இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: அமலா பாலின் ‘கடாவர்’

செய்திப்பிரிவு

அமலா பால் தன்னுடைய 30-வது பிறந்த நாளை ‘கடாவர்’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார். அவரே தயாரித்து, நடிக்கும் இப்படத்தில், தடயவியல் அறுவைசிகிச்சை நிபுணராக கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ‘இதற்காக சம்பந்தபட்ட துறைசார் மருத்துவ நிபுணரிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு நடித்திருக்கிறேன்’ என்கிறார். அனூப்.எஸ். இயக்கியிருக்கும் இதில், அதுல்யா ரவி, ரித்விகா என மேலும் இரண்டு கதாநாயகிகளும் உண்டு.

‘எனிமி’க்கு வரவேற்பு!

தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’, ‘ சூர்யாவின் ‘ஜெய்பீம்’, விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் ‘எனிமி’, சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. நான்கு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில். ‘கனவுகளுடன் முதலீடு செய்து உருவாக்கிய திரைப்படத்துக்கு சரிவரத் திரையரங்குகள் கிடைக்கவில்லை’ என ‘எனிமி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் கவலை தெரிவித்து பதிவிட்ட ஆடியோ வைரலானது. இதையடுத்து ‘எனிமி’க்கு தற்போது கணிசமான எண்ணிக்கையில் திரையரங்குகளும் காட்சி நேரங்களும் ஒதுக்கப்பட்டிருப்பதில் தயாரிப்பாளர் நிம்மதியடைந்திருக்கிறார்.

கைரேகை நிபுணர்!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடித்து முடித்திருக்கும் பன்மொழித் திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் ‘வலிமை’ படத்துடன் போட்டிபோடக் காத்திருக்கிறது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைரேகை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய பிரபாஸ், படத்தின் டீசரையும் வெளியிட்டிருக்கிறார். ஆந்திரா, தெலுங்கானாவில் அள்ளிக்கொண்டுபோகிறது டீசர்.

கமலைக் கவர்ந்த நடிகர்!

ஐம்பதுக்கும் அதிகமான மலையாளப் படங்களில் எதிர்மறை, குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் செம்பன் வினோத் ஜோஸ். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ ஜல்லிக்கட்டு’, ‘ட்ரான்ஸ்’ ஆகிய மலையாளப் படங்களுக்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார். இவரை, தன்னுடைய ‘விக்ரம்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். செம்பன் வினோத் ஜோஸ் ஏற்கெனவே, விஜய் மில்டனின் ‘கோலிசோடா 2’ படத்தில் ஒரு சிறிய வில்லன் வேடத்தில் வந்து மிரட்டியவர்.

SCROLL FOR NEXT