இந்து டாக்கீஸ்

அந்த நாள் ஞாபகம்: ஒருநாள் அவகாசம் கேட்ட இசைமேதை!

சின்னமனூர் விஜயகுமார்

தமிழ்த்திரை கண்ட இசைமேதைகள் பலர். அவர்களில் முன்னோடி என்றால் அவர் ஜி.ராமநாதன். அவரின் அறிமுகங்களும் தீர்க்கதரிசனங்களும் என்றுமே சோடை போனதில்லை ‘தூக்கு தூக்கி’ படத்தில் சிவாஜிக்காக முதன்முதலில் டி.எம்.சௌந்தர்ராஜன் என்ற அறிமுகப் பாடகரின் குரலில் பதிவான மூன்று பாடல்களை ராமநாதன் சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார். பாடல்களைக் கேட்டு முடிக்கும்வரை எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த நடிகர்திலகம், அங்கிருந்த டி.எம்.எஸ்.ஸின் அருகில் வந்து அவர் தோளைத் தட்டிக்கொடுத்து, “எனக்கான எல்லாப் பாட்டையும் நீயே பாடிடு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேல் நடிகர்திலகத்தின் பாட்டுக்குரலாகக் காற்றில் கலந்திருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.

அதேபோல இன்னொரு நிகழ்ச்சி.1948-ல் வெளிவந்த ‘ஞானசௌந்தரி’ படத்தில் சிறுவயது கதாநாயகிக்காகப் பாடிய பதின்மூன்று வயது சிறுமியை ‘மந்திரி குமாரி’ படத்தில் கதாநாயகிக்கு முழு பாடலையும் பாட வைப்பது என்று முடிவெடுத்தார் ஜி.ராமநாதன்.

கதாநாயகிக்குப் பின்னணி பாட வந்திருக்கும் அந்தச் சின்னப்பெண்ணைப் பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் “இந்தச் சின்னப் பெண்ணா ஹீரோயினுக்குப் பாடப்போகிறாள்?” எனச் சந்தேகத்துடன் கேட்டார். “எதிர்காலத்துலே இவ ஒரு பெரிய பாடகியா வருவா..” என்று அடித்துப்பேசி சிபாரிசு செய்து அந்தப் பெண்ணை பாடவைத்தார்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தச் சிறுமிதான் பின்னாளில் பிரபலமான பாடகியாக உருவெடுத்த ஜிக்கி.

அதுவரை துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் முதல்முறையாக நாயகனாக நடிக்கிறார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், படத்தின் உச்சக்கட்டக் காட்சிக்கு முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இழுவையாக இருக்கிறது என்று சிலர் கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அந்தப் பாடலைக் கத்தரித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். மிகுந்த உற்சாகத்துடன் அந்தப் பாடலுக்கு இசை அமைத்த ஜி.ராமநாதனின் நெஞ்சு படமுதலாளியின் முடிவைக் கேட்டுக் குமைந்துபோகிறது. பட முதலாளிகளைக் கண்டு பயப்படாத ராமநாதன், தன் இசைக்குழந்தையின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக சுந்தரத்திடம் புத்திசாலித்தனமாகப் பேசுகிறார். “ படம் வெளியானதும் முதல்நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம். அந்தப் பாடலை உருவாக்கியவன் என்ற முறையில் எனக்கு ஒருநாள் மட்டும் அவகாசம் கொடுங்கள்” என்று சுந்தரத்திடம் அந்தப் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார்.

படம் வெளியாகி தியேட்டரி லிருந்து வெளியே வந்த ரசிகர்கள் அனைவரும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே செல்கின்றனர். பலர் அந்தப் பாடலுக்காகவே திரும்பவும் படம் பார்க்க வருகின்றனர். படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து போகிறது. அந்தப் படம்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரி குமாரி’ அந்தப் பாடல்தான் ஜிக்கியும் திருச்சி லோகநாதனும் இணைந்து பாடிய “வாராய் நீ வாராய்”. படம் வெளிவந்து அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இன்றும் அந்தப் பாடல் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஜி.ராமநாதனின் இசைமேதைமை மட்டுமல்ல, எந்தப் பாடல் வெற்றிபெரும் என்ற அவரது தீர்க்கத் தரிசனமும்தான்.

SCROLL FOR NEXT