இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: ஓவிய சினிமாவாகும் வான்கா!

ஷங்கர்

அவன் வாழ்ந்தபோது அவனது கலை மேதைமை மதிக்கப்படவில்லை. வறுமையாலும் புறக்கணிப்பாலும் அலைக்கழிக்கப்பட்டுத் தனது அகால மரணத்துக்குப் பிறகு உலகளவில் இன்றும் கொண்டாடப்பட்டுவரும் அவன், டச்சு ஓவியன் வின்சென்ட் வான்கா. வின்சென்ட் வான்காவின் ஓவியங்களைப் பார்க்காதவர்கள்கூட, அவன் தனது காதலிக்காகக் தனது காது மடலை அறுத்துக் கொடுத்த கதையைக் கேள்விப்பட்டிருப்பார்கள்.

வான்காவின் முழு வாழ்க்கைச் சரிதம், ‘லவ்விங் வின்சென்ட்’ என்ற பெயரில் முழுநீள அனிமேஷன் திரைப்படமாகத் தயாராகிறது.

முழுக்க முழுக்கத் தைல வண்ண ஓவியங்களின் வரிசை வழியாக உலகிலேயே முதல்முறையாகத் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் என்றப் பெருமையைப் பெறப்போகும் அனிமேஷன் சினிமா இது. வின்சென்ட் வான்காவின் ஓவிய பாணியிலேயே நூற்றுக்கணக்கான ஓவியர்களைப் பணியில் அமர்த்தி வரையப்பட்ட ஓவியங்களைப் பயன்படுத்தி இத்திரைப்படத்தை அணு அணுவாக அசைவூட்டம் செய்திருக்கிறார்கள். சத்தமில்லாமல் நிகழ்ந்திருக்கும் இந்தச் சாதனைத் திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர்கள் ஹக் வெல்ச்மேன் மற்றும் டோரோடா காபியலா. ஒரு நொடிக்கு 12 தைல வண்ண ஓவியங்கள் அனிமேஷனுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள ‘லவ்விங் வின்சென்ட்’ இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.

“வான்காவின் வாழ்வையும் அவரது சர்ச்சைக்குரிய மரணத்தையும் விசாரிக்கும் திரைப்படம் இது. உலகம் முழுவதும் விரும்பப்படும் அரிதான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான வான்காவின் ஓவியங்கள் மற்றும் அதில் படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களையும், வான்காவின் வாழ்க்கையில் பங்குபெற்ற முக்கியமான நபர்களையும் சுற்றி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மரணத்தை நோக்கி அவரை உந்தித் தள்ளிய சம்பவங்கள் இத்திரைப்படத்தில் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக மறுபடைப்பு செய்யப்பட்டுள்ளன” என்கிறார் டோரோடா காபியலா.

வெல்ச்மேன், புதுமையான திரைப்பட ஆக்கங்களுக்கு ஏற்கனவே அங்கீகாரம் பெற்றவர். இவரது அனிமேஷன் குறும்படமான ‘பீட்டர் அண்ட் தி உல்ஃப்’ ஆஸ்கர் விருது பெற்றது. அனிமேஷன் தொழில்நுட்பமும், பழைய தைல வண்ண ஓவியங்களை வரைவதில் நிபுணத்துவமும் பெற்றவர் மற்றொரு இயக்குநரான டோரோடா காபியலா. இந்த இருவரும் இணைந்து 21-ம் நூற்றாண்டு சினிமா சாத்தியங்களைப் பயன்படுத்தி வின்சென்ட் வான்காவின் வாழ்க்கையை அற்புதமான திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை அதன் ட்ரைலரே நிரூபிக்கிறது.

வானகா தனது அன்புக்கினிய சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாகவே அவரது வாழ்க்கைக்கு நெருக்கமாகப் போய் இத்திரைக்கதையை இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர்.

“ஓவியங்கள் தவிர உலகிடம் பேசுவதற்கு வேறு ஒன்றுமே இல்லை” என்று தனது கடிதமொன்றில் வின்சென்ட் வான்கா எழுதியுள்ளான். இந்த வார்த்தைகளை உந்துதலாகக் கொண்டு இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இயக்குநர்கள். ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் தயாரித்து, திரைப்பட மேதை அகிரா குரோசோவா இயக்கிய ‘ட்ரீம்ஸ்’ திரைப்படத்தில் தனது ஓவியங்கள் வழியாக வான்கா நடந்து செல்வதுபோல் உருவாக்கியிருப்பார்.

ஒரு மகத்தான ஓவியக் கலைஞன் மீது கொண்ட பிரியத்தின் விளைவாகவே பெரும் உழைப்புடன் ‘லவ்விங் வின்சென்ட்’ உருவாகியிருக்கிறது.

SCROLL FOR NEXT