விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி சென்னை துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடந்தது.
கடந்த ஓர் ஆண்டாக விஜய் டிவியில் வெளிவந்த சிறந்த குரல் தேடலுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் முதலிடம் பிடிப்பவர் களுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு வழங்கப்படும் என்று அருண் எக்ஸல்லோ நிறுவனம் அறிவித்திருந்தது. இறுதிப் போட் டிக்குத் தேர்வான போட்டியாளர் கள் ஃபரீதா, ராஜகணபதி, சியாத், லஷ்மி, ஆனந்த் அரவிந்தாக் ஷன் ஆகியோர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாடினர்.
ஒவ்வொரு பாடகருக்கும் இறுதிச் சுற்றில் 2 முறை பாட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பாடகருக்கும் அந்தந்த ரசிகர்களின் கையெழுத்துகள் அடங்கிய உடை, வயலின், கிடார், கொடி, டெடிபேர் போன்ற நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதோடு, போட்டியிட்டவர்களில் தங்களுக்குப் பிடித்த பாடகர் களைப் பற்றி ரசிகர்களை பேச வைத்து அதை மேடையில் ஒளி பரப்பிய விதம், போட்டியாளர் களை பதற்றம் அடையச் செய்யா மல், இன்னும் தன்னம்பிக்கையுடன் பாட வேண்டும் என்னும் நம்பிக் கையை அளிப்பதாக இருந்தது. சூப்பர் சிங்கர்ஸ் பாடிய சில பாடல்களுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி நடுவர்களும் எழுந்து ஆடினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர் கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தங்கள் அபிமான பாடகர்கள் பாடும் போது உற்சாகக் குரல் எழுப்பி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடுவர்களின் மதிப்பெண்களு டன் இணையத்தின் மூலமாக தங்களுக்கு விருப்பமான பாடக ருக்கு வாக்களிக்கும் வசதி அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக் ஷன் முதலிடத்தை வென்றார். இவருக்கு வெற்றிக் கோப்பையும் அருண் எக்ஸல் லோவின் வீடும் பரிசாகக் கிடைத்தது. இவருக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய வாக்குகள் பதிவாகின.
ஃபரீதா இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், நடுவர்களின் அதிகபட்ச (ஏறக்குறைய 746) மதிப்பெண்களைப் பெற்ற ராஜகணபதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. நான்காம், ஐந்தாம் இடம் லஷ்மிக்கும் சியாத்துக்கும் கிடைத்தது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வழங்கி, முதல் இரண்டு இடம் பிடித்த பாடகர்களுக்கு தன்னுடைய இசையில் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.