் இரண்டு கிராமங்கள். அவர்களுக்கான ஒற்றைப் பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்வு செய்ய உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இருதரப்பிலும் தலா ஒரு வேட்பாளர். தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரேயொரு ஓட்டுக்குச் சொந்தக்காரரான இளிச்சவாயன் என்கிற ‘சாமானிய’னை, இரு ஊர்களும் வி.ஐ.பியாக மாற்றுகின்றன. இதை, அசலான அரசியல் பகடியின் துணைகொண்டு, ‘ஓட்டுக்குத் துட்டு’ அரசியலை வெட்ட வெளிச்சமாக்கிய படம். இரு கிராமங்களைச் சித்தரித்தாலும் இன்றைய கட்சி அரசியலில் புரையோடிக் கிடக்கும் சாதி, பணநாயகம், வாக்கின் மதிப்பை மறந்த குடிமக்கள் ஆகிய கள யதார்த்தங்களைக் குறியீடாக்கி பகடி செய்து, அரசியல் நையாண்டி படம் என்கிற வகைமைக்கு செழுமை சேர்ந்துவிட்டது.
4. சார்பட்டா பரம்பரை
எழுபதுகளின் வடசென்னையில், அப்பகுதி மக்களுடைய பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும் விளங்கின குத்துச் சண்டைப் போட்டிகள். அவற்றில் பங்கேற்க உடல், மன தகுதிகொண்ட வீரர்களை தயார்செய்யும் இரு ஆசிரியர் பரம்பரைகள். அவற்றுடன் பின்னணிப் பிணைந்திருந்த கட்சி அரசியல். இவற்றின் பின்னணியில், முறையான பயிற்சி பெறாத கபிலன் என்கிற இளைஞனுடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் அந்தக் காலகட்டத்தின் தரவுகள், சுவாரஸ்ய புனைவுகளுடன் கலந்து பொருத்தி நம்பகமாகச் சித்தரித்தது படம். கபிலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டத் துணைக் கதாபாத்திரங்கள் வலிமையும் வாழிடத்தின் வாசனையையும் கொண்டிருந்தன. கபிலனின் கதை, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியைக் குறியீடாக முன்வைத்தது.
5. ரைட்டர்
காவல் துறையை ஹீரோயிசத்துக்கான வசூல் களமாகக் காட்டி வந்திருக்கும் தமிழ் சினிமாவை, வெற்றிமாறன் முதன் முதலில் ‘விசாரணை’க்கு உட்படுத்தினார். அதன்பின்னர் ‘ஜெய் பீம்’ நடுவில் நின்றது. ஆண்டின் இறுதியில் வெளியான ‘ரைட்டர்’, வேலியே பயிரை மேயத் துடிக்கும் அவலத்தை, சினிமாத்தனம் இல்லாமல் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. நேர்மை தவறாத, குற்ற உணர்ச்சியால் அல்லல்படும் ஒரு தலைமைக் காவலரின் துணிவான முயற்சியை, அதிகாரத்துக்கு எதிரான உரையாடலாக மாற்றிக் காட்டியிருக்கும் படைப்பு.
இந்த முத்திரைப் படங்களின் ‘டாப் 10’ வரிசையில் இடம்பிடித்த 06: ‘விநோதய சித்தம்’, 07.‘தேன்’ 08.‘கர்ணன்’, 09.‘வாழ்’, 10.‘கயமை கடக்க’ ஆகிய படங்களைக் குறித்தும் 10 படங்களின் பட்டியலுக்குள் அடங்கமுடியாமல் போனாலும் உள்ளடக்கம், உருவாக்கம், பார்வையாளர்களுக்குக் தந்த திரை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பிடிக்கும் ‘டாப் -25’ படங்களின் பட்டியலையும் அடுத்த வாரமும் அலசுவோம்.
திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நேரடித் தமிழ் படங்களின் பட்டியல் இது. தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்,விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகிய இருவரும் திரட்டிய வசூல் தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
1. மாஸ்டர்
2. அண்ணாத்த
3. டாக்டர்
4. மாநாடு
5. சுல்தான்
6. கர்ணன்
7. அரண்மனை 3
8. கோடியில் ஒருவன்
9. எனிமி
10. ருத்ர தாண்டவம்