அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர் ஐஸ் க்யூப். இவர் நடித்து டிம் ஸ்டோரி இயக்கிய காமெடித் திரைப்படம் ‘பார்பர் ஷாப்’. இது 2002-ல் வெளியாகி பெரிய வெற்றிபெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் பார்பர் ஷாப் வரிசையில் மேலும் இரு படங்களான ‘பார்பர் ஷாப் 2: பேக் இன் பிஸினெஸ்’, ‘பியூட்டி ஷாப்’ ஆகியவற்றை ஐஸ் க்யூப் தயாரித்தார். இதில் ‘பியூட்டி ஷாப்’ படத்தில் அவர் நடிக்கவில்லை. இப்போது இந்த வரிசையின் இறுதிப் படமும் நான்காம் படமுமான ‘பார்பர்ஷாப்: த நெக்ஸ்ட் கட்’ என்னும் படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரல் 15 அன்று அமெரிக்காவில் வார்னர்ஸ் ப்ரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட, அதேநாளில் இந்தியாவிலும் வெளியாகிறது.
இதுவரை வெளிவந்த பார்பர்ஷாப் வரிசைப் படங்களைவிட ரசிகர்களைச் சிரிக்கவைக்கும் படமாக இந்தப் படம் அமையுமென இதன் இயக்குநர் மால்கம் டி லீ கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வழக்கமான பார்பர்ஷாப் படங்களில் நடித்திருக்கும் ஐஸ் க்யூப், ஜாஸ்மின் லுயஸ், ஆண்டனி ஆண்டர்சன் உள்ளிட்ட நடிகர்களுடன் புதுமுக நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். எனவே நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது என இயக்குநர் உத்திரவாதம் தருவது படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
கடுமையாக உழைத்து வாடிக்கையாளர் களைப் பிடித்த பார்பர் ஷாப்பையும் அதில் பணியாற்றும் ஊழியர்களையும் கடைக்கு அருகில் வசிப்போர், அந்தத் தெருவில் சுற்றித் திரியும் பிற குழுக்கள் ஆகியோரிடமிருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடி கதை நாயகனுக்கு உருவாகிறது. நாயகனுடன் இணைந்து பார்பர் ஷாப்பில் பணியாற்றும் ஊழியர்களும் இந்தத் ‘தலையாய’ பிரச்சினையை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து கலகலப்பான படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்துக்கு முதலில் ‘பார்பர்ஷாப் 3’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் பெயரை மாற்றிவிட்டதாக இயக்குநர் கடந்த நவம்பரில் ஒரு விருது நிகழ்ச்சியில் அறிவித்தார். உண்மையில் ஐஸ் க்யூப் நடித்த பார்பர் ஷாப் படத்தில் இது மூன்றாம் படம்தான். முதலிரண்டு படங்களிலிருந்து இந்தப் படம் எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பார்பர் ஷாப் பட வரிசையின் இறுதிப் படம் என்பதால் அந்த ஆர்வம் மேலும் சற்று கூடியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளைப் படம் காப்பாற்றப் போகிறதா காலிசெய்யப் போகிறதா என்பதுதான் தெரியவில்லை.