சூர்யாவுடன் இயக்குநர் த.செ.ஞானவேல் 
இந்து டாக்கீஸ்

உங்கள் தூக்கம் பறிபோகும்! - சூர்யா பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

சமூகப் பிரச்சினைகளைத் தான் நடிக்கும், தயாரிக்கும் திரைப்படங்களின் வழியாகத் தொடர்ந்து முன்னெடுப்பவர் சூர்யா. சினிமா வழியே சொல்வது எளிது, அதைச் செய்வது கடினம் என்கிற விமர்சனத்துக்கு வெளியே நிற்பதிலும் விதிவிலக்கான மாஸ் ஹீரோ. அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் செயல்பாடுகள், சமூக விழிப்புணர்வு விளம்பரங்களில் சளைக்காமல் பங்கேற்பது போன்றவை அதற்கு உதாரணம். அதேபோல், அநீதிகளுக்கு எதிராக, திரையுலகிலிருந்து எழும் முதல் உரிமைக்குரலும் இவருடையதாகவே இருக்கிறது. தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில், எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடும் வழக்கறிஞர் சந்துருவாக அவதாரம் எடுத்திருக்கிறார் சூர்யா. வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடியில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நமக்களித்தப் பேட்டியிருந்து ஒரு பகுதி...

படத்தில் நீங்கள் ஏற்றுள்ள வழக்கறிஞர் கதாபாத்திரம் எப்படிப்பட்டது.. இது கௌரவக் கதாபாத்திரமா?

படம் முழுவதும் பயணிக்கிறேன். இருபது நிமிடம் வந்துவிட்டுப் போகிற கதாபாத்திரம் கிடையாது. ஒரு வழக்கறிஞர், அல்லது நீதிபதி, தங்களுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகளில் பங்கெடுத்து அவற்றை முடித்து வைக்கிறார்கள். ஆனால், நம்முடைய பெருமைகளில் ஒருவரான நீதிபதி கே. சந்துரு, 1 லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இது ஏதோ ஒரு புள்ளிவிவரம் அல்ல. நீதிமன்ற வரலாற்றில் இது அசாதாரணமான சாதனை. குறிப்பாகச் சமூக நீதியும் சமத்துவமும் எளிய மக்களிடமிருந்து எப்படி விலக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தன்னுடைய பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் சந்துரு. அந்தத் தீர்ப்புகள் ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையில் விடிவையும் வெளிச்சத்தையும் கொண்டுவந்திருக்கின்றன. சினிமாவில் நாம் ஹீரோயிசத்தைப் பார்த்திருப்போம். ஆனால், உண்மையான ஹீரோயிசம் என்பதை, நமக்குப் பக்கத்தில் இருக்கும் சந்துரு போன்ற சாதனை நாயகர்கள் வழியேதான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காவே அவரது வாழ்க்கையைக் காட்டவேண்டும் என்று நினைத்தோம். அதற்கு அவர் அனுமதி அளித்தது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன்.

இது அவருடைய வாழ்க்கை வரலாறா?

இல்லை. அவருடைய சட்டப் போராட்ட வாழ்க்கையில் ஒரு வழக்கை மட்டும் முன்னிலைப்படுத்தும் அதேநேரம், தனியொரு மனிதராக சட்டதை அவர் எவ்வாறு ஆயுதமாக்கினார் என்பதை எடுத்துக்காட்டும் உண்மையின் வரலாறு.

இது 90-களில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். காவல்துறையால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு அவருடைய தொலைந்துபோன வாழ்க்கையை சட்டத்தின் வழியாக சந்துரு எப்படி மீட்டெடுத்துக் கொடுக்கிறார் என்பதே கதை. இந்தக் கதையை நாங்கள் எடுத்துக்கொண்டதற்கு காரணம், சந்துரு சாரின் முன்மாதிரி நீதிமன்ற வாழ்க்கையைக் காட்டுவதற்கு மட்டுமல்ல, ஒரு சாமானியப் பழங்குடியினப் பெண்ணுக்கு என்ன நடந்தது? மாநிலத்தின் தலைநகரிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் அப்பெண்ணுக்கு, நீதிமன்றம் செல்வதும் சட்டப்போராட்டம் நடந்துவதும் எவ்வளவு எட்டாத உயரத்தில் இருக்கிறது? முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஏழை, எளிய பெண்ணுக்காகப் போராட ஒருவர் இறுதிவரை எப்படி உறுதியாக நின்றிருக்கிறார் என்பதைச் சொல்லும் படம். அநீதி இழைக்கப்படும்போது அமைதி காப்பது மிக அவலமானது. அந்த அமைதியை உடைத்தெறிந்து ஒருவர் குரல்கொடுக்கும்போது அது என்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதை ‘ஜெய் பீம்’ சொல்லும். படம் பார்த்து முடித்ததும் உங்கள் தூக்கம் பறிபோகும்.

திரைப்படங்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கான ஒரு வழி என்று ஓடிடி தளங்களைப் பார்க்கிறீர்களா?

ஓடிடி என்றல்ல; அது எந்த பிளாட் ஃபார்மாக இருந்தாலும் நம்முடைய தணிக்கையைத் தாண்டித்தானே நமது படத்தைக் கொடுக்கிறோம். நமக்கென்று ஒரு தார்மிக சுயதணிக்கை தேவை என்று நினைப்பவன் நான். இந்தப் படத்தை நாங்கள் தொடங்கியது 2 வருடங்களுக்கு முன்பு. கரோனாவின் முதல் ஊரடங்கு தொடங்கும்முன், இருளர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று படப்பிடிப்பைத் தொடங்கினோம். பெரும் வாதைகளை அனுபவித்த அந்த மக்கள், குறிப்பிட்ட அந்த வழக்கைப் பற்றித்தான் படமாக்குகிறோம் என்று தெரிந்ததும் ‘இங்கே இருக்காதீர்கள். தயவுசெய்து கிளம்புங்கள்’ என்று பதறிப்போய் எங்களை அனுப்பிவைத்துவிட்டார்கள். அதிலேயே அவர்களுடைய வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பிறகு இரண்டாவது ஊரடங்கில் படப்பிடிப்பை தொடர்ந்தோம்.. அதில் நானும் கரோனா தொற்றுக்கு ஆளாகி, ஆக்ஸிஜன் வைக்கிற அளவுக்குச் சென்று திரும்பினேன். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் படம் தற்போது வந்திருக்கிறது. 3-வது அலை வருமா, வராதா எனத் தெரியாத நிலையில் செய்துகொண்டதுதான் இந்த ஓடிடி ஒப்பந்தம்.

படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகட்டும், ராஜகண்ணுவாக நடித்துள்ள மணிகண்டன் ஆகட்டும், செங்கேணியாக நடித்த லிஜோமோள் ஜோஸ் ஆகட்டும், உழைப்பென்றால் அப்படியொரு உழைப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதை மக்களிடம் எப்படிச் சரியாகக் கொண்டு சேர்ப்பது என்று நினைத்தபோது மூன்றாம் அலை பற்றிய குழப்பமான சமயத்தில் ஓடிடியே சரி என்று முடிவுசெய்தோம். ஆனால், இப்போது கரோனா நமது கட்டுக்குள் வந்துவிட்டதால், திரையரங்குகள் மீட்சி அடைந்திருக்கின்றன. மக்கள் தைரியமாக, குழந்தைகளோடு திரையரங்குகளுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். என்னுடைய அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். திரையரங்குகளில் கூட்டமாகக் கூடி ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைபோன்ற மகிழ்ச்சியும் ஆராவாரமும் வேறு எதிலும் கிடைக்காது. அதேநேரம்.. திரையரங்குகள் எப்படி பொழுதுபோக்கின் ஒரு அங்கமோ, அப்படியே ஓடிடியும் மக்களிடம் செல்வாக்கான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதற்கென்ற உள்ளடக்கத்துடன் படங்கள் தயாரிப்பு அதிகரிக்குமே தவிர குறையாது. இரண்டுமே சிறப்பாக இருக்கும்.

‘சூரரைப் போற்று’ படத்தில் ஏர்டெக்கான் கோபிநாத், இதில் நீதிநாயகம் சந்துரு என மாற்றம் ஏற்படுத்திய மனிதர்களின் கதைகளை நாடிச் செல்ல என்ன காரணம்?

நாம் கொண்டாட வேண்டிய நமக்கான ஆளுமைகள் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நாம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொழுதுபோக்குப் படங்களில் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுப்பது ஒருவிதம். எனக்கு அந்த மாதிரியான படங்களும் பிடிக்கும். ஆனால், ரத்தமும் சதையுமான ரோல் மாடல்களை திரையில் பிரதிபலிப்பது இன்னும் எனக்கு மன திருப்தியைக் கொடுக்கிறது. எங்களுக்கு எந்தப் புகழ் வெளிச்சமும் பாராட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சமூக மாற்றத்துக்கு சத்தமில்லாமல் பெரும்பங்காற்றியபடி வாழும் ஆளுமைகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடுவது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். அதற்குத் திரைப்படத்தைப் பயன்படுத்துவதால், இவர்களை அறிந்துகொள்ள முடியாமல் போனவர்களுக்கு அது பெரும் உத்வேகமாக அமையும். ‘சூரரைப் போற்று’ பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது வெளியானது. அப்போது படத்தைப் பார்த்த ஆயிரக்கணக் கானவர்கள், அவர்களுடைய சொந்தப் பிரச்சினைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். ‘கரோனாவால் எங்கள் தொழிலை இழந்தோம்; வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்து இடிந்துபோனோம். அப்போது கோபிநாத்தின் வாழ்க்கையைப் படத்தில் பார்த்து, ‘தனியொரு மனிதனுக்கு இவ்வளவு சக்தியா! இது போதும்...! எவ்வளவு கடன், நஷ்டம் என்றாலும் இனி மீண்டு வந்துவிடுவோம். அவ்வளவு நம்பிக்கையை உங்கள் படம் கொடுத்துவிட்டது’ என்று சொன்னார்கள். நீதிபதி சந்துரு இன்னும் பல மடங்கு தாக்கத்தைத் தரக்கூடிய ஆளுமை. ஒரு வழக்கறிஞராக, ஒரு நீதிபதியாக எவ்வளவு மாற்றங்களை உருவாக்க முடியும் என்று காட்டியவரை திரையில் கொண்டுவருவது பெரும் மனமாற்றங்களைக் கொண்டுவரும். ஒரு சிறந்த திரைப்படம் செய்யவேண்டியது அதைத்தான்.

SCROLL FOR NEXT