ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் முதல்முறையாக நடித்தது பாலிவுட்டில்தான். 43 ஆண்டுகளுக்குமுன் வெளியான கல் ஆஜ் அவுர் கல் (நேற்று, இன்று, நாளை) என்ற அந்த இந்தி படம் 1971-ல் வெளியானது. இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான பிரித்விராஜ் கபூர், அவரின் மகன் ராஜ் கபூர் மற்றும் ராஜ் கபூரின் மகன் ரந்தீர் கபூர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெற்றிப் படத்திற்குப் பின், மூன்று தலைமுறை நடிகர்கள் மனம் (நம்) என்ற தெலுங்குப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பது டோலிவுட்டில்.
நம் காலத்தின் தேவதாஸ் என்று தென்னிந்திய ரசிகர்களால் புகழப்படும் அக்கினேனி நாகேஷ்வரராவும், அவரது மகன் ம நாகார்ஜுனா, நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஆகிய மூவரும் இணைந்து நடித்து, விக்ரம் குமாரின் (தமிழில் அலை மற்றும் யாவரும் நலம் படங்களின் இயக்குனர்) திறமையான இயக்கத்தில் மே, 23-ம் தேதி வெளியாகிச் சக்கை போடு போடும் இந்தப் படம், தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்ல, இந்தியச் சினிமாவில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.
கைநழுவிய வாய்ப்பு
மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு தந்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்த இந்தக் குடும்பபடம் போல் இன்னொரு படம் வருவது கடினம். நடிகர் திலகம் சிவாஜி நம்மிடையே இன்று இருந்திருந்தால், அவருடன், இளையதிலகம் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் இணைந்து இதே போல் ஒரு படத்தைத் தமிழில் எடுத்திருக்க முடியம். அந்த அரிய வாய்ப்பு நமக்குக் கைநழுவிப்போய்விட்டது.
படத்தின் திரைக்கதை என்ன?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான நாகேஸ்வரராவ் (படத்தில் நாகார்ஜூனா) தனது பால்யத்தில் கார் விபத்தொன்றில் அம்மா - அப்பா இருவரையும் இழந்தவர். சற்றும் எதிர்பாராமல் இறந்துபோன தன்னுடைய தந்தையின் அச்சு அசலான உருவத்தில் இருக்கும் நாகார்ஜூனா என்ற இளைஞனை (நாக சைதன்யா) ஒரு விமானப் பயணத்தில் சந்திக்கிறார். பாசம் மேலிட அவரை அப்பாவென்று அழைத்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரைத் தனது அப்பாவின் மறுபிறவி என்றே நம்புகிறார். இதனால் அம்மாவும் இவரைப்போலவே பிறந்திருக்க வேண்டுமே என்று தன் அம்மாவின் தோற்றத்தையொத்த பெண்ணைத் தேடுகிறார். அவர் எதிர்பார்த்தைப் போலவே தன் அம்மாவின் தோற்றத்தில் வார்க்கப்பட்டிருக்கும் சமந்தாவைக் கண்டுபிடிக்கிறார். அம்மா - அப்பா இருவரையும் காதலிக்க வைத்து மீண்டும் அவர்களைத் தம்பதியாகப் பார்க்க ஆசைப்படுகிறார். இதற்காகக் காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறார். ஆனால் சமந்தாவுக்கு நாக சைதன்யா மேல் போன ஜென்மத்தில் இருந்த கோபம் தற்போது நினைவுக்கு வந்துவிடுவதால் அவருடன் ஒட்ட மறுக்கிறார்.
இதற்கிடையே நாகார்ஜூனாவுக்கு பெண் மருத்துவரான ஸ்ரேயாமேல் மேல் காதல் ஏற்படுகிறது. ஸ்ரேயாவுக்கும் நாகார்ஜூனாமேல் காதல் பற்றிக்கொள்கிறது. ஸ்ரேயா பணிபுரியும் மருத்துவமனையில் நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவரும் முதியவரான சைதன்யாவுக்கு (நாகேஸ்வரராவ்) எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் சிறுவனாக இருந்தபோது கார்விபத்தில் இழந்த தனது அம்மாவும் அப்பாவும் இவர்கள்தான் என்பதை உணர்ந்துகொள்கிறார். இப்போது முதியவர் சைதன்யா இவர்களைச் சேர்த்துவைக்க நினைக்கிறார்.
இரண்டு தம்பதியினருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை கார் விபத்து. எண்பதுகளில் நாகார்ஜூனாவின் அப்பா சைதன்யா, அம்மா சமந்தா ஆகியோர் கார் விபத்தில் இறந்ததுபோலவே, அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இன்று முதியவர் சைதன்யாவாக இருக்கும் நாகேஸ்வரராவின் அப்பா நாகார்ஜூனா, அம்மா ஸ்ரேயா இருவரும் மற்றொரு கார்விபத்தில் இறந்துபோகிறார்கள். இந்த இரண்டு விபத்துகளும் நடந்தது ஒரே இடத்தில். அப்படியானல் மீண்டும் பிறந்திருக்கும் இந்த இரண்டு ஜோடிகளையும் பழைய கார் விபத்தைப் போலவே விதி துரத்தக்கூடும் அல்லவா? அப்படி நடக்கப்போவதற்கான அறிகுறிகளை இன்று 35 வயது பிள்ளையாக இருக்கும் நாகார்ஜூனாவும், 90 வயது பிள்ளையாக இருக்கும் நாகேஸ்வரராவும் உணர்கிறார்கள். விதியை வென்று தங்கள் பெற்றோர்களை அவர்கள் காப்பாற்றினார்களா? அவர்களை வாழ்க்கையில் இணைத்தார்களா என்ற உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிகிறது.
மனம் படத்தின் சிறப்புகள்:
விக்ரம் குமாரின் திறமையான, புத்திசாலித்தனமான திரைக்கதை மற்றும் இயக்கம். ஒரு சிக்கலான கதையை எடுத்து, அதை எப்படி நேர்த்தியாகத் தர முடியும் என்பதை மீண்டும் அவர் உணர்த்தியுள்ளார். ஹர்ஷவர்தனனின் அருமையான வசனங்கள்.
* அனூ ரூபனின் இசையும், பிரவீன் பூடியின் எடிட்டிங்கும், பி.எஸ். விநோதின் அற்புதமான ஒளிப்பதிவும்.
* 1930-களையும், 1980-களையும் அற்புதமாகக் காட்டியிருக்கும் காட்சிகள்.
* தமிழ், தெலுங்கில் 70 வருடங்கள் கொடிகட்டிப் பறந்த மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவின் இந்தக் கடைசி படம், அவரின் அழகான நடிப்பையும், நகைச்சுவை உணர்வையும் மீண்டும் நமக்கு நினைவூட்டியது. இந்தப் படம் அவருக்குச் சரியான, கௌரவம் தரும் படமாகவும் அமைந்துவிட்டது.
* நாகார்ஜுனாவும், சமந்தாவும் இரண்டு பிறவிகளில் இரு வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைக்கிறார்கள். நாக சைதன்யாவும், ஸ்ரேயாவும் படத்தை மேலும் சிறப்பிக்கிறார்கள். பிரம்மானந்தம், ஆலி எனப் பல நகைச்சுவை நடிகர்கள் படத்தில் இருந்தாலும், நாகார்ஜுனாவே பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளில் பிரகாசிக்கிறார்.
பொதுவாகவே தெலுங்குப் படங்களுக்கு வணிக ரீதியாக வேண்டிய குத்துப் பாடல்களோ, சண்டைக் காட்சிகளோ, திணிக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாத நேர்த்தியான, உண்மையான, அழகான ஒரு திரைக்காவியம்.
சிறந்த கதைகள் சினிமாவில் அரிதாகத்தான் வரும். அப்படி அரிதான, குறிஞ்சி பூ போன்ற ஒரு சிறந்த படம்தான் மனம்.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com