இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: இசைக் காணொலியில் கௌரி!

செய்திப்பிரிவு

‘96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் புகழ்பெற்றிருப்பவர் கெளரி கிஷன். தமி்ழ், மலையாள ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்துவரும் இவர், சரிகமா ஒரிஜினல்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘மகிழினி’ தனியிசை ஆல்பத்தின் இசைக் காணொலியில் அனகாவுடன் இணைந்து நடித்து தன்பாலினத்தவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். தன்பாலினத்தவரை வெறுத்து, நிராகரித்துவிடாமல், குடும்பத்தினரும் சமூகமும் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் வி.ஜி.பாலசுப்ரமணியன் எழுதி, இயக்கியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, மதன் கார்க்கி வரிகளை எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியிருக்கும் இந்த முயற்சியை இசை ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

பிஸி வில்லன்!

‘காக்க காக்க’ படத்தில் வில்லன் வேடத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார் கௌதம் மேனன். அதன்பிறகு தன்னுடைய ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ தொடங்கி வெளிப்படங்களிலும் வில்லன் ரோலுக்கு குரல்கொடுத்துவந்தவரை கோலிவுட் தற்போது பிஸியான வில்லன் நடிகர் ஆக்கியிருக்கிறது. அந்த வரிசையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில் கௌதம் மேனன் வில்லன் வேடத்தை ஏற்றிருக்கிறார்.இதில் விஜய்சேதுபதி புரட்சிகர எழுத்தாளராகவும் அவருடைய தீவிர வாசகராக சந்தீப் கிஷனும் நடிக்கிறார்களாம். தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை பரத் சௌத்ரி, புஷ்கர் ராம்மோகன் ராவ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

சசிகுமாருக்குக் கிடைத்த அறிவுரை!

கிராமியப் பின்னணியில் ஆக் ஷன், குடும்பம் ஆகிய இரண்டுமே சசிகுமாரின் கதைக்களம்போல் ஆகிவிட்டன. அவர் நாயகனாக நடித்துள்ள ‘ராஜவம்சம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சசிகுமார் பேசும்போது: “இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கதிர்வேலு, சுந்தர்.சியின் உதவியாளர். முதல் படத்திலேயே 49 நடிகர்களை இயக்கியிருக்கிறார். கூட்டுக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து இப்போதும் கூட்டுக் குடும்பத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதால் இக்கதை என்னைக் கவர்ந்துவிட்டது.

உறவுகளையும் உணர்வுகளையும் மறந்து ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அவற்றை நினைவூட்டும் படமாக இது இருக்கும். இப்படத்தின் தயாரிப்பாளர் டி.டி ராஜா சிறந்த ரசனையாளர். அவர் எனக்கொரு அட்வைஸ் கொடுத்தார். ‘நடியுங்கள், படத்தைத் தயாரிக்க வேண்டாம்’ என்றார்’ உண்மைதான்..! தயாரிப்பில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் வேண்டும். ஒரு நடிகனுக்கு அது தேவையில்லாத ஆணி!” என்றார்.

வசந்த் டச்!

‘கேளடி கண்மணி’, ‘ஆசை’, ‘ரிதம்’ என தன்னுடைய பல படங்களில் நடுத்தர வர்க்கக் கதை மாந்தர்களை உணர்வும் உயிருமாகப் பார்வையாளர்களிடம் கொண்டுவந்தவர் இயக்குநர் வசந்த் சாய். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்தை அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார். பார்வதி, லக் ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், பல சர்வதேசப் பட விழாக்களில் விருதுகளை வென்று கவனம் ஈர்த்திருந்த நிலையில், இன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் வசந்த் சாயின் முத்திரையைப் படம் முழுவதும் எதிர்பார்க்கலாமாம்.

புதுமுகம் அறிமுகம்

மலையாள சினிமா வழியாக தமிழ் சினிமாவுக்குப் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்தகாவ்யா பெல்லு. ‘அரவிந்தன்டே அதிதிகள்’, ‘உல்லாசம்’, ‘நோமேன்ஸ் லேண்ட்’ ஆகிய மலையாளப் படங்களின் வழியாக கவனம் பெற்றிருக்கும்
இவர், அறிமுக இயக்குநர் சமய முரளி ஐ.ஆர்.எஸ் இயக்கி வரும் ‘கனல்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அஜு இயக்கத்தில் ‘ட்ராமா’ என்கிற மற்றொரு தமிழ்ப் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

‘ஏ’ சான்றிதழ்!

காதல், காமம், குடும்ப வன்முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இசையும் அவர்தான். இதில் கதாநாயகியாக திவ்யா பாரதி அறிமுகமாகிறார். தணிக்கைக் குழு பரிந்துரைத்த வெட்டுகளைத் தயாரிப்புத் தரப்பில் ஏற்காத நிலையில் ‘ஏ’ சான்றிதழைப் பெற்றிருக்கிறது இப்படம். இயக்குநர் சசியின் உதவியாளர் சதீஸ் செல்வகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி தாறுமாறான வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள இதில், மிஷ்கின் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

SCROLL FOR NEXT