தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. ‘அம்புலி’ 3டி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இந்த உயரமான கதாநாயகி ஒரு பெங்களூர் பியூட்டி. பட்டப்படிப்பு முடித்துவிட்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவரை சினிமா இழுத்துக்கொண்டது. தற்போது நடித்துவரும் ‘சவாரி’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் சனம் ஷெட்டி அளித்த பேட்டி இது.
சாஃப்ட்வேர் வேலையை விட்டு சினிமாவில் நுழைய என்ன காரணம்?
கல்லூரியில் படிக்கும்போதே ‘மாடலிங்’ செய்ய ஆரம்பித்தேன். அதனால் கேமரா பயம் இல்லாமல்போனது. வெற்றிகரமான மாடல் என்ற பெயரை எடுத்த பிறகுதான் என் அழகைப் பற்றி நண்பர்கள் அதிமாகப் பேச ஆரம்பித்தார்கள். சினிமாவில் நடித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் சினிமா என்றால் போட்டி கடுமையாக இருக்கும் மாடலிங் போல சொகுசாக இருக்க முடியாது என்று தயங்கினேன். ஆனால் இதில் பயப்பட ஏதுமில்லை என்று ‘அம்புலி’ படத்தில் நடித்த பின்பு உணர்ந்தேன். முதல் படம் வெற்றிப் படமாக இருந்தாலும் லண்டனில் வேலைசெய்து வந்ததால் அந்த வேலையை விட மனமில்லை. இதனாலேயே பல வாய்ப்புகளை இழந்தேன். பிறகு நடிப்பையும் மாடலிங்கையும் ஒழுங்காகச் செய்வோம் என்று முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டேன். இப்போது பத்துப் படங்களில் நடித்து முடித்துவிட்டேன்.
லண்டனிலிருந்து எப்போது சென்னைக்கு வந்தீர்கள்?
நான் லண்டனில் இருந்தபோது இயக்குநர் வேந்தன் ஸ்ரீ இயக்கிய ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தேன். அந்தப் படம் இலங்கைத் தமிழர்கள் பற்றிய படம். ஆனால் படம் வெளிவருவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இன்னும்கூட அது வெளிவரவில்லை. வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னதால் சென்னைக்கு வந்தேன். வந்ததும் வாய்ப்புகள் அமைந்தது என் அதிர்ஷ்டம்தான்.
தற்போது நடித்துவரும் படங்களைப் பற்றி சொல்லுங்கள்?
குகன் இயக்கிய ‘சவாரி’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஹீரோவாக பெனிட்டோ நடித்துள்ளார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்வதுவரை வந்துவிடுவோம். அந்தத் திருமணத்தின்போது ஒரு திடீர் திருப்பம் காத்திருக்கிறது. அது ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும். சுவாரஸ்யமான இந்தப் படத்தின்மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறேன். இயக்குநர் குகன் தன் திறமையைக் கொட்டியிருக்கிறார். பொறுமையானவர். சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்புகளை முடித்தார். இந்தப் படம் தவிர ‘பிரிமிகுடு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் காமெடி மற்றும் ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர். இந்தப் படமும் கலக்கும்.
சினிமாவில் நடித்துக்கொண்டே எப்படி அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டு வெல்ல முடிந்தது?
தன்னம்பிக்கைதான் காரணம். அத்துடன் மாடலிங் உலகம் தந்த அறிமுகம். துபாயில் நடந்த மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் பின்னணியில் எனது உடலைத் தகுதியுடன் தக்கவைத்துக் கொண்டதும் முக்கியக் காரணம்.
உங்களைச் சின்ன பட்ஜெட் படங்களின் நாயகி எனலாமா?
‘சவாரி’, ‘பிரிமிகுடு’ இரண்டும் சின்ன பட்ஜெட் படங்கள் கிடையாது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களில்தான் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும். ‘கலைவேந்தன்’ என்ற படத்தில் எனக்கு டபுள் ரோலில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. டபுள் ரோலில் நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. என்னைப் போன்ற ஒரு புதுமுகத்துக்குப் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையுமா? இதுவரை பத்துப் படங்களில் நடித்துவிட்டீர்கள். ஆனால் எந்தப் படமும் நல்ல கதை என்று கூறும் விதமாக இல்லையே? உண்மைதான். சினிமாவில் வளர்ந்துவரும் பெண் நான். எனக்கு வரும் வாய்ப்புகளை நான் கதை கேட்டுத் துரத்தி அடிக்க விரும்பவில்லை. அதேபோல் குப்பைக் கதைகளில் நடித்துவிட்டேன் என்றும் சொல்ல முடியாது. உங்களின் இந்தக் கேள்விக்கு ‘சவாரி’ சரியான பதிலாக இருக்கும்.
உங்களது ட்ரீம் ரோல்?
மணிரத்னத்தின் ‘ரோஜா’ படத்தில் மதுபாலா ஏற்று நடித்த கேரக்டர் என்று சொல்லுவேன். ஆனால் எனக்கென்று நல்ல கேரக்டர்கள் கண்டிப்பாக அமையும். நம்பிக்கை இருக்கிறது.
மறக்க முடியாத பாராட்டு?
சமீபத்தில் நடத்த ஐ.ஐ.எஃப்.ஏ. விருது நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனைச் சந்தித்தேன். “நீ ரொம்ப அழகா இருக்கே. நன்றாகவும் நடிக்கிறாய்.” என்று மனம்விட்டுப் பாராட்டிப் பேசினார். அதை மறக்க முடியாது.