இந்து டாக்கீஸ்

ராஜமெளலி பேட்டி: என்னைச் செதுக்கியது அப்பாவும் அண்ணனும்!

ஆர்.சி.ஜெயந்தன்

இப்படித்தான் இவரது படங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு படத்திலும் புதிய கதைக் களங்களில் ஃபாண்டஸி சினிமா படைப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று புகழப்படும் அவருடைய இயக்கத்தில் உருவாகி, பொங்கல், சங்கராந்தி பண்டிகை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவிருந்தது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம். கரோனா மூன்றாம் அலைப் பரவல் காரணமாக, படவெளியீடு தற்போது தள்ளிப்போய்விட்டது. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்குடன் சென்னை வந்திருந்தவர், இந்து தமிழ் திசைக்காக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

நட்சத்திரங்களைக் காவியக் கதாபாத்திரங்களாக மாற்றிவிடுவது, விஷுவல் எஃபெக்ட்ஸை, காட்சிக் கற்பனையுடன் இணைத்து ஃபாண்டஸியாக பயன்படுத்துவது ஆகியன உங்களுடைய ‘ஸ்பெஷல் ட்ரீட்’ என்று ரசிகர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இந்த அம்சங்கள் எந்த அளவுக்கு உண்டு?

‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு, பெரிய விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள், பிரம்மாண்ட ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்கள் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான், இந்தக் கதைக் கரு என் மனதில் உதித்தது. இதுவொரு ‘குவாட்ராங்கிள்’ (Quadrangle) காதல் கதை. ஒரு நட்பின் கதை. நான்கு கதாபாத்திரங்களைப் பின்னிப் பிணைக்கும் கதை.

இம்முறை ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் தேர்வு செய்ய என்ன காரணம்?

கதைக் கரு தோன்றியதுமே மனைவியிடம் சொன்னேன். ‘நீங்க லவ் ஸ்டோரி பண்ணினா யார் பார்ப்பாங்க..?’ என்று முகத்துக்கு நேராகச் சொல்லிச் சிரித்தார். அப்போது அவருக்குச் சொன்னேன். ‘இதுவொரு ஆக்‌ஷன் லவ் ஸ்டோரி. காதலும் இருக்கும் ஆக்‌ஷனும் இருக்கும்’ என்றேன். உண்மையில், இந்தக் கதைக்கான ஐடியா தோன்றியதுமே என் மனதில் தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்) சரண் இருவரும் ‘பீம்’ ஆகவும் ‘ராம்’ ஆகவும் வந்துபோனார்கள்.

நான் ‘ஸ்டார்டம்’ பற்றி எப்போதும் யோசித்ததில்லை. அதேநேரம், என்னுடைய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களை, நான் உருவாக்கும் படங்களில் ‘டெமி காட்ஸ்’ ஆக உருவாக்கிவிடுவது, நடிகர்கள் மீதான எனது அணுகுமுறைகளில் ஒன்று. இதில் ராமுவும் தாரக்கும் அப்படித்தான் உருமாறியிருக்கிறார்கள். இருவருமே இரு துருவங்கள். ஆனால், நண்பர்கள். அவர்கள் மோதிக்கொள்ள வேண்டிய தருணங்கள் வந்துகொண்டேயிருக்கும். யார் பக்கம் இருப்பது என்பதில் ஆடின்ஸுக்கு தவிப்பு இருக்கும். இருவரும் எந்தச் சூழ்நிலையில் இணைகிறார்கள் என்பது படத்தின் மிக முக்கியமான தருணமாக இருக்கும்.

படம் தொடங்கியபோது, இது, கொமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகிய இரு இந்தியச் சுதந்திரப் போராளிகளின் பயோபிக் என்று செய்திகள் வெளியானதே?

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆந்திர தேசம் கண்ட இரண்டு ‘சூப்பர் பவர்’ ஆளுமைகள் கொமரம் பீமும் அல்லூரி சீதாராம ராஜுவும் (Komaram Bheem and Alluri Sitarama Raju). இருவருமே பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக ஆங்கில ஆட்சியையும் அவர்களுக்குத் துணை நின்ற சிற்றரசர்களையும் எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள். பழங்குடியின மக்களின் உரிமைகளைக் காக்க வீரமுடன் போராடினார்கள்.

அதனால் இருவரையும் ‘மான்யம் வீருடு’ (காடுகளின் நாயகன்) என்று மக்கள் அழைத்தார்கள். வாழ்நாளில் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளவே இல்லை என்பது வரலாறு. ‘அந்த இருவரும் சந்தித்துக்கொண்டால்?’ என்கிற கற்பனைதான் இந்தக் கதைக்கான முதல் ஐடியா. அவர்களுடைய தாக்கத்திலிருந்து நான் உருவாக்கியிருக்கும் கற்பனைக் கதாபாத்திரங்கள்தான் ‘ராம்’, ‘பீம்’. சுதந்திரப் போராட்டப் பின்னணியைக் கதைக் களத்தின் பின்னணியாக வைத்துகொண்டேன். இது வரலாற்றுப் படமோ, பயோபிக்கோ அல்ல. படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கியின் எழுத்துக்கு பெரிய பங்குள்ளது. தாரக்கையும் சரணையும் அவ்வளவு திருத்தமாக தமிழ் வசனங்களை டப்பிங்கில் பேச வைத்திருக்கிறார்.

உங்களுடைய பாணி என்பது அதிகமும் ‘எமோஷனல் ஃபாண்டஸி’யாக இருக்க என்ன காரணம்?

கலைப் படம், மாஸ் மசாலா படம், ஃபாண்டஸி என எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி.. அல்லது நேஷனல் ஜியாகிரபிக் சேனலின் டாக்குமெண்டரியாக இருந்தாலும் சரி.. உணர்வுபூர்வமாக அதனுடன் ‘கனெக்ட்’ ஆகமுடியவில்லை என்றால் ஆடியன்ஸ் அதை தவிர்த்துவிட்டுச் செல்வார்கள். உணர்வுபூர்வமாக ஒரு படம் சரியாக அமைந்துவிட்டால், காட்சியாக்க ரீதியாக அதில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும் அதை ஆடியன்ஸ் பெரிதுபடுத்தமாட்டார்கள்.

உங்கள் திரைக்கதையை எப்படி மேம்படுத்துவீர்கள்?

அதில் என்னைச் சரியான பாதையில் செலுத்தக்கூடியவர்களாக அப்பாவும் அண்ணனும் எனக்குக் கைகொடுக்கிறார்கள். அதேநேரம், என்னுடைய மிகக் கடுமையான விமர்சகர்களும் என்னுடைய குடும்பத்தார்தான். பல சமயம் நான் அழுகிற அளவுக்கு என் கற்பனைகளை, காட்சியமைப்புகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் வளர்ந்திருக்கிறேன். என்னைச் செதுக்கியவர்கள் அவர்கள்தான். படத்தை முடித்து கீராவாணி அண்ணாவிடம் (இசையமைப்பாளர் மரகதமணிதான் தெலுங்குப் படவுலகில் கீரவாணி. இவர், ராஜமௌலியின் ஒன்றுவிட்ட சகோதரர்) டபுள் பாசிட்டிவ் போட்டுக் காட்டுவேன். ஏதாவதொரு சீக்குவென்ஸில் ‘எமோஷனல் ஃப்ளோ’ ஒரே சீராக இல்லை என்று தெரிந்தால், ‘இந்த சீக்வென்ஸ் மொத்த படத்துக்கும் சிக்கலைக் கொடுக்கும்’ என்று சொல்லிவிடுவார். அதன்பிற்கு இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. அந்த சீக்குவென்ஸ் முழுவதையும் மீண்டும் ‘ரீஷூட்’ செய்துவிடுவேன்.

உங்கள் கனவுப் படமான ‘மகாபாரதம்’ எப்போது?

அது நீண்ட நெடும் பயணம். அதற்கு இன்னும் கற்கவேண்டியது அதிகம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

SCROLL FOR NEXT