‘ஹேப்பி டேஸ்' படத்தில் நடித்த தெலுங்கு ஹீரோ நிகில் சித்தார்த், ‘சுப்ரமணியபுரம்' ஸ்வாதி இணைந்து நடிக்கும் கார்த்திகேயன் தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்டுவரும் படம். எம். சந்து இயக்கும் இந்தப் படத்துக்கு இசை சேகர் சந்திரா. இவரும் இளம் தெலுங்கு இசையமைப்பாளர்தான்.
பாடல்கள் நா.முத்துகுமார், மணிஅமுதவன், நந்தலாலா.
‘வெண்ணிலா’ மெலடிப் பாடலுக்கு நரேஷ் ஐயரின் கியூட் குரலைத் தேர்வு செய்ததன் மூலம், அது ஹிட் ஆவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சேகர் சந்திரா. ஆங்காங்கே சித்ராவின் குரலை ஞாபகப்படுத்தும் சின்மயியின் இனிமையான குரலை ‘தாண்டவே’ பாடலில் கேட்கலாம். இரண்டரை நிமிடங்களே ஒலித்தாலும் இந்தப் பாடலும் கவர்கிறது.
ஹீரோவின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் உணர்வை ‘கண்களும் கண்டதில்லை’ பாடலில் ஹரிசரணின் குரலில் உணர முடிகிறது. அவரே பாடியிருக்கும் ‘பெண்ணே உன்னால் இன்றே’ மேற்கத்திய பாணியில் அமைந்த பாடல். ஆனால், பெரிதாக அசத்தவில்லை. ரஞ்சித் பாடியுள்ள ‘தேடாமல்’ பாடலும் அந்த ரகம்தான்.
வழக்கமாக தெலுங்குப் பாடல்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு ஒரு பிம்பம் இருக்கும். சேகர் சந்திரா பாடல்கள் அந்த லிஸ்ட்டில் சேராமல், வித்தியாசமாக இருப்பதே வெற்றி என்று சொல்லலாம்.