இந்து டாக்கீஸ்

ஐந்து உணர்வுகளின் கதை!

திரை பாரதி

பெண்ணுலகம், பெண் மனம், பெண் விடுதலை ஆகிய உணர்வுகளை உளவியல் நோக்குடன் தன் கதைகளில் படைத்துச் சென்ற எழுத்தாளர் ஆர்.சூடாமணி. தீர்க்க தரிசனம் மிகுந்திருந்த அவருடைய கதைகள், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அதேபோல், சில கதைகள் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டன.

தற்போது, ஆர்.சூடாமணியின் ஐந்து கதைகளை, ‘ஐந்து உணர்வுகள்’ என்கிற தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படமாகப் படைத்திருக்கிறார் இயக்குநர் ஞான ராஜசேகரன். ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற படங்களின் வழியாக நல்ல சினிமாவுக்கான முயற்சியைத் தொடர்ந்து வருபவர். இந்த ஆந்தாலஜிக்காக தேர்ந்துகொண்டிருக்கும் கதைகள், அவருடைய ஆழ்ந்த இலக்கிய ரசனை, சமூகம், பெண்ணுலகம் மீதான வாஞ்சை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன.

உணர்வுகளை வர்த்தகப் பொருளாக கையாளும் வணிகத் தமிழ் சினிமாவில், இலக்கியப் பிரதியில், படைப்பாளி படம் பிடித்துக்காட்டியிருக்கும் சொல்லப்படாத பெண்ணுணர்வுகளின் ஆழமான தடயங்களை ‘ஐந்து உணர்வுகள்’ திரைப்படம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

கதைகள் ஐந்தும் 1975 முதல் 1985-ம்ஆண்டு வரையில் நிகழ்வதுபோன்ற காலகட்டத்தைக் கொண்டவை. அதைப் பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள், ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம், உரையாடல் ஆகியவற்றில் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். தேர்ந்துகொண்ட சிறுகதைகளில் உள்ள உரையாடலைத் தேவையின்றி சிதைத்துவிடாமல் பயன்படுத்தியிருக்கிறார்.

பதினாறு வயது மாணவன் ஒருவன், தன்னுடைய டியூஷன் ஆசிரியை மீது கொள்ளும் பதின்மத்தின் ஈர்ப்பை, விரசமில்லாமல் பேசுகிறது ‘இரண்டின் இடையில்’.

முதுமைக்குள் நுழையாத விதவைத் தாயின் உணர்வுகளை மதிக்கத் தவறுகிறான் ஒரு பொறுப்பற்ற மகன். அவனைக் கடிந்துகொள்ளாமல், கண்ணியமாக விலகி, மகளிர் விடுதியில் அடைக்கலமாகும் அந்தத் தாயின் மனதைப் படம்பிடிக்கிறது ‘அம்மா பிடிவாதக்காரி’.

பெண்பார்க்கும் சந்தையில், வரதட்சிணைக்காக, பிடித்த பெண்ணை நிராகரிக்கிறான் ஒருவன். அதுபற்றிய குற்ற உணர்வு இருந்தாலும் முதுகெலும்பற்ற அவனுடைய செயல், பல ஆண்டுகளுக்குப் பின் பூமராங்காகத் திரும்ப வந்துத் தாக்குகிறது. பெரும் மனக் காயத்தின் வலி, பெண்ணுக்கு ஆயுதமானால் என்னவாகும் என்பதை சமரசமின்றி எடுத்துக்காட்டுகிறது ‘பதில் பிறகு வரும்’.

பெற்றோரின் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குகிறாள் அந்தச் சிறுமி. அவளுடைய மனப் போராட்டத்தை உணர்ந்து, தாத்தா - பாட்டி இருவரும் அவளை அரவணைத்துக்கொள்கின்றனர். அச்சிறுமி வளரிளம் பருவத்தை அடைந்ததும், தங்களுடன் இருக்க வரும்படி கேட்கும் பெற்றோரின் அழைப்பை ஏற்றாளா, இல்லையா என்பதை குழந்தைகளின் உலகிலிருந்து பேசியிருக்கிறது ‘தனிமைத் தளிர்’.

ஐந்தாம் கதையான் ‘களங்கம் இல்லை’, இக்காலகட்டத்தில் பெண், பொதுவெளியில் பெற்றிருக்கும் துணிவை எடுத்துக்காட்டுகிறது. பாலியல் வன்முறையால் கடும் மனநெருக்கடியை சந்தித்த பெண், துணிவுடன் தனித்த வாழ்வைத் தேர்ந்துகொள்கிறாள். அவள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகித்தவன், ஒரு முக்கியமான கட்டத்தில் அவளை எதிர்கொள்ளும் நிலை வருகிறது. அப்போது, அதே துணிவுடன் அவனுடைய போலி முகமுடியைக் கிழித்தெறிகிறாள்.

ஒவ்வொரு கதையும் ஓர் பாடலுடன் நிறைவடைவது உண்மையான உணர்வுகளை இசையின் வழியாகவும் பெற்றுக்கொண்டு திரும்ப முடியும் என்பதற்குச் சான்றாக உள்ளது. ‘தனிமைத் தளிர்’ கதையில் இடம்பெற்றுள்ள ‘செல்லக்குட்டி பாப்பா’பாடல், காந்த் இசையில் பார்வையாளர்களை கரைக்கிறது. பாடல்களை ஞான ராஜசேகரனே எழுதியிருக்கிறார். கதாபாத்திரங்களை ஏற்றுள்ள நடிகர்கள் பலரும் தெரிந்த முகங்களாக இருந்தாலும் அவர்களைக் கதாபாத்திரங்களாக வெளிப்படச் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு கதையின் உணர்வுக்கும் பொருத்தமான ஒளியையும் வண்ணங்களையும் காட்சி மொழியில் கொண்டு வந்து மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார். லெனினின் படத்தொகுப்பு, ஐந்து கதைகளையும் பிடிப்புள்ள கோவையாக்கித் தந்திருக்கிறது.

வணிகத் திரைப்படங்களுக்கான தளமாக திரையரங்குகள் மாறிவிட்ட இந்தக் காலத்தில், ஓடிடி மூலம் வெகுமக்களை முழுவீச்சில் சென்றடைய வாய்ப்புள்ள இதுபோன்ற முயற்சி, திரையரங்குகளைத் தேடி வந்திருப்பது இயக்குநர், படக்குழுவினரின் தன்னம்பிக்கைக் காட்டுகிறது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT