இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: குற்றம் இழைத்துவிடாதீர்கள்!

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ்த் திரையுலகில் பரபரக்கும் தற்போதைய சர்ச்சை ‘குற்றப் பரம்பரை’ சினிமா. தனது கனவுப் படமாக இது இருக்கும் என்று பல ஆண்டுகளாகச் சொல்லிவரும் இயக்குநர் பாரதிராஜா, கடந்த வாரம் இந்தப் படத்தைத் தொடங்கிவிட்டார். இதற்குச் சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் பாலா, வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகின. இதையடுத்து பாரதிராஜா உடனடியாகச் செயலில் இறங்கிப் படத்தைத் தொடங்கிவிட்டார். இரத்தினகுமார் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு பாரதிராஜாவின் படம் அமையும் எனத் தெரிகிறது. ஆனால் தனது படத்துக்கான அறிவிப்பு குறித்து பாலா தரப்பில் அமைதி நிலவுகிறது.

பாலா ‘நானும் இதே விஷயத்தை வைத்து படம் எடுத்தே தீருவேன்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும்கூட அதில் சர்ச்சைக்கு எங்கே இடமிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. புராண, இதிகாசங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள், சுயசரிதைகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றுக்கு யாரும் தனிப்பட்ட காப்புரிமை கோர முடியாது.

மலையாளப் படவுலகில் தற்போது மகாபாரதக் கர்ணனின் வாழ்க்கை ஒரே நேரத்தில் இரண்டு படங்களாக எடுக்கப்பட்டுவருகிறது. ஒன்றில் மம்முட்டியும் மற்றொன்றில் பிருத்திவிராஜும் நடித்துவருகிறார்கள். அதுபற்றிய சலசலப்புகூட அங்கே எழவில்லை. அதேபோல பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், தேசப் பிரிவினை போன்றவை பல முறை பல்வேறு மொழிகளில் படமாகியிருக்கின்றன.

படைப்பாளிகளின் கண்ணோட்டம் எது?

எனவே குற்றப் பரம்பரை குறித்த வரலாற்று நிகழ்வை யார் படமாக்க வேண்டும்; யார் படமாக்கக் கூடாது என்பதைப் பிரச்சினையாக அணுக வேண்டியதே இல்லை. கதாசிரியரும் இயக்குநரும் அந்த வரலாற்று நிகழ்வை எந்தக் கண்ணோட்டத்தில் சித்தரிக்க இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை.

குற்றப் பரம்பரை என்ற சொல்லாக்கமே ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தக்கூடியது. குற்றப் பரம்பரை என்ற சொல்லை வீச்சும் தாக்கமும் கொண்ட திரை ஊடகத்தில் கையாள்வதன் மூலம், வரலாற்றின் பக்கத்தில் திணிக்கப்பட்ட ஒரு பிழையை திரும்ப எழுதுகிறோம் என்பதை தமிழ்ப் படைப்பாளிகள் மறந்துவிடக் கூடாது. இதன் பின்னணி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேர் கொண்டுள்ளது. வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு முடியாட்சிகள் என்று வாழும் இந்தியர்களிடம் தேசியம் இருக்காது என்று எண்ணினார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆனால் 1857-ல் நடந்த போராட்டம் அதைப் பொய்யாக்கியது. அதை ஒடுக்கிய பின்பு, இந்தியப் புரட்சியின் காரணங்கள் பற்றிய ஆய்வில் ஐரோப்பியர்களுக்குப் பல்வேறு உண்மைகள் புலப்பட்டன. காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியும் அடிமை உணர்வின் மீதான வெறுப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசியத் தன்மை உடையது என ஆங்கிலேயர்கள் புரிந்துகொண்டார்கள். இந்தத் தேசிய உணர்ச்சியை முறியடிக்க ஆங்கிலேயர்கள் ‘பிரித்தாளும் உத்தி’ உட்பட பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான் சில இனக் குழுக்களைப் ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்று முத்திரை குத்தித் தனிமைப்படுத்தியது.

அன்றைய விரிந்த சென்னை மாகாண நிலப்பரப்பில் மட்டும், ஆங்கிலேயர்களால், இப்படிப் பட்டியலிடப்பட்ட 90-க்கும் அதிகமான பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்கள், சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவர்கள் எனவும், தீண்டப்படாதவர்கள் என்றும் பிரச்சாரம் செய்த காலனி அரசு, Criminal Tribes Act 1871 என்னும் சட்டத்தின் மூலம் பல்வேறு இனக் குழுக்களைப் பிறவிக் குற்றவாளிகளாகச் சித்தரித்து ஒடுக்கியது.

அந்த இனக் குழுக்களைச் சேர்ந்த மக்கள், தங்களது கைரேகைகளைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கொடூரத்தையும் அதனால் ஆங்கிலேயர்களின் ஆட்சி அடைந்த லாபத்தையும் ‘ரேகை’ என்னும் ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது (இந்த ஆவணப்படம் குறித்த அலசல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது).

தவிர்க்க வேண்டிய சொல்லாக்கம்

இந்த இழிவை எதிர்த்து 1920-ல் பெருங்காமநல்லூர் என்னும் ஊரில் பெரும் புரட்சி வெடித்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க ஆங்கில அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலரது உயிர்கள் பலியாயின. இந்தப் போராட்டம் குறித்துப் பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்துவைத்திருந்த பதிவுகளின் அடிப்படையில் அமைந்த கதையை பாரதிராஜா இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது குற்றப் பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை. கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920-ம் ஆண்டு இறந்த மாயக்காள் உட்பட 16 பேரின் படுகொலையைத்தான், இந்தக் ‘குற்றப் பரம்பரை’ சினிமா மூலம் சொல்ல இருக்கிறேன். இது என் மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது” என்று படத் தொடக்க விழாவில் பரதிராஜா பேசியிருக்கிறார். ‘குற்றப் பரம்பரை’ என்னும் தலைப்பே ஒரு பிரிவினர் மீதான வரலாற்று இழிவை நிலைநிறுத்தக்கூடிய அபாயம் கொண்டிருக்கிறது.

மறக்க வேண்டிய பெருமிதம்

இந்தச் சூழ்நிலையில் வேறொரு விஷயத்தையும் நினைவில் இறுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தீரம்மிக்க தேசத் தலைவர்களை ஒரு ஜாதியின் அடையாளமாகப் பார்ப்பது எத்தனை தவறானதோ, அதேபோன்ற தவறுதான் பெருங்காமநல்லூர் புரட்சியை ஜாதி அடையாளத்தோடு பார்ப்பதும். குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மற்ற சமூகங்களின் குரலுக்கும் எடுக்கப்படவிருக்கும் திரைப்படங்களில் போதிய இடமிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்பானதே. அதுவே வரலாற்றுக்குச் செய்யும் நியாயமாகவும் இருக்கும்.

குற்றப் பரம்பரையினராக இழிவுபடுத்தப்பட்டவர்களின் வாழ்வைப் படமாக எடுக்கவிருப்பது பாரதிராஜாவா, பாலாவா என்பதல்ல கேள்வி. இருவரும் இது குறித்து ஆளுக்கு ஒரு படம்கூட எடுக்கலாம். ஆனால், இது வரலாற்று நிகழ்வுகளைச் சாதியச் சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சியாக ஆகிவிடக் கூடாது என்பதுதான் நமது கவலை. சாதிப் பெருமிதங்கள் பேசிய படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களின் பின்னணியில் இத்தகைய கவலை எழுவது தவிர்க்க முடியாதது.

SCROLL FOR NEXT