இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: குடும்பங்களின் திருவிழா!

செய்திப்பிரிவு

வரிசைகட்டும் பேய் படங்களுக்கு நடுவே, ‘உடன்பிறப்பே’, ‘வினோதய சித்தம்’ என்று ஆறுதலாகக் குடும்பப் படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியிருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படமும் இணைந்துகொண்டிருக்கிறது. சகோதரர்களின் பாசத்தை உடைத்து, அவர்களை எதிரிகளாக மாற்ற நினைப்பவர்களுக்கு உறவுகள் எப்படி தங்களுடைய செயல்களின் வழியாகப் பதிலடி கொடுக்கிறார்கள் என்பதை, ஓர் உண்மைச் சம்பவத்திலிருந்து கதையாக்கியிருக்கிறாராம் இயக்குநர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் 4 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. கௌதம் கார்த்திக், இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் குடும்ப உறுப்பினர்களாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்!

நானி வருகிறார்!

‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’, ‘வெப்பம்’ படங்களின் வழியாக தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நானி. தெலுங்கில் 100 கோடி வசூல் கிளப் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். படப்பிடிப்புக்கு தனி விமானத்தில் பறக்கும் இவர், ஒரு இடைவேளைக்குப் பிறகு ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான மூன்று கதாநாயகிகள் இந்தப் படத்தில் நானியுடன் நடித்திருக்கிறார்கள். சத்துள்ள கதைகளில் நடிப்பதையே அதிகம் விரும்பும் நானியின் இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

மீண்டு வந்த நாயகி!

‘மா', 'லட்சுமி' என அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். பின்னர், நயன்தாரா நடித்த ‘ஐரா’ என்கிற படத்தை இயக்கினார். தற்போது, கலையரசன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மிர்னா. நடிகர் அபி சரவணனுடன் திருமண சர்ச்சையில் சிக்கி மீண்ட அதிதிதான் தன்னுடைய பெயரை மிர்னா என மாற்றிக்கொண்டு ‘மீண்டு’ம் நடிக்க வந்திருக்கிறார். ஒரு அசாதாரண சூழலில், தனிமையில் இருக்கும் பெண்ணைச் சந்திக்கும் அப்பாவி இளைஞன், அதன்பிறகு சந்திக்க நேரும் அடுக்கடுக்கானப் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக விவரிக்கிறதாம் இந்தப் படம். இதிலும் தனது குறும்படங்களைப் போலவே கலாச்சார அதிர்ச்சிகள் உண்டு எனக் கூறியிருக்கிறார் இயக்குநர்.

ஆஸ்கரில் யோகிபாபு!

சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவுக்கு ஆண்டுதோறும் பல இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு, வித்யா பாலன் நடித்த 'ஷேர்னி', விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’ ஆகிய இரு இந்திப் படங்கள், மலையாளத்திலிருந்து மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’ தமிழிலிருந்து மடோன் அஷ்வின் இயக்கிய ‘மண்டேலா’ உட்பட 14 படங்கள் ஆஸ்கர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வாக்குரிமையை விற்கும் வாக்காளர்கள், தேர்தல் அரசியலில் அதை விலைகொடுத்து வாங்குபவர்கள் என இருதரப்பையும் பெரும் பகடியுடன் முன்வைத்த படம் ‘மண்டேலா’ இதில் யோகிபாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

SCROLL FOR NEXT