நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை நம்மால் நினைத்துப் பார்க்க முடியும்போது அந்த உணர்வு எப்படி இருக்கும்? சிறுவயது, இளம்பருவம், நடுத்தர வயது, முதுமை ஆகிய பருவங்களைக் கடந்துவந்திருக்கும் ஒரு நபர் இத்தனை காலகட்டங்களையும் நினைத்துப் பார்க்கையில் ஏற்படும் உணர்வுகளைத் துல்லியமாகத் திரைப்படங்களில் காட்ட இயலுமா? இயலும் என்பதை நிரூபித்தவர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். இவரது படங்களின் மைய இழையே அதுதான்.
12 ஆண்டுகளுக்கு ஒரு படம்!
வெவ்வேறு காலகட்டங்களைக் காட்டும் படங்களில், பொதுவாகக் கதாபாத்திரங்களுக்கு வயதான ஒப்பனை செய்வதன் மூலமே காலமாற்றம் காட்டப்படுகிறது. ஏனெனில் திரைப்படங்களை அப்படித்தானே எடுக்க முடியும்? ஆனால், இதிலேயே இன்னொரு வகை என்னவென்றால், கதாபாத்திரங்களுக்கு நிஜமாகவே வயதாவதைக் காட்டுவது. அதாவது, அவர்களின் கதையில் எத்தனை வருடங்கள் செல்கின்றனவோ, அத்தனை வருடங்கள் அவர்களை வைத்துப் படமாக்குவது.
இப்படிப் படமாக்குதல் சாத்தியமா? ஒரு படத்தை இத்தனை வருடங்கள் எடுக்க முடியுமா? முடியும் என்பது லிங்க்லேட்டரின் கருத்து. இதன் மூலம் இயல்புத்தன்மை அதிகமாகிறது. சொல்லவரும் கதை இதனால் உண்மைக்கு மிக அருகில் வர முடிகிறது. லிங்க்லேட்டரின் ‘Boyhood’, இப்படி எடுக்கப்பட்ட படம்தான். ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் வாழ்க்கையில் அடுத்த பன்னிரண்டு வருடங்கள் ஏற்படும் மாற்றங்களை, நிஜமாகவே பன்னிரண்டு வருடங்களாக எடுத்தார் லிங்க்லேட்டர். ஒவ்வொரு வருடமும் சில காட்சிகளை அப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து எடுத்தார். உலகெங்கும் பெரிதும் பாராட்டப்பட்ட படமாக அது ஆனது.
பதினெட்டு ஆண்டு முயற்சி
இது ரிச்சர்ட் லிங்க்லேட்டருக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, பதினெட்டு வருடங்களாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காதலால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி உலகப் புகழ்பெற்ற ‘Before’ ட்ரையாலஜியாக எடுத்திருக்கிறார் லிங்க்லேட்டர். 1995-ல் இந்த சீரீஸின் முதல் படமான Before Sunrise வெளியானது. ஜெஸ்ஸி மற்றும் செலீன் என்ற காதலர்களுக்குள் நிகழும் உரையாடலே இந்தப் படம். ஒரு ரயிலில் சந்தித்துக்கொள்ளும் இருவரும், வியன்னாவில் ஒரு நாளைக் கழிக்கிறார்கள்.
இந்த ஒரு நாளில் இருவரும் மற்றவரைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை, காதல் பற்றிய இருவரின் கருத்துகள், இருவருக்கும் எப்படிப்பட்ட துணைவர்கள் வேண்டும் என்றெல்லாம் விரிவாகச் செல்லும் உரையாடல் பல தளங்களைத் தொடுகிறது.
இருவருக்கும் பரஸ்பரம் எழும் இயல்பான அன்பு காதலாக மெல்ல மாறுவதை உணர்கிறார்கள். இருவருக்கும் காதலில் தோல்விகள் இருந்திருக்கின்றன என்று தெரிகிறது. இருவரும் பிரிய வேண்டிய நேரம் வருகிறது. அப்போது ஜெஸ்ஸி, செலீனை மணக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறான். ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கிறார்கள். ஆறு மாதங்கள் கழித்து இதே இடத்தில் மறுபடி சந்திப்பதாகவும், அதுவரை இருவருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது எனவும். இதனாலேயே இருவரின் முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற எதையும் இருவரும் பரிமாறிக்கொள்வதில்லை. இத்துடன் படம் முடிகிறது.
இதற்கு அடுத்த பாகம், ஒன்பது வருடங்கள் கழித்து 2004-ல் ‘Before Sunset’ என்ற பெயரில் வெளியானது. ஜெஸ்ஸி மற்றும் செலீனின் வாழ்க்கையில் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டிருக்கின்றன. இப்போது ஜெஸ்ஸி ஒரு எழுத்தாளன். ஒன்பது வருடங்ளுக்கு முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அந்தப் புத்தகத்தை பாரிஸில் அறிமுகப்படுத்துவதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்போது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத்தைப் பார்வையால் துழாவும்போது, ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண்தான் ஒன்பது வருடங்கள் முன் அவன் சந்தித்த செலீன்.
- ரிச்சர்ட் லிங்க்லேட்டர்
காட்டிக்கொடுத்த கண்கள்
அவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக்கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் விமானத்தைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலீனிடம் சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலீனுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது.
மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். ஒன்பது வருடங்களுக்கு முன், தாங்கள் பிரிந்தபோது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்துவிட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலீன், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தன் பாட்டி இறந்ததைப் போல், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேட்கும் செலீன், அவன் வர மறந்துவிட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள்.
ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலீனுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்துகொள்ளும் செலீனால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளைச் சமாதானம் செய்கிறான்.
பேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலீன் அறிந்துகொள்கிறாள். செலீனுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். செலீனின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்புக்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக்கொண்டே இருந்திருக்கின்றன. ஒரு உணர்ச்சிகரமான இடத்தில் படம் முடிகிறது. இருவரும் தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
மறுபடியும் ஒன்பது வருடங்கள் கழித்து, 2013ல் ரிச்சர்ட் லிங்க்லேட்டர், ‘Before Midnight’ என்ற படம் எடுத்தார். ஜெஸ்ஸி, செலீன் ஆகியோரின் வாழ்க்கையில் இரண்டாம் பாகத்திலிருந்து ஒன்பது வருடங்கள் கழிகின்றன. இப்போது, இடைப்பட்ட காலத்தில் ஜெஸ்ஸியும் செலீனும் ஒருவரையொருவர் மணந்துகொண்டுவிட்டனர் என்று அறிகிறோம். இருந்தாலும் இருவருக்கும் இப்போது புதிய மனச்சிக்கல்கள். ஜெஸ்ஸிக்கு அவனது முதல் மனைவியோடு பிறந்த மகன் ஹாங்க்கைப் பற்றிய கவலை. செலீனுக்கோ ஒரு நல்ல வேலையில் இல்லாதது பற்றிய கவலை. இருவரின் நண்பர்களும், இருவரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். அங்கே இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொள்வதுதான் இந்தப் படம்.
காலத்தின் பின்னால் திரியும் மாபெரும் கலைஞன் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். தற்போது ஹாலிவுட்டில் ஏன் உலகிலேயே சிறந்த இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவரது படங்களைப் பார்த்தால், மனித உணர்வுகளை எப்படியெல்லாம் இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பாடம் கிடைக்கும்.
தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com