இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: புகழ்

இந்து டாக்கீஸ் குழு

ஊரின் பொது இடமாக இருந்துவரும் விளையாட்டு மைதானத்தை ஆக் கிரமிக்க முனையும் அதிகார வர்க்கத்துடன் துணிச்சலாக மோதும் ஒரு சாமானிய இளைஞனின் கதைதான் புகழ். உண்மைச் சம்பவத்திலிருந்து உருவான இந்தக் கதையை அரசியல் த்ரில்லராகத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் மணிமாறன்.

வாலாஜாபாத்தில் பூ வியாபாரம் செய்யும் எளிய குடும்பம் கருணாஸுடையது. அவரது தம்பியான புகழ் (ஜெய்) அண்ணனுக்கு வியா பாரத்தில் உதவியாக இருந்தாலும் தனது பகுதி மக்களுடன் நெருக்கமாக இருப்பவன். மக்களின் பிரச்சினைக்காகப் போராடுபவன்.

ஊருக்கென்று பரந்து விரிந்த ஒரே பொது இடமாக இருக்கும் விளையாட்டு மைதானத் தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது புகழின் பொழுதுபோக்கு. அந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து அதைத் தனக்கு உடமையாக்க நினைக்கிறார் கல்வி அமைச்சர். இதற்காகத் தனது கட்சியின் உள்ளூர் பிரமுகர் மாரிமுத்துவைப் பயன்படுத்திக்கொள்கிறார். இளைஞர் படைக்கும் அரசியல் சக்திகளுக்கும் இடையே நடக்கும் மோதலில் வெல்வது யார்?

ஊருக்கும் விளையாட்டு மைதானத்துக்கு மான உறவையும் அது பாதுகாப்பில்லாமல் இருப்பதையும் ஒரே காட்சியில் விவரித்து விட்டு பிரச்சினைக்குள் நுழைந்துவிடுகிறது திரைக்கதை. அதன் பிறகு உள்ளூர் அரசியலை நுணுக்கமாக விவரித்துச் செல்வதன் வழியே அது எத்தனை கறாரான தொழிலாக வளர்ந்து நிற்கிறது என்பதை யதார்த்தமாகப் பதிய வைக்கிறார் இயக்குநர் மணிமாறன். புகழை மீறி மைதானத்தை ஆக்கிரமிக்க முடியாது என்ற நிலவரம் தெரிந்ததும், புகழின் நெருங்கிய நண்பனையே அரசியல் ஆயுதமாக மாற்றி, புகழை பலமிழக்கச் செய்வது வரையிலான படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது.

இரண்டாவது பாதியில் இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்க வேண்டிய திரைக்கதை எதிர்பார்க்கும் பாதையிலேயே பயணிப்பதுடன், ஆங்காங்கே தேங்கி நின்று விடுகிறது. அரசியல்வாதிக்கும் புகழுக்கு மிடையேயான மோதல் முற்றுவதைச் சொல்லப் பல காட்சிகளை வீணடித்திருப்பது இதற்கு முக்கியமான காரணம். கதைச் சுருக்கத்தில் ஒரு வரி சேர்க்குமளவுக்குக்கூடக் காதல் அத்தியாயம் படத்தோடு ஒட்டவில்லை. மக்கள் போராட்டமாக உருப்பெறும் ஒரு பிரச்சினை, நாயகனின் புஜபல பராக்கிரமத்தில் முடிவது ஏமாற்றமளிக்கிறது.

புகழ், புகழின் கவுன்சிலர் நண்பன், அண்ணன் கருணாஸ், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, கம்யூனிஸ்ட் தோழர் உள்ளிட்ட கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் வார்த்திருப்பது படத்துடன் பார்வையாளர் களை ஒன்றவைக்கிறது. உள்ளாட்சி அமைப்பில் நடைமுறை அரசியல் எவ்வாறு உள்ளது என்பதையும் அதில் சாதியின் இடம் என்ன என்பதையும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அரசியலில் சிறிய மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் மேலே வருவதற்காகப் படும் அவஸ்தைகளையும் யதார்த்தமாகக் காட்சிப் படுத்துகிறார் இயக்குநர். பிழைக்கத் தெரி யாதவர் என்று இடித்துரைக்கும் மனைவி, நீயெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாய் என்று திட்டும் அமைச்சர் ஆகியோருக்கிடையே மாரிமுத்து படும் அவஸ்தை நன்கு உணர்த்தப்படுகிறது.

ஜெய் தனது கதாபாத்திரத்தில் பொருந்தி, தேவைக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். கோபம் கொண்ட இளைஞனாக வீரியத் துடன் வெளிப்படும் அவர், காதலைச் சொல்லக் கூச்சப்படும் இடத்திலும் சபாஷ் போடவைக்கிறார். சுரபி, மாரிமுத்து, கவிஞர் பிறைசூடன் ஆகியோரின் நடிப்பும் பாராட்டும் விதமாக இருக்கிறது. பல விதமான உணர்ச்சிகளைக் காட்டி நடிக்கும் வாய்ப்பு கருணாஸுக்கு. மனிதர் பின்னியிருக்கிறார்.

வாலாஜாபாதின் முகத்தை மிகையின்றிப் பதிவு செய்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. விவேக்-மெர்வினின் பின்னணி இசை உறுத்தாமல் திரைக்கதையுடன் சேர்ந்து பயணிக்கிறது.

பொது லட்சியத்துக்காக இளைஞர்கள் அரசியல் சக்திகளை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்ட இந்தப் படம், அதை ஓரளவு நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கிறது. எதிர்பார்க்கக்கூடிய காட்சிகளும் மெது வான நகர்வும் படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன.

SCROLL FOR NEXT