‘‘விவசாயம் பற்றி சினிமாவுல எடுக்குறதும், விவசாயம் சம்பந்தமா பேசுறதும் இப்போ ஃபேஷன் ஆகிடுச்சு. விதவிதமான விவசாயப் படங்கள் வந்துடுச்சு. இந்தச் சூழல்ல ஒரு விவசாயியுடைய மகனா நான் எடுக்கிற படங்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.’’ என்று புது மாப்பிள்ளைக்கே உரிய பூரிப்புடன் சொல்கிறார் சதீஷ் பெரியண்ணா.
திருமணம் ஆகி 20 நாள் கூட ஆகாத நிலையில், மனைவியை ஊரில் விட்டுவிட்டு, முதல் படத்தை இயக்கும் முனைப்பில் தயாரிப்பாளர்களை அணுகும் படலத்தைத் தொடங்கியிருந்தவர் தன்னுடைய பின்னணி குறித்துப் பகிர்ந்தார்.
‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், கடத்தூர் கிராமம்தான் சொந்த ஊர். சினிமாதான் என் உலகம்னு முடிவு பண்ணதும் பள்ளிப் படிப்பை முடிச்ச கையோட சென்னைக்கு வந்துட்டேன். கோடம்பாக்கம் திரைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். வழக்கமா இயக்குநர்கள் மூலமோ அல்லது துணை, இணை இயக்குநர்கள் வழிகாட்டலில் உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கும். எனக்கு நடந்தது தலைகீழ் விகிதம். எடிட்டர்கள்தான் எனக்கு ஆதரவு கொடுத்து, வளர்த்துவிட்டாங்க.
பாரதிராஜா சார் படங்களைச் செதுக்கிய எடிட்டர் திருநாவுக்கரசு சார் மூலமா நடிகர் குமரிமுத்துவின் மருமகன் கௌரி ஷங்கர்கிட்ட ‘பேசுவது கிளியா’ படத்துல உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அப்புறம் விஜயகாந்த் சார் படங்களில் கச்சிதம் காட்டும் எடிட்டர் பி.எஸ்.வாசு சார் மூலம் ‘பாளையங்கோட்டை’ படத்துல உதவி இயக்குநரா வேலை செய்தேன்.
‘காதலில் விழுந்தேன்’ இயக்குநரின் படமான ‘சகுந்தலாவின் காதலன்’,சீனுராமசாமி சாரின் ‘இடம் பொருள் ஏவல்’,‘தர்மதுரை’, ‘மாமனிதன்’, அமீரின் ‘சந்தனத்தேவன்’, கார்த்திக் தங்கவேலுவின் ‘அடங்க மறு’ன்னு பல படங்கள்ல பெரிய அனுபவங்கள் கிடைச்சது நானே எதிர்பார்க்காதது. ’’ என்று கொட்டினார்.
குருநாதர்களிடம் கற்றுக்கொண்டது குறித்துக் கேட்டால், ''ஒரு கதைக்கு, செயற்கைத்தனம், அந்நியத்தன்மை இருக்கவே கூடாது. பெரிய அளவுக்கு செட் போட்டு, கூட்டத்தை உருவாக்கி பில்டப் தரக்கூடாது. சாதாரண விஷயமா இருந்தாலும் அதை உணர்வுபூர்வமாச் சொல்ல முடியும். இதுக்கு செலவு தேவையில்லை. மனிதர்களோட மனசுதான் தேவை என்பதை சீனுராமசாமி சார்கிட்ட கத்துக்கிட்டேன்.
கார்த்திக் தங்கவேலு சாரிடம் கமர்ஷியல் படம் பண்ற வித்தையைக் கத்துக்கிட்டேன். 5 நடிகர்களுக்காக திட்டமிட்ட காட்சியில் 3 பேர் மட்டுமே வந்திருந்தாலும் ரெண்டு பேர் வரலையேன்னு கவலைப்படாம ஷாட் வைக்கத் தெரியணும். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஷாட் ஆர்டரை முன் பின் மாற்றி மாற்றி படம் பண்ற சுவாரஸ்யத்தையும் ஆக்ஷன் காட்சிகளை லாவகமா எடுக்கிற விதத்தையும் கத்துக்கிட்டேன்.
தான் எடுக்கும் காட்சியில் ஒரு நடிகரின் உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனை என அனைத்தும் தன் மனதில் வைத்திருக்கும் கதாபாத்திரமாக வரும் வரை எவ்வளவு டேக் வேண்டுமானாலும் அமீர் சார் எடுப்பார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எதற்கும் சமரசம் ஆகாமல், அதேபோல் அனைத்துத் துறைகளிலும் , படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஆளுமையாகப் பணியாற்றுவது எப்படி என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன்'' என்கிறார்.
இன்னைக்கு எல்லோரும் நல்ல கதைகளோடு வந்திடுறாங்க. ஆனால், திரைக்கதையில் சொதப்பி விடுகிறார்களே என்று கேட்டால், அதற்கும் அழகாக பதில் சொன்னார்.
‘‘எழுத்தாளர்களைப் பொறுத்தவரைக்கும் நிறைய புத்தகங்களைப் படிப்பதன் மூலம் எப்படி எழுதுவதுங்கிற கலையைத் தன்னையும் அறியாம கத்துக்குவாங்க. அதே மாதிரி உதவி இயக்குநர்களும் நிறைய படங்கள் பார்ப்பதன் மூலம் திரைக்கதையின் நுட்பங்களைக் கத்துக்க முடியும். புதிய நுட்பங்களை, உத்திகளை உருவாக்கவும் முடியும்.
முக்கியமா க்ளிஷே காட்சிகளைத் தவிர்க்கணும். க்ளிஷே காட்சிகளைத் தவிர்க்க அந்தக் காட்சியை எப்படி வேற மாதிரி எழுதலாம், எடுக்கலாம்னு குறைஞ்சது 10 வழிகள்ல யோசிச்சு எழுதுறேன். இப்படி எல்லோரும் முயற்சி பண்ணா வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கும்.
உங்களுக்குப் பிடிச்ச 5 படங்களைப் பாருங்க. அப்படங்களின் திரைக்கதைகளைப் படிங்க. இயக்குநரும், நடிகர்களும் எப்படி புரிஞ்சு என்ன மாதிரி நடிச்சிருக்காங்கன்னு கவனிங்க. மீண்டும் மீண்டும் பார்த்து குறிப்பெடுங்க. கூறு போட்டு ஆராய்ச்சி பண்ணுங்க. அந்த அனுபவம் எத்தனை சிறந்த பயிற்சி வகுப்பிலும் கிடைக்காது.
இன்னும் வெளிப்படையா, ஆழமா, அழுத்தமா சொல்லணும்னா ஆங்கிலப் படங்கள் பார்த்துட்டு மேக்கிங் செம்மன்னு ஆச்சரியப்படுறதைக் காட்டிலும் நம்மோட மண்ணின் மகத்தான மனிதர்கள், கலாச்சாரத்தின் வேர்கள் பற்றி கதைகள் பண்ணனும். அவை நிச்சயம் ஜெயிக்கும். ஜெயிக்க வைக்கும். திரைக்கதை வடிவம் தாண்டி கொண்டாட வைக்கும். நான் அந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்” என்கிறார் கிராமத்தில் தன் வேர்களைக் கொண்ட சதீஷ்.
''என் நான்கு நண்பர்கள் என்னை எப்படியும் ஜெயிக்க வெச்சிடுவாங்க. அதனால எனக்கு எந்தக் கவலையும் இல்லை'' என்று கூறும் சதீஷிடம், யார் அந்த நான்கு நண்பர்கள் என்று கேட்டால், பொறுமை, விடாமுயற்சி, வேட்கை, பயிற்சி என்று சொல்லிச் சிரிக்கிறார். சதீஷ் சாதிப்பார் என்பதை அவரது பதிலே உணர்த்தியது.